ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 21
நந்தன வருடம் ஆனி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JULY, 12, 2012
வரு. 80 இல. 163
 

இந்திய மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

இந்திய மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்ய பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டுள்ளார். பல்வேறு காரணங்களால் இது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பிரணாப் முகர்ஜி நிதி மந்திரி பதவியை ராஜினாமாச் செய்தார்.

பிரதமர் மன்மோகன்சிங் நிதி இலாகாவை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இதற்கு முன் மத்திய மந்திரிகள் பலர் பதவி விலக நேரிட்ட போது அவர்களது பொறுப்புகளை மற்ற மந்திரிகள் கூடுதலாக கவனித்து வருகிறார்கள். ஆனால் முக்கியமான நிதி இலாகாவை கூசுடுதல் பொறுப்பாக கவனிப்பதால் பிரதமருக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. எனவே நிதி இலாகாவை கவனிக்க விரைவில் புதிய மந்திரி நியமிக்கப்படுகிறார்.

மந்திரிசபை மாற்றத்தின் போது கூட்டணி கட்சிகள் சார்பில் முக்கிய பொறுப்புடன் கூடிய மந்திரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ஜனாதிபதி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் காலை வாரிவிட்ட நிலையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், தி. மு. க. உள்ளிட்ட கட்சிகள் காங்கிரசுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன. எனவே கூட்டணி கட்சிகளுக்கு புதிதாக மந்திரி பதவி அளிக்கப்படுகிறது.

தி. மு. க. சார்பில் மந்திரி சபையில் இடம்பெற்ற ஆராசா உள்ளிட்டோர் பதவி விலகிய பிறகு புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே மந்தரி சபை மாற்றத்தின் போது தி. மு. க. வுக்கு புதிய மந்திரி பதவி அளிக்கப்படும். இந்தமுறை ரெயில்வே, மின்சாரம் போன்ற முக்கிய இலாக்காக்களை கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்க மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். தற்போது ரெயில்வேயை திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி கவனித்து வருகிறார்.

2014ம் ஆண்டு பாராளுமன்றத்திலும், அதற்கு முன்னதாக குஜராத் உள்ளிட்ட சில மாநில சட்டசபைத் தேர்தர்களும் வருகிறது. தேர்தலை சந்திக்கத் தயாராகும் வகையில் மத்திய அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் முடுக்கிவிடும் வகையில் மத்திய மந்திரிசபை மாற்றம் இருக்கும். அதற்கு வசதியாக திறமையான மந்திரிகள் இடம் பெறுவார்கள்.

திறமையற்ற சில மந்திரிகள் நீக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கூடுகிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி