ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 30
நந்தன வருடம் ஆனி மாதம் 07ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JUNE, 21, 2012
வரு. 80 இல. 146
 
90 அரச நிறுவனங்களில் 1000 கோடி ரூபா மோசடி அம்பலம்

இரகசிய முதலீடுகள் தொடர்பில் கணக்காய்வுத்துறை விசாரணை:

90 அரச நிறுவனங்களில் 1000 கோடி ரூபா மோசடி அம்பலம்

கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் பல அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை செலுத்தாது இரகசியமாக பல்வேறு வீண் விரயங்களுக்கு செலவிடுவதுடன், அவைகளினால் சுமார் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தொகை வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சுமார் 90 கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு தெரியாதவாறு நிதி கொடுக்கல் வாங்கல் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

நிறுவனத் தலைவர்கள் பொது திறைசேரிக்கு நிதி வழங்காமையினால் திறைசேரி அவர்களிடம் அடிக்கடி அறிவித்த போதிலும் அவர்கள் போலி காரணங்களைக் கூறி நிதி வழங்கு வதை தாமதப்படுத்தி வருவதாக பொது திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் நிதியினை நிலையான வைப்புக்கள், திறைசேரி உண்டியல்கள் என்பவற்றிலும் இரகசியமான முறையில் முதலீடு செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

இதன் பிரகாரம், கடந்த மூன்று வருட காலப் பகுதியில் ஒரு கம்பனியானது நிலையான வைப்புக்கள் மூலம் சுமார் இருநூறு மில்லியன் ரூபா வட்டியை வருமானமாக பெற்றுள்ளதுடன், அரசாங்கத்திடமிருந்து நிதியினைப் பெற்று முன்னேற்றம் அடைகின்ற கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள் என்பன வருமானம் உழைத்து பொது திறைசேரிக்கு கட்டாயமாக நிதியினை பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.

எனினும் இவ்வாறான நிறுவனங்களின் தலைவர்கள் பல வருட காலமாக பல்வேறு விதமான மோசடிகள் மூலம் கோடிக்கணக்கான தொகையினை வீண்விரயம் செய்து வந்துள்ளதாகவும் கணக்காய்வுத் துறை தெரிவிக்கின்றது.

பொது திறைசேரியில் நிதி இல்லாத சந்தர்ப்பங்களில் அரசாங்கம் பல்வேறு வழிகளில் கடன் பெற்று வரும் நிலையில் இந்த நிறுவனங்கள் அதிகமான தொகையினை யாருடைய அனுமதியின் மீது நிலையான வைப்புக்களில் வைப்புச் செய்துள்ளன என்பது தொடர்பாகவும் அரச கணக்காய்வுத் துறை கேள்வி எழுப்புகின்றது.

பொது திறைசேரிக்கு நிதியினை வழங்காமை மற்றும் திருட்டுத்தனமான முறையில் நிலையான வைப்பிலிட்டு நிதி சம்பாதித்தல் என்பன தொடர்பாக அரச கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் அந்த நிறுவனங்களுக்கு கணக்காய்வு விசாரணைகளை அனுப்பியுள்ள போதிலும் அவற்றிற்கு பதிலளிக்காது நழுவி வருவதாகவும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நிதியினை திறைசேரிக்கு வழங்காமை தொடர்பாக திறைசேரி அதிகாரிகள் கலந் துரையாடல்களை நடாத்தி அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் ஊடாக கோரிக்கைகளை விடுத்துள்ள போதிலும் இந்நிறுவனங்கள் அதற்கேற்ப முறையாக செயற்பட தவறியுள்ளன. (ஏ-k)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி