நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது
நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும்
மின்வெட்டு அமுல்படுத்தப்படாது
* அனல் மின் உற்பத்தியால் தினமும் ரூ. 200 மில். நஷ்டம்
* ஜனாதிபதி உபகுழு மாற்று வழி குறித்து ஆராய்வு
* மின்சாரத்தை சிக்கனப்படுத்த மீண்டும் வேண்டுகோள்
லக்ஷ்மி பரசுராமன்
நிலவும் கடும் வரட்சியினால் நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள போதும் மின்
வெட்டு நடை முறைப்படுத்தப்பட மாட்டாதென மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி
சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நீரேந்துப் பகுதிகளில் நீர் மின் உற்பத்திக்கென 18 சதவீத நீர் மாத்திரமேயுள்ள
நிலையில் நீர் மின் உற்பத்தி பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் அனல் மின்
உற்பத்தி காரணமாக இலங்கை மின்சார சபை நாளொன்றுக்கு 200 மில்லியன் ரூபாவினை நஷ்டமாக
எதிர்நோக்குகின்றது.
மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை
ஏற்பட்டுள்ளபோதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில்
இந்நாட்டு மக்கள் இருளில் இருக்க கூடாது என்பதற்காக 24 மணித்தியாலங்களும்
மின்சாரத்தினை வழங்கவே நாம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோமெனவும்
அமைச்சர் கூறினார்.
இலங்கை மின்சார சபை எதிர்நோக்கும் நட்டத்திற்கு திறைசேரி கைகொடுக்குமென நம்புகிறோம்.
இந்த நட்டத்தினை ஈடுசெய்வது தொடர்பில் ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட உபகுழு
மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. இக்குழு விரைவில் தனது அறிக்கையினை
திறைசேரியிடம் சமர்ப்பிக்குமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மின்சக்தி எரிசக்தி அமைச்சில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே
அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இவ்வருடம் அடுத்தடுத்து வந்த இரண்டு பருவப்பெயர்ச்சிகளிலும் எதிர்பார்த்தளவு மழை
கிடைக்காததையிட்டே நீரேந்துப் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது.
இருப்பினும் எக்காரணம் கொண்டும் மின்வெட்டை நடைமுறைப்படுத்தக் கூடாதென்பதனை
இலக்காகக் கொண்டு நாம் செயற்பட்டு வருகிறோம்.
பொது மக்களும் இதற்காக எமக்கு
ஒத்துழைப்பு வழங்கினால் எதிர்வரும் செப்டம்பரில் அடுத்த பருவப் பெயர்ச்சி மழை
கிடைக்கும் வரை எவ்வித மின் துண்டிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக நாட்டின் அனைத்துப்
பகுதிகளுக்கும் மின்சாரத்தை வழங்க முடியுமெனவும் அமைச்சர் சம்பிக்க
சுட்டிக்காட்டினார்.
2002 இல் 44 சதவீத நீர் மற்றும் 2004 இல் 33 சதவீத நீர் காணப்பட்ட நிலையிலும் மின்
துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது நீரேந்துப் பகுதிகளில் 18 சதவீத நீர் மாத்திரமே காணப்படுகிறது. இருப்பினும்
நாம் மின் வெட்டை அமுல்படுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்கு
நாட்டு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி மின்சாரத்தை சிக்கனமாக பாவித்து ஒத்துழைக்க
வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே மின்சக்தியை சிக்கனமாக பாவிக்குமாறு
“நாளைக்காக இன்று” எனும் வேலைத்திட்டத்தினூடாக 5 சதவீத மின்சாரத்தை சேமிக்க
முடிந்துள்ளது. இதற்கு மேலதிகமாக இன்னும் 5 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியுமாக
இருப்பின் 1.6 ஜிகாவெட் மின்சாரத்தை எம்மால் மிச்சப்படுத்த முடியும். அப்போது
எதிர்வரும் செப்டம்பர் வரை மின்துண்டிப்புக் குறித்து எவரும் கவலைப்படத் தேவையில்லை
எனவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் மாத்திரமே 24 மணித்தியாலங்களும் மிகக் குறைவான கட்டணத்தில் மின்சாரம்
பெற்றுக்கொடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கைத் தமிழர்கள் குறித்து
அதிகம் பேசும் இந்திய முதலமைச்சர் ஜயலலிதாவே நாளொன்றுக்கு 12 மணித்தியாலங்கள் வீதம்
ஐந்து நாட்களுக்கே மின்சாரம் வழங்குவதாகவும் கூறினார்.
அனல் மின் நிலையங்களுக்கூடாக மின்சாரத்தின் ஒரு அலகினை உற்பத்தி செய்வதற்கு சுமார்
70 ரூபா வரை செலவாகுவதாக தெரிவித்த அமைச்சர், இதற்காக நியமிக்கப்பட்டிருக்கும்
அமைச்சரவை உபகுழு இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இக்குழுவில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,
ஏ.எச்.எம். பெளஸி, நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில்
பிரேமஜயந்த், மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும்
அமைச்சர் கூறினார்.