ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 30
நந்தன வருடம் ஆனி மாதம் 07ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JUNE, 21, 2012
வரு. 80 இல. 146
 

பாகிஸ்தான் புதிய பிரதமரை தேர்வு செய்ய பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி உத்தரவு

பாகிஸ்தான் புதிய பிரதமரை தேர்வு செய்ய பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி உத்தரவு

மூத்த தலைவர் மக்தூம் ஷஹாப்தீனுக்கு வாய்ப்பு

பாகிஸ்தானின் புதிய பிரதமரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யுமாறு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானியை அந்நாட்டு நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்ததை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நாளை) மாலை 5.30 க்கு பாராளுமன்ற கீழ் சபை கூடி புதிய பிரதமரை தேர்வுசெய்ய வேண்டும் என ஜனாதிபதி சர்தாரி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரதமர் யூசுப் ராசா கிலானியை பாக். உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தகுதி நீக்கம் செய்தது. அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் தகுதி நீக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிலானி நேற்று முன்தினம் இரவே பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். நீதிமன்ற தீருப்பை ஏற்பதாகவும் அதன்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து கிலானி வெளியேறிவிட்டதாகவும் கிலானியின் வழக்கறிஞர் அயட்சாஸ் அஹ்ஸான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை கருத்தில்கொண்டு ஜனாதிபதி சர்தாரி தனது ரஷ்ய சுற்றுப் பயணத்தை ரத்துச் செய்து கடந்த இரு தினங்களில் அவசர கூட்டங்களை நடத்தினார்.

இதில் நேற்று காலை நடந்த கூட்டத்தில் பிரதமர் பதவிக்கு மூத்த தலைவர் மக்தூம் ஷகாபுதீனை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தலைமையில் நடைபெற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் தேசிய பேரவையையோ அல்லது கீழவையையோ கூட்டி புதிய தலைவரை முறைப்படி தேர்ந்தெடுப்பது என்றும் அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெளியிடவில்லை.

கிலானியின் தீவிர ஆதரவாளராக சகாபுதீன் விளங்குகிறார். கிலானியை போன்று இருவரும் பாகிஸ்தானின் தென் பகுதியில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்.

பஞ்சாபில் ‘செரைகி’ என்ற புதிய மாகாணத்தை உருவாக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு வசதியாகத் தான் பஞ்சாப் பகுதியை சேர்ந்த சகாபுதீனை பிரதமராக்க சர்தாரி தீவிரமாக உள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து கிலானி அமைச்சரவையில் சகாபுதீன் பல துறைகளில் அமைச்சராக பணிபுரிந் துள்ளார். முன்னதாக இவரை வெளியுறவு துறை அமைச்சராக்க கிலானி முயற்சி செய்தார். ஆனால் தடங்கல்கள் எற்படவே ஷா முகமது குரேஷி அப்பதவியில் நியமிக் கப்பட்டார். பின்னர் அவர் நீக்கப்பட்டு தற்போது ரப்பானிகர் அப்பதவியை வகிக்கிறார்.

பிரதமர் பதவி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சவுத்ரி அகமது முக்தார் பெயர்தான் முதலில் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சியான பி. எம். எல். கியூ கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் தான் மக்தூம் ஷஹாப்தீன் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என செய்தி வெளியாகியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி