பொதுப்பணிகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு துப்பாக்கி ஏந்திய படை வீரர்
பாதுகாப்பு
பொதுப்பணிகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு துப்பாக்கி ஏந்திய படை வீரர்
பாதுகாப்பு
மர்லின் மரிக்கார்
நுளம்பு ஒழிப்பு போன்ற பொது மக்கள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அரசாங்க
ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினர்
கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத்
தெரிவித்தார்.
நுளம்பு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுகின்ற அரசாங்க உத்தியோகத்தர்கள் கடந்த சில
தினங்களாக முகம் கொடுக்கும் அச்சுறுத்தல் மற்றும் தம்பலகாமத்தில் பொது சுகாதார
பரிசோதகர் ஒருவர் கொடூரமாக அடித்துப் படுகொலை செய்யப்பட்டமை என்பவற்றை அடிப்படையாகக்
கொண்டே இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர்
குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே
அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில் :-டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுகின்ற
அரசாங்க ஊழியர்கள் கடந்த சில தினங்களாக முகம் கொடுத்துள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பாக
ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். அதனால் அரசாங்க ஊழியர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்கு ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினரைக் கடமையில் ஈடுபடுத்துவது
குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் டெங்கு ஒழிப்பு பணியில் பொதுசுகாதார பரிசோதகர்களும், நுண்ணுயிரியல்
நிபுணர்களும் அர்ப்பணிப்புடனேயே செயற்படுகின்றனர். அவர்களது பாதுகாப்பை
உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
டெங்கின் உயிராபத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவே இவர்கள் உழைக்கின்றனர்.
அவர்களது கடமைக்கு இடையூறு விளைவிப்பதும் அவர்களைப் படுகொலை செய்வதும் ஏற்றுக்கொள்ள
முடியாத விடயமாகும்.
டெங்கு நுளம்பு ஒழிப்பு பணிகளில் அண்மையில் நீர்கொழும்பு பிரதேசத்தில்
ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களது கடமைக்கு
சிலர் இடையூறு விளைவித்துள்ளனர். இச்சமயம் நபரொருவர் வாளை உருவிக்கொண்டு அவர்களைத்
துரத்தியுள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்றார்.