சனத்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தினால் நாடு பொருளாதாரத்துறையில்
வளர்ச்சியடையும்
சனத்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தினால்
நாடு பொருளாதாரத்துறையில் வளர்ச்சியடையும்
ஜுலை மாதம் 11ம் திகதியன்று உலகின் சனத்தொகை தினமாகும். ஐக்கிய நாடுகள் சனத்தொகை
நிதியம் என்ற அமைப்பு 1988ம் ஆண்டில் உலக சனத்தொகை தினத்தை பிரகடனம் செய்தது.
1987ம் ஆண்டு ஜுலை 11ம் திகதியன்று உலகத்தின் சனத்தொகை 5 பில்லியனாக உயர்ந்ததை
அடுத்தே சனத்தொகை பெருக்கம் மனித குலத்திற்கு நன்மையை விட தீமையையே அதிகமாக
ஏற்படுத்தும் என்ற உண்மையை உணர்த்துவதற்காக அடுத்த ஆண்டில் இந்த சனத்தொகை தினம்
பிரகடனம் செய்யப்பட்டது.
உலகின் சனத்தொகையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் தான் உலக நாடுகளில் பொருளாதார
அபிவிருத்தியையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த முடியும் என்ற உயர்ந்த
எண்ணத்துடனேயே இந்தத் தீர்மானம் அன்று எடுக்கப்பட்டது.
2001ம் ஆண்டு இலங்கையின் வருடாந்த சனத்தொகை பெருக்க விகிதம் 1.2 ஆக இருந்தது.
2012ம் ஆண்டில் சனத்தொகை பெருக்க விகிதம் 0.7 சதவீதமாக குறைந்திருக்கிறது. சில
மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த சனத்தொகை மதிப்பீட்டின் மூலமே இந்த தகவல்
கிடைத்திருக்கிறது.
1953ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகை கணக்கெடுக்கப்பட்டது முதல் படிப்படியாக ஒரு
வருடத்தில் சனத்தொகை பெருக்க விகிதாசாரம் குறைய ஆரம்பித்தது. சனத்தொகை விகிதாசாரம்
ஒரு நாட்டில் குறைவது அந்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கான சாதகமான
அறிகுறியாகும்.
சீனா கடந்த 10 ஆண்டு காலத்தில் சர்வதேச வர்த்தகத் துறையில் முன்னணியில் இருந்து
அமெரிக்காவுக்கே சவால் விடக்கூடிய அளவிற்கு பொருளாதார ரீதியில் பலம்வாய்ந்த ஒரு
வல்லரசாக இன்று வளர்ந்து கொண்டிருப்பதற்கு பிரதான காரணமாக அமைந்திருக்கிறது.
சீனாவில் சனத்தொகை வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நாட்டை
அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் சனத்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மக்களின்
பூரண ஆதரவு வேண்டுமென்று அறிவித்த சீன அரசாங்கம் சீனாவில் உள்ள ஒவ்வொரு புதுமணத்
தம்பதியும் இரண்டு குழந்தைகளை மாத்திரமே பெற்றெடுக்க வேண்டுமென்ற விதியை கடுமையாக
நடைமுறைப்படுத்தியது. இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோருக்கு
அரசாங்கம் கொடுக்கும் பொருளாதார ரீதியிலான சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படும்
என்றும் சீன அரசாங்கம் அறிவித்தது.
இதையடுத்து சீனாவின் சனத்தொகை பெருக்கம் மட்டுப்படுத்தப்பட்டது. அதனால் தான் இன்று
சீனா வர்த்தகத் துறையிலும் மற்றெல்லாத்துறையிலும் உலகில் முன்னணியில் திகழ்ந்து
வருகின்றது. அத்துடன் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் பல மடங்கு
உயர்வடைந்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலான சீனர்கள்
துவிச்சக்கர வண்டியிலேயே வேலைத்தளங்களுக்கும் மற்ற இடங்களுக்கும் பயணித்தார்கள்.
இன்று உலக நாடுகளில் தனிமனிதனுக்கு அதிகமாக மோட்டார் வாகனங்கள் இருக்கும் நாடாகவும்
சீனா பொருளாதாரத்துறையில் உயர்ந்திருக்கிறது.
இந்த உலகநாடுகளின் சனத்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதனால் ஏற்படும் நன்மைகளை
நாம் பார்த்து எங்கள் நாட்டிலும் ஏன், நாம் சனத்தொகை பெருக்கத்தை
கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்யலாகாது என்ற சிந்தனையில் மூழ்கி ஒரு நல்ல
தீர்மானத்தை எடுப்பது அவசியம்.
சனத்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாம் கருச்சிதைவு, கருவைக் கலைத்தல்
போன்ற பாவகரமான செயற்பாடுகளில் ஈடுபடுவது தவறு. இத்தகைய செயற்பாடுகளை சில மதங்கள்
முற்றாக எதிர்க்கின்றன. நம் நாட்டு மக்கள் வைத்தியர்களின் உதவியை நாடி, விஞ்ஞான
ரீதியில் குடும்பக் கட்டுப்பாட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் கருக்களுக்கு
தீங்கிழைக்காத வகையில் நாட்டின் சனத்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்
கொள்ளலாம் என்று வைத்திய நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
சமீபத்தில் நடத்தப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் போது அநுராதபுரம் மாவட்டத்திலேயே
வருடாந்த சனத்தொகை பெருக்க விகிதாசாரம் 1.33 சதவீதமாக அதிகரித்திருந்தது. ஆயினும்
நுவரெலியா, பதுளை ஆகிய மலையக தேயிலைத் தோட்டங்கள் அதிகளவு உள்ள பிரதேசங்களில்
வருடாந்த சனத்தொகை வளர்ச்சி விகிதாசாரம் குறைந்திருக்கிறது. நுவரெலியாவில் 0.05
ஆகவும், பதுளையில் 0.37 ஆகவும் வீழ்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சாதகமான மகிழ்ச்சிக்குரிய அறிகுறியாக
விளங்குகின்றது. யுத்தம் முடிவடைந்த 3 ஆண்டு காலத்தில் அரசாங்கம் இலங்கையில் பல
முக்கிய பணிகளை வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. ஹம்பாந்தோட்டை
மாகம்புற துறைமுகம், மத்தல விமான நிலையம் போன்றவை அரசாங்கம் துரித வேகத்தில்
மேற்கொண்டு வரும் அபிவிருத்தி பணிகளுக்கு முன் உதாரணங்களாக விளங்குகின்றன.
இவற்றுடன் நின்றுவிடாமல் தென்னிலங்கைக்கான அதிவேக நெடுஞ்சாலை உட்பட நாடெங்கிலும் பல
முக்கிய இடங்களில் மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் புதிய பாலங்கள் அமைத்து,
இலங்கையின் பழைய தோற்றத்தையே மாற்றி எங்கள் நாட்டிற்கு முன்னணியில் உள்ள ஒரு ஆசிய
நாட்டின் தோற்றத்தை பெற்றுக் கொடுத்திருப்பதும் இன்றைய அரசாங்கத்தின் நற்பணியினால்
ஏற்பட்ட மாற்றங்கள் என்பதை நாம் ஞாபகப்படுத்துவது அவசியமாகும்.
இந்நாட்டு பிரஜைகளாகிய நாம் ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு ஆணும் என்பதற்கு
அமைய, சிறிய குடும்பங்களை கொண்டிருந்தால் அது எங்கள் குடும்பங்களின்
பொருளாதாரத்திற்கும் உதவியாக இருப்பதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு
சிறந்த உந்து சக்தியாகவும் அமையும்.