ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 30
நந்தன வருடம் ஆனி மாதம் 07ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JUNE, 21, 2012
வரு. 80 இல. 146
 

பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக மோடி இருக்கக் கூடாது

பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக மோடி இருக்கக் கூடாது

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கக் கூடாது என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மறைமுகமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டில் மக்களவை பொதுத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம், இப்போதே நரேந்திர மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள நிதீஷ் குமார் ''தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மதச் சார்பின்மையில் மிகுந்த நம்பிக்கை உள்ளவராக இருக்கு வேண்டும். இந்தியா பல்வேறு மதம், மொழி, கலாசாரத்தை உள்ளடக்கியது. அதன் தலைவராக வருபவர் மேற்கண்ட விடயங்களில் தனிப்பட்ட முறையில் மோசமான குற்றச்சாட்டுக்கு உள்ளானவராக இருக்க கூடாது.

மக்கள் நம்பிக்கையைப் பெற கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். வளர்ந்த மாநிலத்தில் இருந்து வந்தவராக இல்லாமல், வளர்ச்சி குறைந்த மாநிலங்களில் நிலை குறித்து எண்ணிப் பார்க்கும் நபராகவும் இருக்க வேண்டும். அப்போது தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

பிரதமர் பதவி ஆசையில்லை:

பிரதமர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்ற விருப்பமோ, அந்தப் பதவியை அடைய வேண்டுமென்ற ஆசையோ எனக்கு இல்லை. கூட்டணியில் உள்ள பெரியகட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமராக வேண்டும். கூட்டணியில் உள்ள கட்சி என்ற முறையில் வெற்றிக்காகப் பாடுபடுவேன் என்று நிதீஷ் கூறியுள்ளார்.

மோடி பதில்

பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக மோடி இருக்கக் கூடாது என்ற நிதீஷ் குமாரின் கருத்துக்கு நரேந்திர மோடி நேரடியாக பதிலளிக்கவில்லை.

இது தொடர்பாக டுவிட்டர் இணையத் தளத்தில் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை மேற்கோள் காட்டி மோடி விளக்கமளித்துள்ளார். ''உறுதி என்பது குணநலனால் ஏற்படுகிறது. குணநலம் கர்மாவால் உருவாகிறது. எனவே கர்மா, என்பதே உறுதியின் ஓர் அம்சம்தான்'' என்று கூறியுள்ளார். இதுவே நிதீஷின் கருத்துக்கு அவரது பதிலாக அமைந்துள்ளது.

மாலையில் மீண்டும் டுவிட்டரில் கருத்தைப் பகிர்ந்து கொண்ட மோடி, ''நாள்தோறும் விவேகானந்தரின் பொன்மொழிகளை இணையத் தளத்தில் பகிர்ந்து கொள்வது வழக்கம். பரபரப்பு செய்திகளை வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக தகவல்களை தவறாக அர்த்தம் கற்பித்து வெளியிடக் கூடாது என்று ஊடகத் துறை நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்''என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்த விடயத்தில் இப்போதைக்கு கருத்துத் தெரிவிக்காமல் இருப்பதே நல்லது என்று மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி