ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 15
நந்தன வருடம் ஆனி மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,JULY, 06, 2012
வரு. 80 இல. 159
 

லண்டன் ஒலிம்பிக் இன்னும் 21 நாள்

லண்டன் ஒலிம்பிக் இன்னும் 21 நாள்

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இந்த முறை லண்டனில் எதிர்வரும் 27 முதல் ஓகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது.

நவீன ஒலிம்பிக்கின் 30 வது போட்டி இது. நவீன ஒலிம்பிக் போட்டி மூன்றாவது முறையாக லண்டனில் நடைபெறுகிறது. இதன் மூலம் நவீன ஒலிம்பிக்கை மூன்று முறை நடத்திய முதல் நகரம் என்ற பெருமை லண்டன் வசமாகியுள்ளது. இதற்கு முன்னர் 1908, 1948ம் ஆண்டுகளில் லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுள்ளது.

கி.மு. 7776ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வந்தாலும், 1896ம் ஆண்டுதான நவீன ஒலிம்பிக்காக உருவெடுத்தது.

ஒரு தலைமுறைக்கே உத்வேகம் கொடு (யிnspirலீa மிலீnலீration) என்பதுதான் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வாசகம். 204 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் இப்போட் டியில் பங்கேற்கின்றனர். 26 வகையான விளையாட்டுகளில் 302 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருதை அள்ளி வந்த “ஸ்லம்டாக மில்லினர்” பட இயக்குநர் டேனி பாயல் தலைமையிலான குழுவினர்தான் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளை அரங்கேற்றவுள்ளனர். இதேபோல் இந்தியாவின் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசைப் பிரபலங்களும் ஒலிம்பிக்கை அதிரவைக்கவுள்ளனர்.

அதிரடி இசை உள்ளிட்ட பல்வேறு பிரமாண்டங்களுடன் தொடங்கும் இந்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை உலகம் முழுவதிலும் இருந்து 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் டி. வி. மற்றும் இணையத்தளங்கள் மூலம் கண்டு களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க விழாவுக்கான டிக்கெட்டின் விலை ரூ. 1.7 லட்சம். மரதன், டிரையத்லன், சைக்கிளோட்டம் ஆகிய போட்டிகளுக்கு அனுமதி இலவசம் என்ற போதிலும், ஒலிம்பிக்கில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ள படகுப் போட்டிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 2005ல் 2012ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில் லண்டனில் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு பயங்கரவாத கும்பல்களிடம் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்புக்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மைதானத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் ஏவுகணைகள் நிறுத்தப்படுவதோடு, வான்வழி மற்றும் நீர்வழி பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேம்ஸ் நதியில் பாதுகாப்பு கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன. இது மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான பொலிஸாரும், வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். கழிப்பறைகளைத் தவிர மற்ற இடங்களில் முழுவதுமாக கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படுகிறது.

ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 4,700 பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரோயல் மின்ட் என்ற நிறுவனம் பதக்கங்களை தயாரித்துள்ளது. இதை டேவிட் வோட்கின்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். பதக்கங்களின் எடை 375 கிராம் முதல் 400 கிராம் ஆகும்.

இது 7 மி.மீ. தடிமனுடையது. பதக்கத்தின் முன்புறம் கிரேக்கத்தின் வெற்றிக் கடவுளான நைக்கின் உருவமும், பின்புறத்தில் ஒலிம்பிக் போட்டியின் இலச்சினை, தேம்ஸ் நதி மற்றும் வீரர்களின் ஆற்றலைக் குறிக்கும் வகையிலான தொடர் கோடுகளும் காணப்படும்.

ஒலிம்பிக் கோபுரம்

ஒலிம்பிக் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் போன்ற ஒரு கோபுரத்தை போட்டி நடைபெறவுள்ள மைதானத்திற்கு அருகிலேயே அமைத்திருக்கிறார்கள். 376 அடி உயரத்தில் சுருள் வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் இக்கோபுரத்திற்கு ஒலிம்பிக் கோபுரம் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

455 சுருள் வடிவ படிக்கட்டுகள் இதில் காணப்படுகின்றன. இங்கு ஹோட்டல் வசதியும் உள்ளது. இங்கிருந்து 2 மைல் தொலைவுக்கு லண்டன் நகரின் அழகை ரசிக்க முடியும். இந்தக் கோபுரம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள சுதந்திர தேவியின் சிலையைவிட 22 அடி உயரம் அதிகமாகும். இந்தக் கோபுரத்தை வடிவமைத்திருப்பது வேறு யாருமல்ல, இந்திய ஓவியர் அனீஸ் கபூர்தான்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி