ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173
 
இலங்கையின் பொருளாதாரக் கொள்கை நாட்டின் அபிவிருத்திக்கு பலம் சேர்க்கும்

இலங்கையின் பொருளாதாரக் கொள்கை நாட்டின் அபிவிருத்திக்கு பலம் சேர்க்கும்

* நெகிழ்வு தன்மை பொருளாதாரத்திற்கு நாணய நிதியம் வரவேற்பு
* நாணய நிதிய வதிவிடப் பிரதிநிதி கோஷி மாத்தாய்

இலங்கை கடைப்பிடித்துவரும் பொருளாதாரக் கொள்கை நாட்டில் நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மேலும் பலம் சேர்க்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை தற்பொழுது நெகிழ்வுத் தன்மையுடைய பொருளாதார கொள்கைத் திட்டவரைபை கடைப்பிடித்து வருகின்றது. இதனால் குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் உள்ளது.

இந்தக் கொள்கைத் திட்டம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில் நாட்டில் நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி கலாநிதி கோஷி மாத்தாய் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிவரும் கடன்தொகையின் இறுதிக் கட்டக் கடன்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் நோக் கில் மத்திய வங்கியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

2012ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரக் கொள்கை ஸ்திரமாக உள்ளது. இதனால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தி ருப்பதுடன், நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளது. அது மாத்திரமன்றி ஸ்திரமான நாணயக்கொள்கை, ஏற்றுமதி அதிகரித்துள்ளன. குறுகிய காலத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த ஸ்திரத்தன்மை தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டில் ஸ்திரமான பொருளாதார வளர்ச்சி கடைப்பிடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நிதியம் இலங்கைக்கு வழங்கிவந்த கடனுதவியின் எட்டாவதும் இறுதியுமான கட்ட கடனுதவிக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கைக்கு மேலும் 415 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை முழுமையாகப் பெற்றுக்கொண்ட கடனுதவி இது என்றும் கோஷி மாத்தாய் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை திருப்திகரமாக உள்ளது. நெகிழ்வுத்தன்மை யுடைய பொருளாதார கொள்கை திட்ட வரைபை இலங்கை கடைப்பிடித்து வருவதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர் ந்தால் நீண்ட காலத்துக்கு ஸ்திரமான பொருளாதார அபிவிருத்தியைக் கடைப் பிடிக்க முடியும் என்றும் அவர் குறிப் பிட்டார். அதேநேரம், இலங்கைக்கான அடுத்தக்கட்ட கடனுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தேவையேற்படுமாயின் இவ்வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வரும் என்றும் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி