பாராளுமன்றம் கூடும் தினங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு
விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாமென நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு
பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பணிப்புரை
விடுத்தார்.
புத்தளம் மாவட்ட எம்.பி. ரங்க பண்டாரவை கைது செய்யுமாறு சிலாபம் நீதவான் பிடியாணை
பிறப்பித்திருப்பது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட நீதவானுக்கு அறிவிக்குமாறும்
சபாநாயகர் பணித்தார்.
பாலித ரங்க பண்டார எம்.பி. எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்கு பதிலளித்த போதே
சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார்.
தனக்கெதிரான வழக்கொன்று 5 ஆம் திகதி சிலாபம் நீதி மன்றத்தில் விசாரணைக்கு
எடுக்கப்பட இருந்ததாகவும் இன்று பாராளுமன்றம் கூடுவதால் நீதிமன்றத்திற்கு வர
முடியாததை பாராளுமன்ற செயலாளரின் கடிதத்தினூடாக அறிவித்ததாகவும் ரங்க பண்டார எம்.பி.
கூறினார். இருந்தும் தன்னை கைது செய்ய நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளதாக
கூறிய அவர், மேற்படி பிடிவிராந்தை செயற்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு
சபாநாயகரை கோரினார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாராளுமன்றம்
கூடும் நாளில் எம்.பி. ஒருவருக்கு எதிராக வழக்கு இருந்தாலும் பாராளுமன்றத்திற்கு
சமுகமளிப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் நீதிச்சேவை
ஆணைக்குழுவுடன் பாராளுமன்ற ஒழுங்குக்குழு பேசி ஏற்கெனவே முடிவு எடுத்துள்ளது. எனவே,
இது தொடர்பாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினூடாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு
அறிவிப்பதாகக் கூறினார்.