ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 15
நந்தன வருடம் ஆனி மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,JULY, 06, 2012
வரு. 80 இல. 159
 

சிறை நிரப்பும் போராட்டத்தில் 50 ஆயிரம் பேர் மட்டுமே கைது

சிறை நிரப்பும் போராட்டத்தில் 50 ஆயிரம் பேர் மட்டுமே கைது

ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கம் தி.மு.க. என அதன் தலைவர் கருணாநிதி அடிக்கடி கூறி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் தி.மு.க. வினர் நேற்று முன்தினம் நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் அவரது கணக்குப்படியே 2.30 இலட்சம் பேர் அறிவிக்கப்பட்ட போதிலும், மாலையிலேயே அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் மீது தொடர்ந்து பல்வேறு வழக்குகள் பாய்ந்த நிலையில், தமிழக அரசைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தி.மு.க. செயற்குழு முடிவு செய்தது.

தொடர் வழக்குகளாலும் கட்சியின் செயல்பாட்டாலும் நொந்து போயிருந்த கட்சி நிர்வாகிகள் போராட்டக்களத்திற்கு வருவார்களா என்ற சந்தேகம் தி.மு.க. தலைமைக்கு ஏற்பட்டிருந்தது.

போராட்டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த சிறை நிரப்பும் போராட்டம் தி.மு.க. விற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

2,32,297 பேர் மட்டுமே நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். மொத்த தி.மு.க. உறுப்பினர்களில் 1.53 சதவீதத்தினர் மட்டுமே சிறையை நிரப்ப வந்துள்ளனர். இரண்டு இலட்சம் பேர் கைதானதாக கருணாநிதி தெரிவித்தாலும் 50 ஆயிரம் பேர் மட்டுமே கைதானதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விடுதலை:

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் மாலையிலேயே விடுவிக்க அரசு முடிவெடுத்ததால், அரசியல் ரீதியாக எவ்வித பலனும் தி.மு.க.விற்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைமையின் மீது தொண்டர்கள் அதிருப்தியடைந்திருந்த நிலையில் பிணையில் வரக்கூடாது என்றெல்லாம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. போராட்டத்திற்கு தோல்வியைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் 500 ரூபாய், 1,000 ரூபாய் கூலிக்காக முதியவர்கள், குழந்தைகளுடன் பெண்களும், ஆண்களும் பங்கேற்றனர். கைது செய்யப்பட்டவர்கள் இருந்த மண்டப வாசலை பொலிஸார் இழுத்து மூடினர். ஆனால், ''எங்களை வெளியில் விடுங்கள், நாங்கள் செல்கிறோம்'' என அப்பாவி தொண்டர்கள் பலர் பொலிஸாரிடம் நச்சரித்தபடி இருந்தனர்.

பொலிசாரும் இரக்கப்பட்டு, அவர்களை வெளியில் அனுப்பினர். பொலிசார் கணக்குப்படி மாலை நிலவரத்தில் ''உள்ளே'' இருந்தவர்களில் 1,000 பேர் வரை வெளியில் சென்றதாக தெரிய வந்தது. தமிழகத்தில் உள்ள சிறைகளில் 30 ஆயிரம் கைதிகள் அடைக்க வசதியுள்ளது. தற்போது 17 ஆயிரம் கைதிகள் மட்டும் சிறையில் உள்ள நிலையில் போராட்டத்தில் கைதாகும் தி.மு.க. வினரை அடைக்க அரசு தயாராக உள்ளது.

வெளிமாநில சிறையிலும் அடைக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதற்கேற்ப மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் பங்கேற்க வந்த தி.மு.க. வினரை பொலிசார் கைது செய்யத் தொடங்கியதும் அவர்கள் வாகனங்களில் ஏறாமல் மரத் தடிகளிலும், தேனீர்க் கடைகளிலும் ஒதுங்கத் தொடங்கினர்.

''உங்களை கைது செய்து கொண்டுபோக வாகனம் தயாராக உள்ளது. தயாராக இருப்பவர்கள் உடனே வண்டியில் ஏறுங்கள். விரும்பாதவர்கள் கலைந்து செல்லுங்கள் என்று வெளிப்படையாக தொடர்ந்து அறிவித்தனர். பொலிஸாரின் அறிவுரையை ஏற்று சிலர் தலைமறைவாக பிறர் வேறு வழியில்லாமல் வாகனத்தில் ஏறி அமர்ந்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி