ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 27
நந்தன வருடம் ஆடி மாதம் 03ம் திகதி புதன்கிழமை
THURSDAY ,JULY, 19, 2012
வரு. 80 இல. 170
 
ஊவா மாகாண சபையின் செயற்திட்டங்கள் தேசிய ரீதியில் பயனடைந்துள்ளன

ஊவா மாகாண சபையின் செயற்திட்டங்கள் தேசிய ரீதியில் பயனடைந்துள்ளன

முதலமைச்சர் சiந்திர ராஜபக்ஷ

ஊவா மாகாண சபையின் செயற் திட்டங்கள் மாகாணத்தை மட்டுப்படுத்தாமல் தேசிய ரீதியில் பயனுள்ளதாக அமைந்து வருகின்றன என ஊவா மாகாண முதலமைச்சர் சiந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒரே தினத்தில் 10,000 பேருக்குக் காணி உறுதிப்பத்திரம் வழங்கியமை, வட மாகாணத்திற்கு 60 மில்லியன் ரூபா செலவில் பாடசாலையொன்றை நிர்மாணித்து வழங்கியமை போன்ற செயற்பாடுகளை தம்மால் மேற்கொள்ள முடிந்ததாகத் தெரிவித்த அவர்; நாட்டை முன்னிறுத்தி மேற்கொள்ளும் தீர்மானங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடைவது மிகக் குறைவாகவே உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

ஊவா மாகாண சபையின் மாதாந்த வெளியீடான ‘பிபிதென வெல்லஸ்ஸ’ (புத்தெழுச்சி பெறும் வெல்லஸ்ஸ) பத்திரிகையின் வெளியீட்டு நிகழ்வு நேற்று கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஊவா முதலமைச்சர் சiந்திர ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

‘பிபிதென வெல்லஸ்ஸ’ பத்திரிகை லேக்ஹவுஸ் பத்திரிகையான தினமினவுடன் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது.

நேற்றைய இந்த நிகழ்வில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பணிப்பாளர் சீலரத்ன செனரத், செயற்பாட்டுப் பணிப்பாளர் உபுல் திசாநாயக்க, பொது முகாமையாளர் அபே அமரதாச உட்பட பணிப்பாளர் சபை அங்கத்தினர்கள், லேக்ஹவுஸ் நிறுவன வெளியீடுகளின் பிரதம ஆசிரியர்கள், முக்கியஸ்தர்களுடன் ஊவா மாகாண ஆளுனர் நந்தா மத்தியூ, மாகாண சபை செயலாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மேலும் உரை நிகழ்த்திய ஊவா மாகாண முதலமைச்சர் சiந்திர ராஜபக்ஷ;

லேக்ஹவுஸ் 103 வருட வரலாற்றைக் கொண்ட ‘பத்திரிகைகளின் தாய்வீடு’ எனப் புகழப்படும் நிறுவனமாகும். இத்தகைய சிறந்த நிறுவனத்துடன் இணைந்து ‘தினமின’ பத்திரிகையின் ஊடாக ‘பிபிதென வெல்லஸ்ஸ’ வாசகர்களின் கரங்களுக்குச் செல்வது பெருமைக்குரியதாகும்.

நான் அரசியலுக்குள் நேரடியாக வந்ததும் எனது மாகாண சபையின் பின்னணி, மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள், எனக்குப் பக்கபலமாக உள்ள அதிகாரிகள், அதிகாரிகள் ஒவ்வொருவரின் தொழிற்பாடு என்ன? நிர்வகிப்பதற்கான நிதி போன்று பலவற்றை ஆய்ந்து உணர்ந்துகொள்ள சில காலம் எடுத்தது. அதற்குப் பின்னரே அபிவிருத்திகளை நடைமுறைப்படுத்துவதில் இறங்கினேன். எனது இத்தகைய விடயங்களைத் தெரியப்படுத்தவும் அதற்குப் பின்னரான எமது சாத்தியமான வேலைத் திட்டங்களை தெரியப்படுத்த, இது போன்ற செய்திப் பத்திரிகையொன்றின் அவசியம் உணரப்பட்டது.

இந்த மாதாந்தப் பத்திரிகையில் ஒரு பக்கத்தை மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்காக ஒதுக்குமாறு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத் தமதுரையில்; பத்திரிகைகளின் தாய் வீடான லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ‘தினமின’ பத்திரிகையோடு ஊவா மாகாணத்தின் ‘பிபிதென வெல்லஸ்ஸ’ மாதாந்த சிற்றிதழ் வெளிவருவது மகிழ்ச்சியே.

ஊவா வெல்லஸ்ஸ வரலாறு படைத்த மாகாணமாகும். பல வீரர்கள் பிறந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய பிரதேசம் இது. நூற்றுக்கு நூறு விவசாய மக்களைக் கொண்டு விளங்குகிறது.

அத்தகைய மாகாணத்திற்கு மிகப் பொருத்தமான அரசியல் தலைவராகவும் மக்கள் அபிமானத்தைப் பெற்றவராகவும் முதலமைச்சர் சiந்திர ராஜபக்ஷ விளங்குகிறார். அவருக்கு உறுதுணையாக ஆளுநர் மத்தியூ செயற்படுகின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்க் கட்சித் தலைவராக பதவி வகித்தபோது அவர் நாட்டுத் தலைவராக வருவதற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்தவர் சiந்ர ராஜபக்ஷ எனவும் ஆசிரிய பீடப் பணிப்பாளர் தெரிவித்தார்.

ஊவா மாகாண முதல்வர் சiந்ர ராஜபக்ஷவுடனான தமது கடந்த கால அனுபவங்களையும் சம்பவங்களையும் தமது உரையில் கொண்டு வந்து பல சுவாரஷ்யமான விடயங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். (ஸ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி