ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 27
நந்தன வருடம் ஆடி மாதம் 03ம் திகதி புதன்கிழமை
THURSDAY ,JULY, 19, 2012
வரு. 80 இல. 170
 

மட்டக்களப்பு புதிய மறை மாவட்டம் புரட்டாதி முதல் தனித்து இயங்கும்

மட்டக்களப்பு புதிய மறை மாவட்டம் புரட்டாதி முதல் தனித்து இயங்கும்

ட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்க ளையும் உள்ளடக்கிய புதிய மட்டக்களப்பு மறை மாவட்டம் பரிசுத்த பாப்பரசரினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக பேரருட் திரு பொன்னையா ஜோசப் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட கத்தோலிக்கர்களும் துறவற சபைகளும் திருச்சபைக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்றே திருத்தந்தை 16வது ஆசிர்வாதப்பர் இம்மாதம் புதிய மறை மாவட்டத்தினை மட்டக்களப்பு மறை மாவட்டமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

புதிய மறை மாவட்டம் எதிர்வரும் புரட்டாதி மாதம் முதல் நிர்வாக ரீதியாக இயங்கவுள்ளதுடன் திருகோணமலை மறை மாவட்டம் தனியான மறை மாவட்டமாக இயங்கவுள்ளது. திருகோணமலை மறை மாவட்ட ஆயராக பேரருட்திரு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையவர்கள் பணியாற்றவுள்ளார்.

திருச்சபையின் வரலாற்றில் மட்டு - திருகோணமலை மறை மாவட்டம் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கியதாக கடந்த 117 வருடங்கள் தனிமறை மாவட்டமாக இயங்கி வந்துள்ளது.

அதன் ஆயராக கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் செயற்பட்டு வந்தார். தற்போது திருமலை மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அடங்கும். பதினொரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்த மறை மாவட்ட பகுதியில் ஐம்பத்தையாயிரத்து இரு நூற்றைம்பது கத்தோலிக்கர்கள் உள்ளனர்.

இருபத்தினான்கு பங்குத்தளங்களைத் தன்னகத்தே கொண்ட இப்புதிய மறை மாவட்டத்தில் முப்பத்தைந்து மறை மாவட்ட குருக்களும் தொண்ணூற்றேழு இருபால் துறவியரும் பணி செய்கின்றனர். புதிய ஆயராகப் பொறுப்பேற்கும் பொன்னையா ஜோசப் ஆண்டகை 1952 ஆம் ஆண்டு தன்னாமுனைப் பங்கில் பிறந்தார். 1980 ஆம் ஆண்டு குருவாக திரு நிலைப்படுத்தப்பட்ட இவர் 2008 ஆம் ஆண்டு ஆயராகத் திருநிலைப்படுத்த ப்பட்டுத் திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் துணை ஆயராகத் திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

புதிய மறை மாவட்டத்தின் முதல் ஆயரான மேதகு பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களையும் புதிய மறை மாவட்டத்தையும் கிறிஸ்தவ மஞ்சரி வாழ்த்துகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி