ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 06
நந்தன வருடம் ஆனி மாதம் 13ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY ,JUNE, 27, 2012
வரு. 80 இல. 151
 

முதல் சுற்றில் ஜோகோவிச், ஷரபோவா வெற்றி: வீனஸ், டேவிட் நல்பாண்டியன் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்:

முதல் சுற்றில் ஜோகோவிச், ஷரபோவா வெற்றி: வீனஸ், டேவிட் நல்பாண்டியன் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் முதல் சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச் ரஷ்ய வீராங்கனை ஷரபோவா ஆகியோர் வெற்றி பெற்றனர். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஆர்ஜன்டினாவின் டேவிட் நல் பாண் டியன் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

கிராண்ட்ஸ்லம் அந்தஸ்து பெற்ற 4 வகையான டென்னிஸ் போட்டிகள் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் பழமையானதும், மிகவும் கெளரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் தொடங் கியது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதனிலை வீரரும், நடப்பு சம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஸ்பெயினின் ஜுயன் கார்லோஸ் பெரீரோவை சந்தித்தார். இதில் ஜோகோவிச் 6-3, 6-3, 6 - 1 என்ற நேர்செட்டில் எளிதில் வெற்றி பெற்று 2 வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முன்னணி வீரரான ஆர்ஜென்டினாவின் டேவிட் நல்பாண்டியன் 4-6, 6-7, (4-7), 2- 6 என்ற நேர்செட்டில் செர்பியாவின் திப்சரேவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் மிகைல் யூஸ்னி (ரஷ்யா), வெர்டாஸ்கோ (ஸ்பெயின்), ரஸ்செல் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷ்யா), அனஸ்டாசியா ரோடினோவாவை (அவுஸ்திரேலியா) சந்தித்தார். இதில் ஷரபோவா 6 - 2, 6 - 3 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் 5 முறை சம்பியனான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 1 - 6, 3 - 6 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் வெஸ்னினாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

லி நா வெற்றி

மற்ற ஆட்டங்களில் அமெரிக்க பகிரங்க சம்பியன் சமந்தா ஸ்டோஸர் (அவுஸ்திரேலியா) 6 - 1, 6 - 3 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் நவரோவா வையும், போலந்து வீராங்கனை ராட்வான்ஸ்கா 6 - 3, 6 - 3 என்ற நேர்செட்டில் சுலோவக்கியாவின் ராபாரிகோவையும் சீன வீராங்கனை லி நா 6 - 3, 6- 1 என்ற நேர்செட்டில் கஜகஸ்தானின் பெர்வாக்கையும் தோற்கடித்து 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி