ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 30
நந்தன வருடம் ஆனி மாதம் 07ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JUNE, 21, 2012
வரு. 80 இல. 146
 

பாலைவனத்தின் குரலொலி இயேசுவின் முன்னோடி தூய திருமுழுக்கு யோவான்...

பாலைவனத்தின் குரலொலி இயேசுவின் முன்னோடி தூய திருமுழுக்கு யோவான்...

24ம் திகதி ஸ்நாபக அருளப்பரின் திருநாள்

ஜீத்தோலிக்க திருச்சபை தூய திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவை யூன் மாதம் 24 ஆம் திகதி கொண்டாடுகின்றது. தூய திருச்சபையானது புனிதர்களின் நினைவு நாளையே இறந்தநாள். அவர்களின் திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றது.

ஆயினும் மூவருக்கு மட்டும் அவர்களது பிறந்த நாளை பெருவிழாவாக கொண்டாடுகின்றது. (1) இயேசுவின் பிறப்பு பெருவிழா (டிசம்பர் 28) அன்னை மரியாளின் பிறப்பு (செப் 8) (3) தூய திருமுழுக்கு யோவானின் பிறப்பு (யூன் 24) இதில் தூய திருமுழுக்கு யோவானின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு பின்வரும் காரணங்கள் ஏதுவாக உள்ளன.

தனது பிறப்பில் இவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். மெசியாவின் வருகையைப் பற்றி முன்னறிவித்தார். அந்த மெசியாவை மீட்பராக ஏற்றுக் கொள்ள மக்களைத் தயார்படுத்தினார். நமது ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவால் பெண்களிடம் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானுக்குமேலான எவருமே தோன்றவில்லை” (மத்.11:11) என்று போற்றப்பட்டார்.

“கடவுள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதமான பணியைக் கொடுத்திருக்கிறார். அப்பணியை நான் மட்டுமே செய்து முடிக்க வேண்டும் மற்றவர்கள் அன்று” என்று கர்தினால் நியூமன் கூறுகிறார்.

இதற்கேற்ப புனித திருமுழுக்கு யோவானுக்கும் கடவுள் தனிப்பட்ட உயர்ந்த மற்றும் உன்னதமான பணியைக் கொடுக்கிறார். இயேசுவுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்து கடவுள் வழியை ஆயத்தம் செய்து மக்களை கடவுளிடம் அழைத்து அப்பணியாகும்.

பிறப்பிலே அற்புதம் அக்களிப்பு:

சக்கரியா மற்றும் எலிசபெத் இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில் ஆண்டவருடைய தூதர் மூலமாக அவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும் கடவுளின் வார்த்தையில் நம்பிக்கை வைத்ததால் கடவுள் அருளால் அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது.

ஆனால் சக்கரியா நம்பாததால் அவருடைய நா பேச்சுத்தன்மை இழந்தது. கடவுளின் வார்த்தை நிறைவேறியுடன் கடவுள் கொடுத்த பெயரைக் குழந்தைக்கு வைததவுடன் சக்கரியா மீண்டும் பேசும் திறனை அடைந்து கடவுளை புகழ்ந்து பாடினார்.

வானதூதரின் வழியாக எலிசபெத் கருவுற்றிருப்பதைக் கேள்விப்பட்ட மரியாள் அவருக்கு உதவி செய்ய விரைந்து செல்கிறார். வீட்டிற்கு வந்தவுடன் எலிசபெத்தை வாழ்த்துகிறார். அப்பொழுது திருமுழுக்கு யோவானும் குழந்தை இயேசுவும் சந்திக்கின்றனர். கருவிலேயே கடந்த இந்தச் சந்திப்பால் எலிசபெத்தின் வயிற்றில் இருந்த திருமுழுக்கு யோவான் அக்களிப்பால் துள்ளுகிறார். “இயேசுவுக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டு அவருக்கு வழியை ஆயத்தம் செய்யப்போகிறேன்” என்பது தான் அந்தத் துள்ளலுக்கு காரணமோ? ஆம் கருவறையில் இருந்து கொண்டு கர்த்தரின் வருகையை சுட்டிக்காட்டினார்.

பணியும் எதிர்ப்பும்

“மனந்திரும்புங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கிவிட்டது” (மத்.3:2) என்று கூறி திருமுழுக்கு யோவான் தனது பணியைத் தொடங்குகிறார். இவரைப் பற்றித் தான் “ஆண்டவரது வழியை ஆயத்தப்படுத்துங்கள் அவர் தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள் எனப் பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் கேட்கிறது” என்று எசாயா இறைவாக்கினர். (எசா 40:3) முன்னறிவித்தார். பரிசேயம் சதுசேயருள் பலரும் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர்களை “விரியன் பாம்புக் குட்டிகளே” என்று சாகுகிறார். நீங்கள் மனந்திருந்திவிட்டீர்கள் என்றால் அதனைச் செயலில் காட்டுங்கள்” என்று திருமுழுக்கு யோவான் கூறுகிறார்.

வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு நெறிமுறைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுகிறார். “இவர் தான் மெசியாவோ” என்று தங்களுடைய உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருக்க “நான் மெசியா அல்லேன்” என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். “அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்ல நான் தகுதியற்றவள்” அவர் வளர வேண்டும் நாளோ குறைய வேண்டும் என்ற வார்த்தைகளிலிருந்து திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சி வெளிப்படுகிறது. ஒரு பெண்ணுக்காக ஏரோது திருமுழுக்கு யோவானைச் சிறையில் அடைத்தான். ஏரோது தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான்.

அதற்கு திருமுழுக்கு யோவான் நீ அவளை வைத்திருக்கக் கூடாது என்று அரசனிடம் அவனுடைய தவறைச் சுட்டிக்காட்டினார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார் ஆனால் நெற்றிக் கண் திறப்பினும் குற்றமே குற்றம் என்று வாதிட்ட நக்கீரனைப் போன்று யோவானும் இறுதி வரையில் தன்னுடைய கொள்கையில் நிலைத்துநின்று அதற்காகத் தன் உயிரைக் கொடுத்தார். ஏரோது அரசனின் பிறந்த நாளின் போது எரோதியாளின் மகள் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்ததற்காகப் பரிசுப் பொருளாக புனித திருமுழுக்கு யோவானின் தலைகேட்கப்பட வேறு வழியின்றி ஏரோதன் யோவானின் தலையை வெட்ட உத்தரவிட்டான்.

“எப்படியும் வாழலாம் எங்கேயும் வாழலாம் எதற்காகவும் வாழலாம்” என்றெல்லாம் சொல்லக் கேட்கும் போது ஏனோ சரியாகவே தெரிகிறது ஆனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று இலட்சியம் இருக்கும் போது தான் இம் மண்ணில் பிறந்ததற்கே அர்த்தம் இருக்கிறது. மீட்பருக்கு வழியை ஆயத்தம் செய்து மக்களை அவரிடம் கொண்டு வருவதே தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் தான் புனித திருமுழுக் யோவான்.

எம்மிடம் இலட்சியம் இருக்கின்றதா?

இன்று உலக மயமாக்கல் மற்றும் மாறி வரும் கலாசார சூல் நிலையில் நாம் எவ்வாறு இயேசுவுக்காகச் சான்று தரப் போகிறோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எவ்வாறு புனித திருமுழுக்கு யோவான் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தாரோ? அவ்வாறே நாமும் எளிமையாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உலக செல்வங்கள் முக்கியமானது தான் ஆனால் செல்வம் சேர்ப்பதிலேயே கவனமாக இருந்து விட்டு நம்முடைய ஆன்மாவை இழந்து விடக் கூடாது. எங்களுக்கு இயேசுவைக் கொடுங்கள் இயேசுவை மட்டுமே கொடுங்கள்” என்று அருளாளர் அன்னை தெரசா ரோமையிலுள்ள குருக்களுக்கும் ஆயர்களுக்கும் உரையாற்றும் போது கூறினார். புனித திருமுழுக்கு யோவான் மீட்பை பற்றி மட்டுமே மக்களுக்கு அறிவித்தார். எவ்வாறு திரு முழுக்கு யோவான் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் ஒரு பாலமாக அமைகிறாரோ அவ்வாறே நாமும் கடவுளுக்கும் உலகில் உள்ள மற்ற எல்லா மக்களுக்கும் பாலமாக அமைய வேண்டும் நாம் வாழ்வது ஒரு முறை தான் அந்த வாழ்க்கையை மற்றவருக்கு பயனுள்ள விதத்தில் அமைத்து கடவுகளுக்கு என்றுமே சாட்சிகளாக மாறுவோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி