ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173
 

இரண்டாவது இடம் கோரி சரத்பவார் போர்க்கொடி :  மத்திய மந்திரிசபை மாற்றத்தில் சிக்கல்

இரண்டாவது இடம் கோரி சரத்பவார் போர்க்கொடி :  மத்திய மந்திரிசபை மாற்றத்தில் சிக்கல்

மன்மோகன்சிங் - சோனியா ஆலோசனை

மத்திய நிதி மந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி ஆகிவிட்டதால் தனது பதவியை இராஜினமா செய்தார். இதனால் நிதி அமைச்சை பிரதமர் மன்மோகன் சிங் கூடுதல் பொறுப்பாக ஏற்றுள்ளார். மத்திய மந்திரி சபையில் ஏற்கனவே சில மந்திரிகள், பல துறைகளை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரு கிறார்கள்.

சில இலாகாக்கள் காலியாக உள்ளன. இதனால் மத்திய மந்திரி சபையை சற்று பெரிய அளவில் மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வருகிற 8ம் திகதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக மத்திய மந்திரி சபை மாற்றம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளி யானது.

அடுத்த வாரம் புதிய மந்திரிகளை பதவி ஏற்க செய்யலாம் என்று பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மந்திரி சபையில் 2வது இடம் கேட்டு திடீரென போர்க்கொடி உயர்த்தியதால் மந்திரி சபை மாற்றத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சரத்பவாரும், அவரது கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேலும் மந்திரி சபையில் இருந்து விலகினால் விவசாய இலாகாவும், கனகர தொழில் துறையும் அமைச்சர் இல்லாத காலி இடமாக மாறிவிடும். அந்த இரு பதவிகளும் மிக மிக முக்கி யத்துவம் வாய்ந்தது. ஏற்கனவே நிதி இலாகாவை யாரிடம் கொடுப்பது என்று ஆலோசித்து கொண்டிருக்கும் நிலையில் மன்மோகன் சிங்குக்கு இது திடீர் சிக்கலாகவும் தலை வலியாகவும் மாறியுள்ளது.

கூட்டணி கட்சிகளால் மிரட்டலும், சிக்கலும் அதிகரிக்கும் பட்சத்தில் பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் 8ம் திகதிக்கு முன்னதாக மத்திய மந்திரி சபையை மாற்றி அமைக்க முடியாது என்று கூறப் படுகிறது. எனவே விரைவில் மந்திரி சபை மாற்றப்படாவிட்டால், அது செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.

மந்திரி சபை மாற்றத்துக்கு ஏற் பட்டுள்ள இந்த சிக்கல் பிரதமர் மன்மோகன்சிங்கை கடும் அதிருப்திக் குள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து அவர் சார்பில் சரத்பவாரை சமரசம் செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே மந்திரி சபை மாற்றத்தின் போது தங்களுக்கு விருப்பமான இலாகாக் களை பெற காங்கிரஸ் தலைவர் களிடம் கடும் போட்டி எழுந்துள்ளது.

மத்திய உள்துறை மந்திரியாக இருக்கும் ப. சிதம்பரம் நிதி அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று தெரிகிறது. சுசீல்குமார் ஷிண்டே உள்துறைக்கு மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த மந்திரிகளிடம் உள்ள இலாகாக்களும் மாறும் என்று தெரியவந்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி