ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 15
நந்தன வருடம் ஆனி மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, JULY,06, 2012

Print

 
மழைக்காக தொழுது அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்!

மழைக்காக தொழுது அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்!

உலகம் ஒரு பயிர் நிலம். இன்னும் அதுவொரு சோதனைச் சாவடியுமாகும். அதனால் உலகில் வாழக்கூடிய மனிதர்களை அல்லாஹ் பல வகையில் சோதிக்கின்றான். இவ்வுலகில் பாவிகளைவிட நல்லடியார்களை அல்லாஹ் கடுமையாக சோதிக்கின்றான்.

மழையின்றி வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதும் இதில் ஒன்று தான். தற்போது நமது நாட்டில் நிலவி வரும் வரட்சியான கால நிலையினால் நீர் மின் உற்பத்தி மூலமாக மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சவாலுக்கும் முகம் கொடுக்கவேண்டிய அபாய நிலை தோன்றியுள்ளது.

இதனால் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் நிலவும் மிக மோசமான வரட்சிக் காலநிலை தற்பொழுது நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 மாவட்டங்களில் குடி நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இன்னம் ஒன்றரை மாதங்களுக்கு அதிக மழை பெய்வதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லாதிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது இவ்வருட புனித ரமழான் மாத நோன்பினையும் இரா வணக்கங்களையும் நிறைவேற்றுவதில் நிச்சயமாக மக்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும். இது நமது நோன்பினை பலப்படுத்தி அல்லாஹ்விடம் முழுமையாக நம்மை அர்ப்பணிப்பதற்கு அவகாசத்தை வழங்குகிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

மழையை மனிதனால் வரவழைக்க முடியாது. மழை எப்பொழுது பெய்யும், எங்கு பெய்யும் என்ற சுயமான ஞானம் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது.

அல்லாஹ் கூறுகின்றான்; அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும் பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து கனி வர்க்கங்களை உங்களுக்கு ஆகாரமாகவும் வெளிப்படுத்தி தந்திருக்கிறான். அல்குர்ஆன் 14:32

இந்த வசனத்தில் வானத்திலிருந்து மழையை இறக்குவது நானே என்று கூறும் அல்லாஹ் 31ம் அத்தியாயம் 34ம் வசனத்தில் மழை பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருப்பதாகச் சொல்கின்றான்.

மழையைக் கொண்டு வருவதும், அதனை நிறுத்துவதும் மனித சுய ஆற்றலுக்கு உற்பட்டதல்ல. அதனால் தான் மழை தொடங்கிய பின்னும் கூட வானிலை ஆய்வு மையங்களினால் துல்லியமான மழை அளவை சொல்ல முடியாதிருக்கிறது.

ஒரு நாட்டில் அல்லது ஒரு ஊரில் மழை பொழியவில்லையென்றால் வரட்சி பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் மனிதன் மட்டும் இன்றி ஏனைய உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. இவ்வாறு பஞ்சம், வரட்சி போன்ற அபாயங்கள் ஏற்படுமேயானால் துவண்டு விடாமல் இறைவனிடம் பிரார்த்தித்து தொழுகை நடத்துமாறு இஸ்லாம் கூறுகிறது.

பஞ்சமும் வரட்சியும் ஏற்படும்போது அதனைப் போக்க மழை வேண்டி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் விசேடத் தொழுகை நடத்தியுள்ளார்கள். இதற்குப் பெயர் ஸலாத்துல் இஸ்திஸ்காயி- மழைத் தொழுகை என்று கூறப்படும்.

மழைத் தொழுகைக்கான நேரம்

சூரியனின் சுடர் வெளி வந்தபோது மழைத் தொழுகைக்காக நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். (ஆயிசா ரழி),அபூ தாவூத்.

தொழும் இடம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் (மழைத் தொழுகையைத்) தொழுவதற்காகத் திடலுக்குப் புறப்பட்டார்கள். புகாரி.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மழை வேண்டி பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்துக்கள் தொழுவித்தார்கள். புகாரி.

தொழச் செல்லும் விதம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எளிய உடையணிந்து பணிவானவர்களாக நிதானமான நடையுடன் இறைவனிடம் மன்றாடியவர்களாக (தொழும் திடலுக்கு) சென்றார்கள். மேலும் பெருநாள் தொழுகை தொழுவதுபோன்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். வழமைக்கு மாற்றமான விதத்தில் உரையாற்றினார்கள். அபூ தாவூத், நசாயீ, திர்மிதி, இப்னு மாஜா.

மேலும் தொழுவதற்கு திட்டமிடப்பட்டால் மூன்று நாட்களுக்கு ஸ¤ன்னத்தான் நோன்பு பிடித்து தவ்பாச் செய்து, நான்காவது நாளில் ஆடு, மாடு முதலிய பிராணிகளுடன் இமாமும் யுவதிப் பெண்கள் அன்றி வீட்டில் உள்ள மிருகங்கள் உட்பட எல்லோரும் பரிசுத்தமான மனதுடன் பரந்த மைதானமான வெளியில் வந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுது குத்பா ஓதி துஆவை மனமுருக கண்ணீர் வடித்து உருக்கமாக கேட்கவேண்டும். ஊரில் உள்ள நபிகளாரின் குடும்பத்தினர்களை விசேடமாக அழைத்துக்கொள்ளவேண்டும்.

நபித் தோழர் ஸெய்யிதுனா உமர் ரழி மழை வேண்டிப் பிரார்த்திப்பார்களானால் நபியவர்களின் சிறிய தந்தை ஹழ்ரத் அப்பாஸ் நாயகம் அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் பொருட்டால் மழைவேண்டிப் பிராத்தித்ததாக புகாரி 964ம் இலக்கத்தில் பதிவாகியுள்ளது.

இத்தொழுகை கூட்டாகத்தான் தொழ வேண்டும். இது பெரு நாள் தொழுகைகள் போன்று தோழப்படவேண்டும். அதாவது முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறித் தொழவேண்டும். குத்பாப் பிரசங்கத்தினை தொழுகைக்கு முன்னரோ அல்லது பின்னரோ ஓதிக் கொள்ளலாம். திறந்த மைதானத்தில் இது தொழுவிக்கப்படவேண்டும். தொழுகைக்காகச் செல்பவர்கள் பணிவாகவும் எளிய ஆடை அணிந்தவாறும் செல்லவேண்டும்.

இமாம் அவர்கள் மக்களுக்கு அல்லாஹ்வை அஞ்சுவது தொடர்பாகவும் தமது பாவங்களிலிருந்து மீழுமாறும் உபதேசிக்கவேண்டும். பின்னர் மிம்பரில் நின்றவாறு மக்களுக்கு முதுகைக் காண்பித்தவராகவும் கிப்லாவை முன்னோக்கிய நிலையிலும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவேண்டும். அப்பொழுது அவர் அணிந்திருக்கும் ஆடையைப் புரட்டியும் அணிய வேண்டும். அவ்வாறே அங்கே சமுகமளித்திருப்போரும் குறைந்தது தம்மிடம் இருக்கும் கைக்குட்டையையாவது புரட்டிப் போட்டுக் &8!{ரிஜி நல்லது.

மழையில் பெறவேண்டிய மிக முக்கிய படிப்பினை

அல்லாஹ் கூறுகின்றான். பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுமுள்ளதாகும். அதன் மீது நாம் மழையைப் பொழியச் செய்தால் அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளகிறது. (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே நிச்சயமாக இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கின்றவன். நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். அல் குர்ஆன்

மழையில்லாமல் காய்ந்து சருகாக இறந்து காட்சியளிக்கும் பூமியின் புற்பூண்டுகள், அதன் மீது அல்லாஹ்வின் அருள் மாரி பொழிந்தவுடன் பச்சைப் பசுமையாக முளைப்பதைப் பார்க்கிறோம்.

இதுபோன்று தான் நாம் இறந்தவுடன் அல்லாஹ் நம்மை உயிர்ப்பிப்பான். அப்பொழுது நம் வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் நாம் பதில் சொல்லவேண்டும் என்ற சிந்தனை இந்த மழையின் மூலம் பூமி வெளியாக்கும் பயிரினங்கள் மூலம் நாம் பெறவேண்டிய படிப்பினையாகும். எனவே பஞ்சத்தை அல்லாஹ்வே ஏற்படுத்தி, அழியாத மறுவுலகப் பயணத்தினை நினைவுறுத்தி அல்லாஹ்வுக்கு அடிபணியும் சிந்தனையை மனிதன் இதிலிருந்து பெற்றுக்கொள்ளத் தவறக்கூடாது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

webmanager@lakehouse.lk