ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 27
நந்தன வருடம் ஆடி மாதம் 03ம் திகதி புதன்கிழமை
THURSDAY ,JULY, 19, 2012
வரு. 80 இல. 170
 

காங்கிரஸ் எம்.பிக்களுக்கு சோனியா அறிவுரை

காங்கிரஸ் எம்.பிக்களுக்கு சோனியா அறிவுரை

‘குடியரசுத் தலைவர் தேர்தல் நாளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அந்தக் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் மாநிலவாரியாக காங்கிரஸ் எம்.பி.க்களையும் மாநில கமிட்டிகளின் தலைவர்களையும் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

தமிழக எம்.பி.க்களுக்கு மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் ஒன்றரை மணி நேரம் முன்கூட்டியே வரும்படி சோனியா காந்தி இல்லத்தில் இருந்து அழைப்பு வந்தது.

தேர்தல் நாளில் தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் எத்தனை மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். எந்த வரிசையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், வாக்குச் சீட்டு மாதிரிப் படிவத்தைக் காண்பித்து ‘அதில் இடம்பெற்றுள்ள பிரணாப் முகர்ஜியின் பெயருக்கு எதிரில் ‘1’ எனக் குறிப்பிட வேண்டும்’ எனவும் கூறினார்.

அதனை பேனா மூலம் குறியிட்டு வாக்களிக்க வேண்டும். அந்தப் பேனாவும் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும். உறுப்பினர்கள் தங்களது பேனா மூலம் வாக்களித்தால் அது செல்லாத வாக்காகக் கருதப்படும். அதனால் கவனமாக செயல்பட்டு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். இதில் எந்தத் தவறும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சோனியா காந்தி அறிவுரை வழங்கினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி