மன்னாரில் நீதிமன்று முன் ஆர்ப்பாட்டம்: பெரும் பதற்றம்: நீதிமன்றுக்கு
கல்வீச்சு; சேதம்; பலர் காயம்
மன்னாரில் நீதிமன்று முன் ஆர்ப்பாட்டம்: பெரும்
பதற்றம்: நீதிமன்றுக்கு கல்வீச்சு; சேதம்; பலர் காயம்
* அமைச்சர் ரிஷாத் கொழும்பிலிருந்து விரைவு:
* சமாதான மாநாடு; நிலைமை கட்டுப்பாட்டில்
ஸாதிக் ஷிஹான்
மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்
கல் வீச்சு நடத்தியதில் நீதிமன்றத்திற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மூன்று பொலிஸார்
காயமடைந்துள்ளனர்.
நேற்றுக்காலை 11.00 மணியளவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கல் வீச்சு
நடத்தி கலகம் ஏற்படுத்திய 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். நீதிமன்ற
வளாகத்திற்கு முன்னால் கூடியிருந்த சுமார் நூறு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும்
பொருட்டு கண்ணீர்புகை பிரயோகம் செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறை முகப்பகுதியில் அமைந்துள்ள ஜோசப்
வாஸ் நகர் மீனவர்களுடைய வாடிகளை மன்னார் உட்புக்குளம் பிரதேசத்தைச் சிலர் அடித்து
உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மீனவர்களை கைது செய்யுமாறு நீதவான் விடுத்த
உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களே
நீதிமன்றத்தின் மீது கல்விச்சு நடத்தி கலகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மூன்று
பொலிஸாரையும் காயப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் மன்னார் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ரிஷாத் மன்னார் விரைவு
இதேவேளை, மன்னார் நகரத்தில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலையினை தடுக்கும் வகையில்
கொழும்பிலிருந்து விஷேட ஹெலி மூலம் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத்
பதியுதீன் அங்கு விரைந்துள்ளார்.
மன்னார் உப்புக்குளம் மீனவர்களுக்கு சொந்தமான கோபிட்டிவாடிப் பகுதியினை, மற்றைய
பிரதேச மீனவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததை யடுத்து கருத்து
முரண்பாடுகள் காணப்பட்டு வந்தன.
இதனையடுத்து அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மன்னார் மீனவ சமாசம், கடற்றொழில்
அமைச்சின் பரிசோதகர் ஆகியோர் இதனை தீர்க்க நடவடிக்கை எடுத்தபோதும் உடன்பாடொன்றுக்கு
விடத்தல்தீவு மீனவர்கள் வராததையடுத்து சில விரும்பத்தகாத சம்பவங்களும் இடம்பெற்றன.
நேற்று காலை ஒன்று திரண்ட உப்புக்குளம் மீனவர்கள், தமது எதிர்ப்பை
வெளிப்படுத்தியதையடுத்து, பொலிஸார் அதனை தடுக்க முற்பட்டபோது கைகலப்பு சம்பவங்கள்
இடம்பெற்றன.
இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையில் மன்னார் நகரம் ஸ்தம்பித நிலையினை அடைந்தது.
நேற்று மாலை 3.00 மணிக்கு மன்னாரை சென்றடைந்த அமைச்சர் றிசாத் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோர் உப்புக்குளம் பள்ளிவாசலில் தஞ்சமடைந்திருந்த
மக்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.
பின்னர் மன்னார் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில்
உயர் மட்ட கூட்டமொன்று இடம்பெற்றது. இதில் அரச அதிபர், பிரதேச செயலாளர், இராணுவம்
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர் நவ்சீன் உட்பட பலரும்
கலந்துகொண்டனர்.