வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதில் அமெரிக்க வெளியறவுச் செயலாளர் ஹிலாரி
கிளிண்டன் சாதனை படைத்துள்ளார். 2009ம் ஆண்டில் பதவியேற்ற அவர் இதுவரை 102
நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு முன்பு எந்த அமெரிக்க செயலாளரும்
இத்தனை நாடுகளுக்குச் சென்றது இல்லை.
தனது 13 நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் வொஷிங்டனுக்கு
ஞாயிற்றுக்கிழமை அவர் திரும்பினார்.
அந்த 13 நாட்களில் அவர் மொத்தம் 43,450 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளார். இது உலகை
ஒரு முறை சுற்றி வரும் தூரத்தைவிடவும் சுமார் 3,000 கி.மீ. அதிகமாகும்.
இப்பயணத்தின் போது முதலில் ஐரோப்பா சென்ற அவர் அங்கிருந்து ஆசியாவுக்கும் பின்னர்
மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சென்றார். பிரான்ஸ், ஆப்கானிஸ்தான், ஜப்பான்,
மங்கோலியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, எகிப்து, இஸ்ரேல் என அவர் தனி விமானத்தில்
தனது குழுவினருடன் பறந்தார்.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் இதுவரை 351 நாட் கள் ஹிலாரி பயணத் தில் தான் இருந்து
ள்ளார். மொத்தம் 13 இலட்சத்து 58 ஆயிரத்து 27கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளார்.
முன்னாள் வெளியுறவுச் செயலாளர் மெட்லின் ஆல்பிரைட் 98 நாடுகளுக்கு சென்று வந்ததே
சாதனையாக இருந்தது. இப்போது ஹிலாரி 102 நாடுகளுக்கு விஜயம் செய்து அவரது சாதனையை
முறியடித்துள்ளார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.