ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 30
நந்தன வருடம் ஆனி மாதம் 07ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JUNE, 21, 2012
வரு. 80 இல. 146
 

திருமண வாழ்வில் இறைவனின் திருவுளம்

திருமண வாழ்வில் இறைவனின் திருவுளம்

நற்செய்தி நமக்களிக்கும் வாழ்க்கைப் படிப்பினைகள்! “இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்’’

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மக்களுக்குப் போதிக்கின்ற போதும் அற்புதங்களைச் செய்த போதும் மக்கள் அவரில் விசுவாசம் வைத்து முழுமையான நம்பிக்கையில் செயற்பட்டது போல் பரிசேயர்கள் அவரது செயல்களில் குறைகாணவும் அவரை தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளும் வகையில் கேள்விகளைக் தொடுப்பதிலுமே அவதானமாய் இருந்தார்கள்.

யூதேயாவில் மக்கள் மத்தியில் இயேசு கிறிஸ்து அற்புதம் செய்துகொண்டு இருந்த வேளையில் பரிசேயர் அவரைக் குழப்ப முயல்கின்றனர்.

பரிசேயர் அவரை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன்,’’ஒருவர் தன் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?’’ என்று கேட்டனர். அவர் மறுமொழியாக படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார், என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா? என்று கேட்டார். மேலும் அவர் ‘’இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல. ஒரே உடல், ஆகவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்’’ என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து ‘’அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?’’ என்றார்கள். அதற்கு அவர் ‘’உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கி விடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார்.

ஆனால் தொடக்க முதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கி விட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்’’ என்றார்.

அவருடைய சீடர்கள் அவரை நோக்கி ‘’கணவர் மனைவியர் உறவு இத்தகையது என்றால் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது’’ என்றார்கள், அதற்கு அவர் அருள்கொடை பெற்றவர் அன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர்.

வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் ஏற்றுக் கொள்ளட்டும்’’ என்றார்.

திருமணம் புனித உறவு:

ஆண்டவராகிய கடவுள் மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று எனக் கண்டார். வாழ்க்கைத் துணையை ஒவ்வொருவருக்கும் வழங்குபவர் ஆண்டவர் தான். திருமண உறவு என்பது புனிதமானது. அதனால் திருமணமானவர் அனைவருமே நற்பேறு பெற்றவர்கள்.

திருமணத்தில் இணைபவர்கள் இறையருளைப் பெற்றவர்கள் என்பதால் திருமண வாழ்க்கை இனிமையானதாகிறது. திருமண வாழ்வில் பிரச்சினைகள் இல்லை என்பதற்கில்லை. ஆனாலும் இறையருளுடன் அது இனிமையுடனும் வளமானதாயுமிருக்கும்.

திருமணம் செய்து கொள்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இன்னல்களை பரிசுத்த வேதாகமத்தின் 1 கொரியர் 7ம் அதிகாரம் விளக்குகிறது. எனினும் பிரச்சினைகள் துன்பங்கள் வரும்போது ஒருவருக்கொருவர் துணையாகவும் பக்கபலமாகவும் இருப்பதற்குத் தூய ஆவியானவர் துணை செய்வார் என்பதையும் சத்திய வேதம் தெளிவுபடுத்துகிறது.

‘’தகுந்த துணையை உருவாக்குவேன்’’ என்பது மறை வாக்காக இருந்த போதிலும் மனிதர் இப்போதெல்லாம் உலக நாட்டங்களை அடிப்படையாக வைத்தே துணையைத் தேடிக் கொள்கின்றனர்.

தெய்வீகமான திருமண உறவானது இறை நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டது. அதனால் அது உலகம் சார்ந்தவற்றில் அதிக நாட்டம் கொள்ளாததாக இருக்க வேண்டும். பெற்றோர், பெரியோர்கள் மற்றும் உறவினர்களின் எண்ணத்தால் உருவானதாகவும் அமைந்திட வேண்டும்.

வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் ஒரு சம்பவம் கூறப்படுகிறது. விசுவாசத்தின் தந்தை என போற்றப்படும் ஆபிரகாம் தமது மகன் ஈசாக்கிற்கு பெண் பார்க்கத் தம் வீட்டு வேலைக்காரர்களில் மூத்தவரும் தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை அனுப்புகிறார். ஆபிரகாம் அவரிடம் என் சொந்த நாட்டிற்குப் போய் என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண் கொள்வாய் என்றார். இதனைத் தொடக்க நூல் 24:4 கூறுகிறது.

துணையைத் தேடும்போது சில விடயங்களில் கவனம் செலுத்தப்படுவது முக்கியம். செபமும், இறை நம்பிக்கையும் உள்ள குடும்பம் வஞ்சகம், ஏமாற்றல் போன்ற தீய வழிகளில் செல்வம் சேர்க்காத குடும்பம், சொந்த வீட்டில் பண்பாளனாக வாழும் நிலை, வீட்டுக் காரியங்களிலும் வேலைகளிலும் ஆர்வம் கொள்ளும் தன்மை, ஒற்றுமை, அன்பு, சகிப்புத் தன்மையுடனான நிலை போன்றவை இவையாகும். சிறந்த வாழ்க்கைக்கு இது அடித்தளமாக அமையும். வாழ்வு அமைதி நிறைந்ததாக இருக்கும்.

ஆண்டவரே என் மனதிற்குப் பிடித்த துணையைத் தாரும் என்று வேண்டுதல் செய்வதை விடுத்து ஆண்டவரே நீர் எனக்காகத் தேர்ந்து கொண்ட துணையை நான் கண்டடைய அருள்தாரும் என வேண்டுதல் செய்ய வேண்டும்.

எதையாவது வேண்டி அடம் பிடிக்காமல் இறைவனின் திருவுளத்தை பெற்றோர்கள் நாடினால் பிள்ளைகளின் திருமணம் தடையின்றி நடைபெறும். ஆண்டவரே உமது எண்ணம் என்னில் நிறைவேறட்டும். என மன்றாடுவது இறையாசியைப் பெற்றுத் தரும்.

மரியாளுக்கும் ஜோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன்னரே மரியாள் கருவுற்றிருந்தமை தெரிய வந்தது. மரியாள் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.

மரியாளுக்கு நிச்சயம் பண்ணப்பட்டிருந்த ஜோசேப்பு நேர்மையானவராகக் காணப்பட்டார். அவரோ மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே ஆண்டவரின் தூதர் அவரது கனவில் தோன்றி ‘’ஜோசேப்பே தாவீதின் மகனே, உன் மனைவி மரியாளை ஏற்றுக் கொள்ளத் தயங்க வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான்’’ என்றார்.

அதன் பின்னர் ஜோசேப்பு ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். இதனை பரிசுத்த வேதாகமத்தின் மத்தேயு முதலாம் அதிகாரம் எமக்குத் தெரிவிக்கிறது.

ஒருவரிலொருவர் விசுவாசம்:

திருமண வாழ்வில் ஆண்டவர் முழுமையான அர்ப்பணத்தையே எதிர்பார்க்கின்றார். தன்னலம் மனதில் இருக்குமானால் பின்னர் அது பிடிவாதமாகும். அதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம்.

கணவனும் மனைவியும் ஒருவரில் ஒருவர் முழுமையான விசுவாசம் வைக்க வேண்டும். ஒரே உடலும் ஒரே மனமுமாய் மாறவேண்டும். அவ்வாறு மாறவில்லை என்றால் திருமணவாழ்வு கசந்துவிடும்.

படைப்பின் தொடக்கத்திலேயே இறைவன் ஆணும் பெண்ணுமாக மனிதனைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய், தந்தையை விட்டு விட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல.

ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என மத்தேயு நற்செய்தி கணவன்-மனைவி உறவின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது.

திருமண உறவு என்பது குடும்பத்தவருக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மையுள்ளதாக அமைந்திட வேண்டும் என்பதே இறைவனின் திருவுளமாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி