ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 06
நந்தன வருடம் ஆனி மாதம் 13ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY ,JUNE, 27, 2012
வரு. 80 இல. 151
 

ஜனாதிபதி தேர்தலில் போட்டி”: பிரணாப் நாளை வேட்புமனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டி”: பிரணாப் நாளை வேட்புமனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தான் வகித்து வரும் மத்திய நிதியமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்கிறார். மனு தாக்கல் செய்த பிறகு 30ம் திகதி தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார்.

இந்தியாவின் 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 19ம் திகதி நடைபெறுகிறது. டில்லி மற்றும் மாநில தலைநகரங்களில் இதற்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கிறார்கள்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் 76 வயதான மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். முக்கிய எதிர்க் கட்சியான பாரதிய ஜனதா சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகர் சங்மா நிறுத்தப்பட்டு உள்ளார். இவரை அ.தி.மு.க. பிஜு ஜனதா தளம், அகாலி தளம் போன்ற கட்சிகள் ஆதரிக்கின்றன.

இந்நிலையில் போட்டியின்றி ஒரு மனதாக ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும், பிரணாப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறிவருகிறது. இதற்கு பலனில்லாததால் ஜனாதிபதி தேர்தலில் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் நீண்டகால அரசியல் வாதியான பிரணாப், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், நிதியமைச்சர் பதவியில் இருந்தும் விலகுகிறார். இதையொட்டி அவருக்கு பிரிவுபசாரம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது. கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முக்கிய அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர், மத்திய அமைச்சரவையில் பிரணாப் இல்லாதது உணரப்படும். ஜனாதிபதி தேர்தலில் அவர் மகத்தான வெற்றி பெறுவார் என்று வாழ்த்தினார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பிரணாப் பேசினார்.

கூட்டம் முடிந்ததும் அனைவரிடமும் கைகுலுக்கி பிரணாப் விடை பெற்றார். அப்போது அவர் மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்டார். நாளை டில்லியில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை பிரணாப் தாக்கல் செய்கிறார். வேட்பு மனுவை 50 பேர் முன்மொழிய வேண்டும். 50 பேர் வழிமொழிய வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி, மக்களவை தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் பிரணாப் வேட்பு மனுவை முன்மொழிந்துள் ளனர்.

வேட்பு மனு தாக்கல் முடிந்ததும், நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்சித் தலைவர் களை பிரணாப் சந்தித்து ஆதரவு திரட்டு கிறார். இதன் ஒரு கட்டமாக 30ம் திகதி சென்னை வருகிறார். அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோருகிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி