ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 21
நந்தன வருடம் ஆனி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JULY, 12, 2012
வரு. 80 இல. 163
 
எதிரியின் 12 வருட சிறைத் தண்டனை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு

ரோயல்பார்க் தொடர்மாடி சுவிஸ் யுவதி கொலை வழக்கு ;

எதிரியின் 12 வருட சிறைத் தண்டனை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு

கொழும்பு, ராஜகிரிய ரோயல் பார்க் தொடர்மாடி வீட்டில் படுகொலை செய்ய ப்பட்ட சுவீடன் பிரஜையான இவோன் ஜோன்ஸ்டன் (வயது 19) என்ற யுவதியின் கொலை யாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி இடம்பெற்ற இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சமந்த ஜுட் அன்டணி ஜயமஹ என்ற நபருக்கு 12 வருட சிறைத்தண்டனையும், 50,000 ரூபா அபராதமும் விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

எனினும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனை போதுமானதாக இல்லையென மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்ட போதே குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

2005ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி கொழும்பு ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு தொடர்மாடி வீட்டுத் திட்டத்தின் 23ம் மாடியில் வசித்து வந்த சுவீடன் நாட்டு பிரஜையான இவோன் ஜோன்ஸ்டன் என்ற 19 வயது யுவதி

படுகொலை செய்யப்பட்டு அவரது சடலம் அதே தொடர்மாடியில் 19 வது மாடியிலுள்ள வீடொன்றினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.

இப்படுகொலை தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாகவிருந்த தற்போது உதவி பொலிஸ் அத்தியட்சகராகவுள்ள ஷானி அபேசேக்கர மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் முனசிங்க ஆகியோர் மேற்கொண்ட விஞ்ஞான ரீதியிலான பகுப்பாய்வுகள், விசாரணைகளின் மூலம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரான சமந்த ஜூட் அன்டனி ஜயமஹ கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இறுதியில் மேல் நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனையும், 50,000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொலையாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை என்பதாலேயே சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ரஞ்ஜித் சில்வா மற்றும் நளின் பெரேரா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி ஹரிபிரியா ஜயசுந்தர ஜயந்த ஜயசூரிய ஆகியோர் சட்ட அதிபர் சார்பாக ஆஜராகியிருந்தனர்.

மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் ஊடாக வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை என சட்டமா அதிபரினால் மேன்முறையீடு செய்துள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் குற்றப்புலனாய்வுத் துறையினரின் திறமை மேலும் உறுதிப்படுத்தப்படுவதுடன் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவும் முடியாது என்பதும், சட்டம் அவர்களை மன்னிக்காது என்பதும் புலனாகிறது என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி