ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 21
நந்தன வருடம் ஆனி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JULY, 12, 2012
வரு. 80 இல. 163
 

இத்தாலி செல்ல முயன்ற 54 பேர் குடிநீரின்றி மரணம்

இத்தாலி செல்ல முயன்ற 54 பேர் குடிநீரின்றி மரணம்

சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயன்ற 54 பேர் நடுக்கடலில் குடிநீரின்றி உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். எனினும் எரித்திரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் மாத்திரம் துனீஷிய கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

லிபியாவில் இருந்து ரப்பர் படகொன்றில் கடந்த ஜூன் இறுதிப் பகுதியில் 55 பேருடன் இத்தாலி செல்ல முயன்றவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

இதில் பாதிப்பேர் எரித்திரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என மீட்கப்பட்ட எரித்திரிய நாட்டவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேற்படி மீட்கப்பட்ட நபர் கூறியதாக ஐ. நா. பேச்சாளர் லோரா பொல்டரின் கூறியதாவது:-

“இந்த படகில் குடிநீர் போத்தல்களை கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாததால் பயணத்தின் ஆரம்பத்திலேயே சிக்கல்களை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார். இதனால் உடல் நல பாதிப்புக்குள்ளான பயணிகள் நீரின்மையால் மரணமடைந்துள்ளனர்” என்று ஐ. நா. பேச்சாளர் கூறியுள்ளார்.

இதில் மீட்கப்பட்ட நபர் தென் துனீஷியாவின் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் ஐ. நா. அகதிகளுக்கான முகவர் நிலையத்தின் அதிகாரிகளிடம் கூறும்போது, தமது படகு இத்தாலி கடற்கரையை அண்மித்த போது கடும் காற்று காரணமாக திசை திரும்பியது என்றும், 15 நாட்களளவில் கடலில் தத்தலித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு ஆபிரிக்காவில் இருந்து தென் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக குடியேற்றவாசிகளை ஏற்றிய சிறிய படகுகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இவ்வாறான விபத்துக்களில் இந்த ஆணடில் மாத்திரம் 170 பேரளவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி