ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 27
நந்தன வருடம் ஆடி மாதம் 03ம் திகதி புதன்கிழமை
THURSDAY ,JULY, 19, 2012
வரு. 80 இல. 170
 

கரம்பொனூர் புனித செபஸ்தியார் திருவிழா திருப்பலி கொழும்பில்

கரம்பொனூர் புனித செபஸ்தியார் திருவிழா திருப்பலி கொழும்பில்

யாழ்குடா நாட்டில் லைடன் தீவின் மத்தியில் தமிழ்ப்பற்றும், இறைபற்றும் இணைந்திருக்கும் வேளாண்மை, வியாபாரம், பல்துறை சார்ந்த மக்கள் வாழும் கிராமம் கரம்பொன். வனப்புமிக்க தென்னஞ்சோலைகள், பனந்தோப்புகள், செழுமையான செங்கதிர் வயல்கள் கொண்ட வளங்கொழிக்கும் இடமாகும்.

இக்கிராமத்து மக்கள் இறைவனால் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்ட பழம்பெரும் கத்தோலிக்க பாரம்பரியத்தை கொண்ட செழுமையும், குளுமையும் கொழிக்கும் கரம்பொன் மண்ணில் இருந்து ஆறு ஆயர்களையும் பல மதத் தலைவர்களையும், குருமார்களையும், கன்னியாஸ்திரிகளையும், கல்விமான்களையும் உருவாக்கி புகழ் சேர்த்ததன் நிமித்தம் யாழ். கிறிஸ்தவ மக்களால் ‘சின்னவத்திக்கான்’ என்று இக்கிராமம் பெருமையாக அழைக்கப்படுகிறது.

புனித செபஸ்தியார் பிரான்ஸ் நாட்டின் நற்போன் நகரில் கி.பி. 257ஆம் ஆண்டு பிறந்து இத்தாலியின் மிலான் நகரில் வளர்ந்து அழகுமிக்க வாலிபனாக திகழ்ந்தார். இவர் கிறிஸ்தவ மக்களுக்கு பெருமளவில் உதவி புரிந்ததை அறிந்த அரசன் தியோக்ளேசியன் இவரை அம்புகளால் எய்து கொல்லும்படி கட்டளையிட்டான். கி.பி.

288ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி திருமறைசாட்சியாக மரித்தார். திருச்சபையின் ஆரம்பத்திலிருந்தே கிறிஸ்தவர்கள் மத்தியில் புனிதர் வணக்கம் இருந்து வருகின்றது. புனித செபஸ்தியாரை பக்தர்கள் கொலரா, பிளேக் போன்ற தொற்று வியாதிகளின் உபத்திரவங்களின் பிடியிலிருந்து தப்புவதற்காக வேண்டி மன்றாடப்படும்.

உலகெங்கும் வாழும் கத்தோலிக்க மக்கள் ஜனவரி மாதம் 20ஆம் திகதி புனித செபஸ்தியாரின் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இருந்தும் யாழ். மாவட்டத்தின் கரம்பொன் ஊரில் வேளாண்மை, விவசாயம் தை, மாசி மாதங்களில் நடைபெறுவதனால் பங்குமக்கள் இவ்விழாவை ஆடி மாதம் 14ம் திகதி வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் மிஷனரிகள் யாழ்ப்பாணம் வந்து கத்தோலிக்கத்தை போதித்தார்கள். அக்காலகட்டத்தில் கரம்பொனில் புனித செபஸ்தியாருக்கு ஒரு சிறு குடிசைக் கோயிலாகக் கட்டி வழிபட்டார்கள். இக்காலகட்டத்தில் கரம்பெனூர் வாசிகள் பலர் கொலரா தொற்று நோயால் மரணித்தனர்.

அப்போது புனித செபஸ்தியாரின் புதுமைகளையும், மகிமைகளையும் அறிந்த பங்குமக்கள் அவரின் உருவ ச்சிலையை தோளில் சுமந்து கிராமம் முழு வதும் சுற்றி வலம் வந்ததன் நிமித்தம் புனிதரின் கிருபையாலும், அருளாலும் எல்லோரும் குணமடைந்தார்கள். புனிதரின் பக்தியும் விசுவாசமும் அதிகரித்ததினால் அவருக்கு ஒரு நிலையான கோயில் கட்ட பலர் முன் வந்தார்கள்.

தற்போது அலங்காரமாய் தோற்றமளிக்கும் புது ஆலயம் 1948ஆம் ஆண்டு அத்திவாரம் இடப்பட்டு புதிய குருசுக்கோயிலோடு இணைக்கப்பட்டு ஆலயத்தின் வெளிப்பூச்சுகளும் நிறைவு செய்யப்பட்டு 1964ஆம் ஆண்டு ஆலய வேலை முற்றுப்பெற்றது. இவ்வாலயத்தில் பக்தர்களைப் பரவசமாக்கும் ஒரு ஆளுயரமான அழகான புனித செபஸ்தியாரின் பாரிய திருச்சொரூபம் இத்தாலியிலிருந்து தருவிக்கப்பட்டு ஆலயத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது. கருணை மழைபொழிந்து பக்தர்களை புனிதர் ஆசிர்வதிக்கின்றார்.

இவ்வாண்டு கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 06ம் திகதி பங்குத்தந்தை அருட் திரு மரியதாஸ் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அன்று முதல் தினமும் ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை 15ம் திகதி காலை 7.00 மணிக்கு கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா கோலாகலமாக திருச்சொரூப பவனியுடன் நிறைவு பெற்றது.

கொழும்பு ஆலய நிர்வாக சபையினரால் கொழும்பையும் அதன் சுற்றுப்புறத்திலும் வாழும் புனித செபஸ்தியார் ஆலய பங்குமக்களுக்காகவும் பக்தர்களுக்காகவும் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வெள்ளவத்தை புனித லோரன்ஸ் ஆலயத்தில் பெருநாள் திருப்பலி ஒப்புக்கொடுத்தலும் பங்குமக்களுக்கான ஒன்று கூடலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி