ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JULY,24, 2012

Print

 
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் உறுதி

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் உறுதி

பிரணாப் முகர்ஜி

நாட்டின் உயரிய மதிப்பு மிக்க பதவியான ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டார். ஆளும் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவு அதிகம் இருந்ததால் அவர் சுமார் 70 சதத்திற்கும் மேலாக வாக்குகளை பெற்றுள்ளார். மொத்தம் 776 எம்.பிக்களில் 28 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை.

15 எம்.பி.க்கள் செல்லாத வாக்குகளை போட்டுள்ளனர். இன்றைய தேர்தல் முடிவின்படி பிரணாப் 5 இலட்சத்து 18 ஆயிரத்து 893 மதிப்பு வாக்குகளை பெற்றுள்ளார். சங்மா 3 இலட்சத்து 73 ஆயிரத்து 116 வாக்குகளை மதிப்பு பெற்றுள்ளார். வாக்கு எண்ணும் பணி துவங்கியது.

மாலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஜனாதிபதி வெற்றி குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தார். பிரணாப் 69.3 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தார். மொத்தம் 10,39,750 வாக்கு மதிப்பில், பிரணாப்புக்கு 7,13,763 வாக்கு மதிப்பு கிடைத்தது. சங்மாவுக்கு 3,15,987 வாக்கு மதிப்பு கிடைத்தது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரணாப் கூறுகையில், நாட்டின் உயரிய பதவியில் அமர்த்தியதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய அரசியல் சட்டத்தை பாது காக்கவும், ஆபத்திலிருந்து காக்கவும் என்னால் ஆன முயற்சியை செய்வேன். கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு மாநில ங்களுக்கு சென்ற போது அனைத்து மக்களும் எனக்கு சிறப்பாக வரவேற்பு கொடுத்தனர். இந்த நாட்டிற்கு நான் கொடுத்ததை விட நாடு எனக்கு அதிகம் கொடுத்துள்ளது. நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்வேன் எனக்கு வாழ்த்து தெரிவித்த சங்மாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் நலமுடன் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக பிரணாப் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.  ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப், வரும் புதன்கிழமை (25ம் திகதி) காலை 11.30 மணியளவில் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொள்கிறார்.

பிரணாப்புடன் பிரதமர் சந்திப்பு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜியை அவரது இல்லத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவியுடன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். சோனியா ராகுல் சந்திப்பு: ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜியை அவரது இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளர் ராகுல், லோக்சபா சபாநாயகர் மீராகுமார் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

தேர்தல் நடவடிக்கையில் பாரபட்சம்: சங்மா, பிரணாப் முகர்ஜிக்கு அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த சங்மா வாழ்த்துத் தெரிவித்தார். தேர்தல் நடவடிக்கைகளில் பாரபட்சம் உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் நன்னடத்தை விதிமுறைகளை அமுல்படுத்த வேண்டும். என்னை ஆதரித்ததற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஓடிசா முதல்வர் நவீன் மற்றும் பா.ஜ.வுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். மேலும் அவர் தேர்தல் முடிவுகள் குறித்து கோர்ட் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. மத்திய அரசு ஜனாதிபதி தேர்தலுக்காக மாநிலங்களுக்கு அதிக உறுதி மொழி மற்றும் நிதி கொடுத்தது என கூறினார்.

சிதம்பரம் பெருமிதம்: பிரணாப் வெற்றி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பிரணாப் வெற்றி காங். கட்சிக்கு ஊக்கமளிக்கும். பிரணாப், ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர். எதிர்பார்த்ததை விட அதிக ஓட்டுக்கள் பெற்றுள்ளார். பிரதமர், சோனியா விரைவில் பிரணாப்பை சந்திக்க உள்ளார் எனவும் பிரணாப்பை வெற்றிபெற வைத்த கூட்டணி கட்சிகளுக்கும் மற்ற கட்சிகளுக்கும் நன்றி என கூறினார்.

கருணாநிதி வாழ்த்து: ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரணாப் முகர்ஜிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரணாப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் அவர் பத்திரிகை யாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் தி.மு.க. கலந்து கொள்ளும். யார் கலந்து கொள்வார் என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்பதால் பிரணாப், அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என கூறியுள்ளார்.

பிரணாப் பதவியேற்பு விழாவில் மம்தா: பிரணாப்புக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதியாக பிரணாப் பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என கூறியுள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் காங் தலைவர் ஞானதேசிகள் தலைமையில் காங் நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டனர். பட்டாசு வெடி த்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். ஜனாதிபதியான பிரதீபா பட்டீல் பதவி வரும் 24ம் திகதி முடிவுறுவதால் 25ம் திகதி பிரணாப் ஜனாதிபதியாக பதவியேற்பார். இவருக்கு சுப்ரீம் கோர்ட தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். முடிவுகள் அறிவிக் கப்பட்டதும், பிரதமர் மன்மோகன்சிங் காங், தலைவர் சோனியா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் சென்று வாழ்த்துத் தெரிவிக்கின்றனர்.

பதவி வகித்த ஜனாதிபதிகள் இதுவரை ஜனாதிபதியாக இருந்தவர்கள் பட்டியல் வருமாறு: டாக்டர் ராஜேந்திர பிரசாத் (1950 - 1962), டாக்டர் சர்பவள்ளி ராதாகிருஷ்ணன் (1962 - 1967), டாக்டர் ஷகீர்உசேன் (1967 - 1969), வரகாகிரி வெங்கடகிரி (1969 - 1974), டாக்டர், பக்ரூதீன் அலி அகம்மது (1974 - 1977), நீலம் சஞ்சீவரெட்டி (1977 - 1982), கியானி ஜெயில்சிங் (1982 - 1987), ஆர் வெங்கட்ராமன் (1987 - 1992), டாக்டர் சங்கர்தயாள் சர்மா (1992 - 1997), கே. ஆர். நாராயணன் (1997 - 2002), டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (2002 - 2007), பிரதீபா பாட்டில் (2007 ஜுலை 25 முதல் 2012 ஜுலை 24 வரை) இதில் டாக்டர் ராஜேந்திரன் பிரசாத் முதல் ஜனாதிபதி மற்றும் 2 முறை இந்த பதவியை வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் இந்த பதவியில் இருந்துள்ளனர். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர். வெட்கட்ராமன், டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல்கலாம் ஆகியோர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

webmanager@lakehouse.lk