ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 15
நந்தன வருடம் ஆனி மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,JULY, 06, 2012
வரு. 80 இல. 159
 
ஜனாதிபதியின் திறமை மிக்க தலைமையில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய வளர்ச்சி

ஜனாதிபதியின் திறமை மிக்க தலைமையில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய வளர்ச்சி

சீனத் தூதரகத்தின் அரசியல் கெளன்சிலர்

இலங்கையின் எதிர்காலம் ஒளிமய மானதாக உள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் திறமைமிக்க தலைமைத்துவம் இலங்கையை அபி விருத்திப் பாதையில் இட்டுச் செல்வதுடன் அந்த அபிவிருத்தி, பொருளாதாரப் பயணத்தில் சீனாவும் இணைந்துள்ளதாக மக்கள் சீனக் குடியரசு தூதரகத்தில் அரசியல் கவுன்சிலரும், பிரதி தலைவருமான REN FAQIANG  தெரிவித்தார்.

சீனா- இலங்கை ராஜதந்திர உறவு ஏற்பட்டு 55 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டும் சீனா - இலங்கை ரப்பர், அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவாவதை முன்னிட்டும் நடத்தப்படவுள்ள விழா பற்றி விளக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் REN FAQIANG  உரையாற்றினார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இலங்கை- சீன நட்புறவு சங்கத் தலைவர் சட்டத்தரணி ஆனந்த குணதிலக்க தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது.

பிரதமர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் இவ்விழா ஜூலை 10 ஆம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறும்.

வெளி உறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் முக்கிய உரையாற்றுவார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவும் கெளரவ அதிதிகளாகப் பங்கு கொள்வரென்றும் சட்டத்தரணி ஆனந்த குணதிலக்க தெரிவித்தார்.

REN FAQIANG  தொடர்ந்து பேசுகையில், எமது கஷ்ட காலங்களில் இலங்கை எமக்கு உதவியுள்ளது.

நாம் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் பரஸ்பரம் நட்புறவை வளர்த்து வருகிறோம்.

அண்மைக் காலங்களில் எமது உறவுகள் மிகவும் நெருக்கமாகின.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபம், உயர் நீதிமன்றத் தொகுதி, தாமரைத் தடாக அரங்கம் போன்ற முக்கிய நிர்மாணங்களை நாம் வழங்கியுள்ளோம்.

இலங்கையின் யானைகள் எமது நாட்டுக்கு அன்பளிப்பு செய்யப்பட் டுள்ளன.

ராஜதந்திர உறவுக்கு 55 ஆண்டுப் பூர்த்தியும், அரிசி – ரப்பர் ஒப்பந்தத்துக்கு 60 ஆண்டுப் பூர்த்தியும் இரு நாடுகளின் வரலாற்றிலும் முக்கிய இரு நிகழ்வுகளாகும் என்றும் கூறினார்.

இலங்கை சீன நட்புறவுச் சங்கப் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சுமதி தர்மவர்த்தன பேசுகையில்,

“மக்களுக்கு - மக்கள்” என்ற கோட்பாடே முக்கியம் பெற்றுள்ளது.

இலங்கையின் பிரதான பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனாவின் உதவிகளும் உள்ளன.

இரு நாட்டு உறவுகளும் மேலும் வளரவேண்டும் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி