சிரிய எல்லையில் துருக்கி இராணுவம் உ'hர் நிலையில்: மற்றொரு விமானத்தின்
மீதும் தாக்குதல்
விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரம்
சிரிய எல்லையில் துருக்கி இராணுவம்
உ'hர் நிலையில்: மற்றொரு
விமானத்தின் மீதும் தாக்குதல்
சிரியாவால் துருக்கி விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு எச்சரிக்கை விடுத்துள்ள
துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டோகன், நாட்டு இராணுவம் உஷார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
சிரிய இராணுவம் மீண்டும் ஒருமுறை எல்லை மீறி செயற்பட்டால் அதனை துருக்கிக்கு எதிரான
இராணுவ நடவடிக்கையாக கருதப்படும் எனவும் துருக்கி பிரதமர் எச்சரித்தார். இந்த
விவகாரம் குறித்து துருக்கி, நேட்டோ அங்கத்துவ நாடுகளுடன் நேற்று விசேட ஆலோசனை
நடத்திய நிலையிலேயே துருக்கி பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
துருக்கி பாராளுமன்றத்தின் வார அமர்வில் உரையாற்றிய பிரதமர் எர்டோகன் சிரியாவின்
பஷர் அல் அஸாத் அரசுக்கு கண்டனம் வெளியிட்டார்.
‘ஐக்கிய நாடுகள், மற்றும் கொபி அனான்
அவருக்கு (பஷர் அல் அஸாத்) பல ஆலோசனைகள் வழங்கினாலும் அவர் எதனையும் கவனத்தில்
எடுக்க வில்லை. சிரிய நிர்வாகம் நாட்டை ஆளுவதற்கு தகுதியானதல்ல. இந்த கொடூர
ஆட்சியில் சிறுவர்கள், பெண்கள் முதியவர்கள் எந்த பச்சத்தாபமும் இன்றி
கொல்லப்படுகிறார்கள்’ என்றார்.
இந்நிலையில் நேட்டோ இந்த விமானத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சிரியாவால் துருக்கி யுத்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதைத்
தொடர்ந்து துருக்கி அரசின் அழைப்புக்கு அமைய நேட்டோ நாடுகள் அன்காராவில் நேற்று
இந்த சம்பவம் தொடர்பில் ஆலோசனை நடத்தியது. 28 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட நேட்டோவின்
63 ஆண்டு வரலாற்றில் தமது அங்கத்துவ நாடொன்று இவ்வாறான அவசர ஆலோசனைக்கு
அழைப்புவிடுப்பது இது இரண்டாவது முறையாகும்.
நேட்டோ சாசனத்தில் 4ஆவது சரத்தின் கீழே துருக்கி இந்த ஆலோசனைக்கு அழைப்பு விடுத்தது.
இந்த சரத்தில் அங்கத்துவ நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால்
அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுக்க முடியும்.
இவ்வாறான அவசர ஆலோசனைக்கு இதற்கு முன்னர் ஒரு முறை மாத்திரமே அங்கத்துவ நாடொன்று
அழைப்பு விடுத்தது. அது கடந்த 2003ஆம் ஆண்டு ஈராக் யுத்தத்தின் போது துருக்கி தமது
எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காகும்.
இந்த விடயம் குறித்து துருக்கி ஐ. நா. பாதுகாப்புச் சபைக்கும் கண்டனம் தெரிவித்து
கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் சிரிய நிர்வாகம் துருக்கி தேசிய பாதுகாப்பிற்கு
அச்சுறுத்தலாக செயற்படுவதாகவும் அது பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு
கடும் அச்சுறுத்தல் என்றும் துருக்கி குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்புச் சபை நேற்று ஆலோசனை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே துருக்கியின் மற்றுமொரு விமானத்தின் மீது சிரிய இராணுவம் தாக்குதல்
நடத்தியதாக துருக்கி துணை பிரதமர் புலன்ட் அரின்க் குறிப்பிட்டுள் ளார். எனினும்
துருக்கிய தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து தாக்குதலை நிறுத்தியதாக அவர்
தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இரு
துருக்கி வீரர்களையும் தேடும் பணியில் இடுபட்டிருந்த விமானத்தின் மீதே சிரிய
இராணுவம் சூடு நடத்தியுள்ளது.
இந்த சம்பவம் துருக்கி - சிரியாவுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
துருக்கியின் எப்-4 ரக யுத்த விமானம் கடந்த வெள்ளிக்கிழமை சிரியாவால் சுட்டு
வீழ்த்தப்பட்டது. சிரிய எல்லையூடாக 330 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம்
விமான எதிர்ப்பு கருவி மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக சிரியா தரப்பில்
கூறப்பட்டுள்ளது.
எனினும் அது சர்வதேச வான்பரப்பிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக துருக்கி குற்றம்
சாட்டியுள்ளது. துருக்கியின் ஹதாய மாகாணத்திற்கு மேலால் பறந்து கொண்டிருந்த விமானம்
தவறுதலாக சிரிய எல்லைக்குள் சென்றதைத் தொடர்ந்து துருக்கி ராடார் செயற்படுத்துபவர்
எச்சரிக்கை விடுத்ததால் விமானம் சர்வதேச வான் பகுதிக்கு சென்றது.
இந்நிலையில் சிரிய கடல் எல்லைக்கு அப்பால்13 கடல் மைல் தொலைவில் வைத்து விமானம்
ராடார் தொடர்பை இழந்ததாக துருக்கி குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே சிரியாவில் அரச படைக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல்கள்
தொடர்ந்தும் நீடித்துவருகிறது. தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதியிலுள்ள தேசிய
பாதுகாப்பு படை நிலையங்களில் நேற்று மோதல்கள் இடம்பெற்றதாக செயற்பாட்டாளர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
டமஸ்கஸ்ஸின் கத்சயா மற்றும் அல்ஹமா பகுதிகளில் அரச படைக்கும் எதிர்பாளர்களுக்கும்
இடையில் மோதல்கள் நீடித்ததாக சிரியா தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்
மனித உரிமை அமைப்பு ஏ. எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளது. பிரிட்டனை
மையமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பே மேற்படி தகவலை தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து
வரும் செய்திகளை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து
ள்ளன.
மறுபுறத்தில் சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்து துருக்கியில் தஞ்சம் புகுந்த ஒரு
ஜெனரல் மற்றும் கொலனல் உட்பட 30க்கும் மேற்பட்ட சிரிய இராணுவத்தினர் அங்கிருக்கும்
தற்காலிய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மோதல் ஆரம்பித்ததன் பின் சிரிய
இராணுவத்திலிருந்து விலகி 13 ஜெனரல்கள் துருக்கியில் தஞ்சம் புகுந்துள்ளதாக செய்தி
வெளியாகியுள்ளது.
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிரான போராட்டம் ஆரம்பமானது தொடக்கம்
பல்லாயிரக்க ணக்கான சிரிய இராணுவ வீரர்கள் அரச இராணுவத்திலிருந்து பிரிந்து
சென்றுள்ளனர்.
இதில் கீழ் நிலை மற்றும் மத்திய நிலை அதிகாரிகள் அரசுக்கு எதிராக போராடும் சிரிய
சுயாதீன படையில் இணைந்து செயற்படுகின்றனர்.