மகாபாரதக் கதையை நினைவுகூரும் திரௌபதையம்மன் ஆலய திருவிழா
மகாபாரதக் கதையை நினைவுகூரும் திரௌபதையம்மன் ஆலய திருவிழா
க. மகாதேவன்
உடப்பூர்
இலங்கையில் கிழக்கு, வடமேற்கு, மத்திய பிரதேசங்களில் சக்தி வழிபாடு முக்கியத்துவம்
பெற்றுள்ளது.
மஹா பத்திரகாளி, மாரியம்மன், கண்ணகியம்மன், காளியம்மன், நாச்சியம்மன்,
இராக்குருசியம்மன், திரெளபதையம்மன் போன்ற ஆலயங்கள் சக்தி வழிபாட்டிற்கு சான்று
பகர்கின்றன.
மகா பாரதக் கதையை சித்தரிக்கும் முகமாக ஆலயங்களும், வழிபாடுகளும், திருவிழாக்களும்
முக்கிய இடம் வகிக்கின்றன.
மகாபாரதக் கதாநாயகியான தர்மதேவதை திரெளபதையம்மன் வழிபாடு மட்டக்களப்பு, புத்தளம்
பகுதிகளில் சிறப்பாக விளங்குகின்றது. மட்டக்களப்பு, பாண்டிருப்பு திரெளபதையம்மன்
ஆலயம் இதற்கு சான்றாகின்றது. அத்துடன் மத்திய மலைநாட்டில் ஓரிரு இடங்களிலும்
இவ்வழிபாடுகள் நிகழ்கின்றன. பக்தி சிரத்தையோடு பாரதக் கதையை ஒட்டிய உற்சவங்களும்
பூஜைகளும், விசேட தீ மிதிப்பு உற்சவமும் இங்கு இடம்பெறுகின்றன.
இலங்கையில் அமைந்திருக்கும் திரெளபதை தேவியின் ஆலயங்களில் தேவியின் புகழ்கூறும்
ஆலயமாகவும் இற்றைக்கு 400 ஆண்டுகள் தொன்மைமிக்க ஆலயமாகவும் உடப்பு ஸ்ரீ திரெளபதை
அம்மன் ஆலயம் விளங்குகின்றது. புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரிலிருந்து 16 மைல்
வடமேற்கில் உடப்பு கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
இங்குள்ள திரெளபதை அம்மன் ‘ஸ்ரீ ருக்குமணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி சமேத
ஸ்ரீ திரெளபதாதேவி ஆலயம்’ என மிக நீண்ட பெயரைக் கொண்டுள்ளது. இவ்வாலயத்தில் 1917 ஆம்
ஆண்டு காலத்தில் அம்மனை மடாலயத்தில் வைத்துத்தான் பூஜித்து வந்தார்கள்.
1917 ஆம்
ஆண்டுக்கு பின் அம்மனை பிரதிஷ்டை செய்து மகா மண்டபத்துடன் பூரணமிக்க ஆலயமாகக் கட்டி
முடித்தார்கள். 1929 ஆம் ஆண்டளவிலேயே ஸ்ரீ ருக்குமணி சத்தியபாமா சமேத பார்த்தசாரதிப்
பெருமாளின் சிலை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கிருந்த அம்மனின் சிலை
கோயிலின் அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டது.
அதன் பின் 1974, 1994 களில் சுவாமி விஷ்வநாதக் குருக்களின் தலைமையில் குடமுழுக்கு
நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வானுயர்ந்த 108 அடி நவதள நவகலச நவகுண்டபக்ஷ நூதன
இராஜகோபுர மகா கும்பாபிஷேக நிகழ்வு வெகு கோலாகலமாக 2011.01.24 ஆம் திகதி நடைபெற்றது.
புத்தளம் மாவட்டத்தில் எழுபத்தைந்து வீதமான இந்து மக்கள் வாழும் கிராமம்
உடப்பூராகும். நீர் வளமும் நில வளமும் மிக்க உடப்பூருக்கென்று தனித்துவமான
வரலாற்றுச் சிறப்புண்டு.
தெய்வ பக்தியும் குலபக்தியும் மிக்க இவர்கள் இராமநாதபுரத்தில் இருந்து வந்து
குடியேறிய மறவர் பெருங்குடிகளின் வழித்தோன்றல்களாவர். தங்களது குல தெய்வங்களான
காளியம்மன், மாரியம்மன், திரெளபதை அம்மன் போன்றோருக்கு ஆலயங்கள் அமைத்து வருடாந்த
உற்சவங்களை பக்தி சிரத்தையுடன் கொண்டாடி வருகின்றார்கள். உடப்பூரில் நடுநாயகமாக
விளங்கும் ஸ்ரீ காளியம்மன் ஆலயத்துக்கு வடக்கே அரை மைல் தொலைவில் ஸ்ரீ மாரியம்மன்
ஆலயமும், தெற்கே கால்மைல் தொலைவில் ஸ்ரீ திரெளபதையம்மன் ஆலயமும் அமைந்துள்ளன.
ஆடி மாதத்தில் அன்னை ஸ்ரீ திரெளபதா தேவிக்கு ‘ஆடித் திருவிழா’ பெருமை சேர்க்கும்
விதமாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.
இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதக் கதையின் ஓட்டமே இவ்வாலயத்தில் நடைபெற்று வரும்
உற்சவங்களுக்கு உயிரூட்டுவனவாக அமைகின்றன.
இக்கதையைக் கொண்ட இவ்வுற்சவங்கள் மரபு
ரீதியாகவும் சம்பிரதாயபூர்வமாகவும் காட்சிகள், செய்கைகள், நடிப்புக்கள் மூலமாகவும்
கொண்டாடப்பட்டு வருகின்றன. திருவிழாக் காலங்களில் மகா பாரதக் கதையைப் பாட்டாகவும்,
இசை வடிவமாகவும் தெம்மாங்கு மெட்டுக்களுடனும் கிராமிய சந்தங்களுடனும் பக்கம்
கூறுபவருடன் கதையாகப் படிப்பார்கள். இது அன்று தொற்று இன்று வரை வழக்கமாக இருந்து
வருகின்றது.
உடப்பு திரெளபதை அம்மனின் கோயிலில் நடைபெறும் உற்சவங்கள் பதினெட்டு தினங்கள்
நடைபெற்று, விசேட வைபவங்களாக திருக்கரகம்பாலித்தல், கொடியேற்றல், சுயம்வரக்
கொண்டாட்டம், வனம்புகும் காட்சி, அருச்சுனன் தவநிலைக் காட்சி, அக்கினிக்
குண்டக்காவல், தேத்தரசன் கோட்டை பிடித்தல், கர்ணன் படுகளம், தீ மூட்டும் வைபவம்
துரியோதனன் படுகளம், தீக்குளிப்பு, அன்னையின் ஆனந்த நடனம், சுவாமி ஊர்வலம், உட்கொடி
இறக்கம், பால்குட பவனி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
திருக்கரகம் பாலித்தல்
இவ்வாலய உற்சவங்களில் பிரதான ஓர் இடத்தை கரகம் வகிக்கின்றது. கரகம் எடுப்பவரே அன்னை
ஸ்ரீ திரெளபதை தேவியாக அருள் பாலிப்பார்.
உற்சவங்கள் ஆகம முறைப்படி அமையாவிட்டாலும் கொடியேற்றத்துடன் கூடிய உற்சவமாகவே
தீமிதிப்பு உற்சவம் காணப்படுகின்றது. அத்திருவிழாவில் இரண்டு கொடிகள் ஏற்றப்படும்.
முதலாவது ஏற்றப்படும் கொடி துரியோதனனுக்கு உரியதான சர்பக் (நாகம்) கொடியாகும்.
இரண்டாவது கொடி பாண்டவர்களுக்காக ஏற்றி வைக்கப்படும்.
இது அனுமான் கொடியாகும். இது
பஞ்ச சூலங்கள் போல் அமைந்த பஞ்ச தலையைக் கொண்ட சூலத்தில் ஐந்து எலுமிச்சம் பழங்கள்
ஏற்றி அதற்கு பட்டுத்துணி கட்டி ஏற்றப்படுகின்றது. இக் கொடிக்கம்பத்தில் அனுமானுடைய
உருவம் வரையப்பட்ட கொடிச்சீலை பறக்கவிடப்பட்டிருப்பதுடன் கரகம் பாலிக்கின்ற
நாட்களில் அனுமன் கொடிச்சீலை ஏற்றப்படுகின்றது. இக் கொடியேற்ற நாளில் இருந்தே
மகாபாரதக் கதை படிக்கப்படுகிறது.
மகாபாரதக் கதையில் ஸ்ரீ திரெளபதாதேவியின் சுயம்வரத்தை நினைவுகூரும் வகையில் வெகு
விமர்சையாக அது 12 ஆம் நாள் உற்சவமாகக் கொண்டாடப்படும்.
துரியோதனனினதும் அவன் மாமன் சகுனியினதும் வஞ்சகச் சூழ்ச்சியினால் பாண்டவர்கள் நாடு,
நகர் இழந்து வனவாசம் மேற்கொள்ளும் காட்சியை சித்தரிக்கும் வகையில் அது
இடம்பெறுகின்றது. 15 ஆம் நாள் உற்சவமாக இது இடம்பெறும். இவ்வனம் புகும் காட்சி
உடப்பு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பமாகும். பஞ்ச பாண்டவர்கள் ஐவரும்
தெளமிய முனிவரும், அன்னை ஸ்ரீ திரெளபதா தேவி கிருஷ்ணர் சகிதம் வனம் புகும் காட்சி
இடம்பெறும்.
அருச்சுனன் தவநிலை
அருச்சுனன் பாசுபதாஸ்திரம் பெறுவதற்கும் கெளரவர்களை அழிப்பதற்கும் சிவனை நினைத்து
தவம் செய்து வேண்டி நிற்கும் நிலையையே தவநிலைக் காட்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
இது 16 ஆம் நாள் திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது.
சயந்தவன் (தேத்தரசன்) என்ற அரசன் ஈசனை வேண்டி சகல வல்லமையுடனும் நிரம்பிய ஆயுதங்கள்
வரங்களைப் பெற்று தனது கோட்டையை காவல் தெய்வங்கள் மூலம் பலப்படுத்தி இருந்தான்.
இக்கோட்டையை நகுலன், சகாதேவர்கள் விஷ்ணுவின் உதவியுடன் பிடித்து தேத்தரசனை
தேர்க்காலில் கட்டி இழுத்து தர்மருடைய பாதத்தில் மண்டியிடச் செய்யும் கதையைச்
சித்தரிக்கும் வகையில் 17 ஆம் நாள் உற்சவமாக இது நடைபெறுகிறது. நான்கு பேர்
குதிரையில் ஆடிவரும் காட்சி இதுவாகும்.
மகாபாரதத்தின் திரெளபதா தேவியின் சபதம் முற்றுப் பெறுவதை முன்னிட்டு தீமிதிப்பு
கொண்டாடப்படுகின்றது. 18 ஆம் நாள் உற்சவமாக நிகழ்வுறும் இது அதிமுக்கிய வைபவமாகும்.
இன, மத பேமின்றி இவ்வுற்சவத்தைக் கண்டுகளிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும்
மெய்யடியார்கள் கூடுவர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள். இவை
மகாபாரதப் போரை நினைவு கூருவதுடன் குலதெய்வத்தின் மீதான தீராத பக்தியை
வெளிக்காட்டுகின்றது.