இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று 24ம் திகதி நடக்கிறது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்திய அணியின் அதிரடி ஆட்டம்
இன்றைய ஆட்டத்தில் நீடிக்குமா? என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன்
எதிர்நோக்கியுள்ளனர். வீராட் கோலி, ஷெவாக், ரெய்னா, தலைவர் டோனி ஆகியோரது
துடுப்பாட்டம் இர்பான் பதான், அஸ்வின் ஆகியோரது பந்து வீச்சும் முதல் போட்டியில்
சிறப்பாக இருந்தது.
இந்திய அணி இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதால் மிகுந்த நம்பிக்கையுடன்
உள்ளது. இதே உத்வேகத்துடன் விளையாடி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணியில் மாற்றம் எதுவும் இருக்காது.
முதல் போட்டியில் இலங்கை அணி கடும் போராட்டத்திற்கு பிறகே தோற்றது. இதனால் அந்த அணி
பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. முன்னால் தலைவர் சங்கக்கார, டில்சான், தலைவர்
ஜெயவர்தன, பெரேரா, சண்டிமால் போன்ற சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர்.
இன்றைய ஆட்டமும் பகல் - இரவாக நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இரு அணிகளும் இன்று மோதுவது 136 வது போட்டியாகும். இதுவரை நடந்த 135 ஆட்டத்தில்
இந்தியா 72 போட்டியிலும், இலங்கை 51 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை
ஆனது. 11 ஆட்டம் முடிவு இல்லை.