பாராளுமன்ற அமர்வுகளில் எம். பிக்கள் கலந்துகொள்வது மிக அவசியம்
பாராளுமன்ற அமர்வுகளில் எம். பிக்கள்
கலந்துகொள்வது மிக அவசியம்
“பங்குபற்றும் விபரங்களை
வெளியிட வேண்டும்”
மர்லின் மரிக்கார், எம். எஸ்.பாஹிம்
சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற அமர்வுகளில் தவறாது கலந்து கொள்ளுவது
மிக அவசியம் என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று
பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காது இருப்பது
பாராளுமன்றத்தையே அவமதிக்கும் செயலாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக்
கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய
எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வாய்மூல விடைக்கான வினாக்களை கேட்பதற்கும்
எம்.பிக்களும், அவ்வினாக்களுக்கு பதிலளிப்பதற்கு அமைச்சர்களும் பாராளுமன்ற
அமர்வுகளுக்கு சமுகமளிப்பது மிக அவசியம்.
அப்போது தான் கேள்விகளையும், குறுக்கு
கேள்விகளையும் கேட்பதற்கும் அவற்றுக்கு உரிய பதில்களை அளிப்பதற்கும் வாய்ப்பு
கிடைக்கும். இல்லாவிடில் வாய்மூல விடைக்கான வினாக்களை உரிய முறையில் கேட்கவோ, உரிய
பதில்களைப் பெற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே பாராளுமன்றம் கூடுகின்ற நாட்களில் ஆரம்ப நேரத்தில் சகல எம்.பிக்களும்
அமர்வுகளில் கலந்துகொள்ளுவது மிக அவசியம். பாராளுமன்ற உறுப்பினர்களின் நலன் கருதியே
பாராளுமன்ற அமர்வு நேரம் கூட பிற்பகலுக்கு மாற்றப்பட்டது. அப்படியிருந்தும் அனேக
எம்.பிக்கள் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கும் வேளைகளில் சமுகமளிக்காதுள்ளார்கள்.
இது கவலை தரக்கூடிய நிலைமையாகும்.
இதன் காரணத்தினால் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு
பதிலளிப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளிப்பதற்கும், அவ்வினாக்களை
கேட்பதற்கு அவற்றை சமர்ப்பித்திருக்கும் எம்.பி.களும் சபைக்கு தவறாது சமுகமளிக்கும்
வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு சமுகமளிக்கத் தவறுபவர்களுக்கு
எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏற்ற வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுவது அவசியம்.
வாய்மூல விடைக்காக வினாக்களையும் யோசனைகளையும் சபைக்கு சமர்ப்பித்து விட்டு அவற்றை
உரிய நேரத்தில் கேட்பதற்கு சபைக்கு சமுகமளிக்காது இருப்பது சபையையே அவமதிக்கும்
செயலாக அமையும்.
அதேநேரம் அமைச்சர்களும், எம். பிக்களும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும்போது
அப்பயணங்கள் தொடர்பாக சபாநாயகருக்கு அறிவித்து விட்டு செல்ல வேண்டும். இப்படியான
ஒழுங்கு முறை இங்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.
இம்முறைமை உலகில் பல நாடுகளில் உள்ளன.
மக்கள் எம்.பிக்களை மக்கள் சேவைக்காகவே தெரிவு செய்து இருக்கின்றார்கள். இதனை ஒரு
பொறுப்பாக கருதி ஒவ்வொரு எம்.பி. யும் செயற்பட வேண்டும். இதேநேரம் பாராளுமன்ற
அமர்வுகளில் பங்குபற்றுகின்ற எம். பிக்களின் விபரங்களை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை
சபைக்கு அறிவிக்க வேண்டும். பாராளுமன்றம் கூடுகின்ற நாட்களில் மில்லியன் கணக்கில்
செலவிடப்படுகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு எம்.பிக்கள் செயற்படுவது அவசியம்
என்றார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ:-
எதிர்க் கட்சித் தலைவர் முக்கியமான விடயமொன்றை சபையின் கவனத்திற்குக் கொண்டு
வந்திருக்கின்றார்.
பாராளுமன்றம் கூடுகின்ற நாட்களின் ஆரம்ப வேளையில் சகல எம்.பிக்களும் அமர்வில்
கலந்துகொள்ளுவது மிக அவசியம்.
இவ்விடயம் தொடர்பாகவும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக தெரிவுக்குழு கவனம்
செலுத்துவது மிக அவசியம்.
பாராளுமன்ற உறுப்பினர்
ஏ. எச். எம். அஸ்வர்
பாராளுமன்ற அமர்வுகள் கூடுகின்ற நாட்களில் பல பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களும்
கூடுகின்றன. அவற்றில் எம்.பி.க்களும், அமைச்சர்களும் பங்கு பற்றுகின்றனர்.
அதன் காரணத்தினால் சபை அமர்வுகளின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்குபற்ற அமைச்சர்கள்,
எம்.பி. க்கள் பலரால் முடியாது போகின்றது.
என்றாலும் எதிர்க் கட்சித் தலைவர் ஒருநாளைக்கு எத்தனை மணித்தியாலங்கள் பாராளுமன்ற
அமர்வில் பங்குபற்றுகின்றார். எனக் கேட்க விரும்புகின்றேன். அவர் முதலில்
முன்னுதாரணம் மிக்கவராகத் திகழவேண்டும் என்றார்.