2012 ம் ஆண்டின் உலகத் தொடர்பாடல் செயற்பாங்கின் தோற்றப்பாடு தொடர்பான சில ஆழமான
சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசிக்கின்றேன். தொடர்பாடலானது முக்கியத்துவம்
வாய்ந்திருந்த போதிலும் அடிக்கடி கவனத்திற் கொள்ளத் தவறப்படும் ஒன்றாகவும், தற்போது
மீண்டும் நினைவிற் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ள ஒன்றாகவும் காணப்படுகிறது.
தொடர்பாடலானது வார்த்தைக்கும், நிசப்தத்திற்குமிடையிலான தொடர்பினை கருதி நிற்கின்றது.
தொடர்பாடலின் இரு முக்கிய அம்சங்களான வார்த்தையும், நிசப்தமும் சம நிலையில்
கொள்ளப்பட வேண்டியவை. மக்களிடையே ஆழ்ந்த பிணைப்பும் நம்பகமான உரையாடலும்
எட்டப்படவேண்டின் இவை ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட வேண்டும்.
ஒன்று மாற்றி ஒன்றாக
தொடரவேண்டும். வார்த்தையும், நிசப்தமும் பரஸ்பரம் ஒன்றையொன்று ஒதுக்கித் தள்ளும்
பண்புடையனவாக மாறும்போது தொடர்பாடல் அறுந்துபோகின்றது. அல்லது செயலிழந்து போகின்றது.
இது ஒன்றில் குழப்பத்திற்கு இடமளிக்கின்றது. அல்லது உயிரோட்டமற்ற ஓர் உணர்வு
நிலையைத் தோற்றுவிக்கிறது. இரண்டும் ஒன்றையொன்று நிறைவு செய்யும்போது, தொடர்பாடலானது
பெறுமதியினையும் அர்த்தத்தையும் பெற்றுக்கொள்கிறது.
தொடர்பாடலின் மிக அத்தியாவசியமான ஒரு மூலகம் நிசப்தமாகும். நிசப்தமின்றேல்
பெறுமதிமிக்க வார்த்தைகள் நிலைபெற முடியாதவையாகி விடும். நிசப்தத்தில் எம்மை நாமே
நன்கு அறிந்துகொள்ளவும், எமக்கு நாமே காது கொடுத்துக் கேட்கவும் முடியும்.
நிசப்தத்தில் நல்ல சிந்தனைகள் பிறக்கின்றன. அவை ஆழம் பெறுகின்றன. நாம் என்ன பேச
வேண்டும் என்பதையும், ஏனையவர்களிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கின்றோம் என்பதையும்
ஐயமற அறிந்துகொள்கின்றோம்.
எம்மை நாமே எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதை நாம்
தேர்ந்தெடுக்கின்றோம. நாம் அமைதிகொள் ளும்போது ஏனையவர்கள் பேசுவதற்கும், அவர்கள்
தம்மை வெளிப்படுத்துவதற்கும் இடமளிக்கின்றோம். போதியளவு பரீட்சிக்கப்படாத எமது
சொந்த வார்த்தைகளிலேயும், எண்ணங்களிலேயும் நாம் கட்டுண்டிருப்பதையும்
தவிர்க்கின்றோம்.
இவ்வாறு பரஸ்பர உற்றுநோக்கலுக்கு இடமேற்படுகின்றது. உதாரணமாக,
அன்பு வயப்பட்ட மாந்தரிடையே சாடை காட்டுதல், முக பாவனை, அங்க அசைவுகள் போன்ற
அடையாளங்கள் மூலம் ஒருவருக்கொருவர் தம்மை வெளிக்காட்டுவதையும், மிகவும் நம்பத்
தகுந்த தொடர்பாடல் இடம்பெறுவதையும் அடிக்கடி நாம் நிசப்தத்தில் அவதானிக்க
முடிகின்றது. மகிழ்ச்சி, கவலை, துயரம் போன்றவையும் நிசப்தத்தில் பரப்பப்படக் கூடியவை.
பரிமாறப்படக் கூடியவை.
இது உண்மையில் அவைகளுக்கு ஓர் சக்திமிகு வெளிப்படுத்தும்
பாங்கினை வழங்குகின்றது. இவ்வாறு நிசப்தமானது உள்ளடக்கப்பட்ட உறவின்
இயற்கைப்பாங்கினையும், உண்மையான அளவினையும் துல்லியமாகக் காட்டுகின்ற
செவிமடுத்தலுக்கான கூர்ந்தறியும் திறனையும், ஏற்றுக்கொள்ளும் திறனையும்
வேண்டிநிற்கின்ற உயிர்த்துடிப்பான தொடர்பாடலுக்கு நிசப்தம் வழி சமைக்கின்றது.
செய்திகளும், தகவல்களும் மிகுதியாக காணப்படும் வேளையில் தனிச்சிறப்பு அல்லது
முக்கியமற்றவை அல்லது இரண்டாம் தரமானவற்றிலிருந்து தனிச் சிறப்புமிக்கவற்றை வேறு
பிரித்து அறிய வேண்டுமானால் அங்கு நிசப்தம் அவசியமாகின்றது. இது மதிப்பீடுகளினை
மேற்கொள்வதற்கும், செய்திகளை பாகுபடுத்துவதற்கும் நம்பத் தகுந்த பகிரங்கப்பட்ட அறிவு
மூலத்திற்கு வழி சமைக்கின்றது.
ஆழ்ந்த சிந்தனை மிக்கதும், பொருத்தப்பாடானதுமான
அபிப்பிராயங்களினை பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கின்றது. முதற் பார்வையில்
இணைக்கப்படாதனவாக காணப்படுகின்ற நிகழ்வுகளிடையே பிணைப்பினைக் கண்டறியவும் ஆழ்ந்த
சிந்தனை எமக்கு உதவுகிறது.
இது நிகழ்வதற்கு நிசப்தம், வார்த்தைகள், கற்பனைகள், ஒலிகள் இடையிலான நேரிய சமநிலைத்
தன்மையை ஆதரவளித்துக் காப்பாற்றுகின்ற ஒருவகை சூழல் தொகுதி ஒன்றினை, பொருத்தப்பாடான
சுற்றாடல் ஒன்றினை விருத்தி செய்ய வேண்டியது அவசியமாகின்றது.
விடை தேடப்படவேண்டிய வினாக்களினால் பெருமளவு ஊட்டம் பெற்றதாக இன்றைய தொடர்பாடல்
செயற்பாங்கு அமைந்துள்ளது. அறிவுரை, கருத்துக்கள், தகவல்கள் விடைகள் போன்றவற்றை
வேண்டி நிற்கும் அனேகமானவர்களுக்கு தொடர்பாடலின் தொடக்க நிலைப் பள்ளியாக தேடல்
இயந்திரங்களும், சமூக வலையமைப்புகளும் மாறியுள்ளன.
எமது காலத்தில் வினாக்களுக்கும் விடைகளுக்குமான ஒரு கருத்தாடலரங்காக இணையத்தளம்
விளங்குகின்றது. உண்மையில் இக்கால மக்கள் முன்னரெப்போதும் கேட்டிராத வினாக்களுக்கும்,
அறிந்திராத தேவைகளுக்கும் சொல்லடி தரும் விடைகளை அடிக்கடி வழங்குகின்றனர். நிசப்தம்
எமக்கு ஒரு பெறுமதிமிக்க பண்டமாகும்.