சரித்திரப் பிரசித்தி பெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ் லிஸ்
சரித்திரப் பிரசித்தி பெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ் லிஸ்
பீ. எம். முக்தார் பேருவளை விசேட நிருபர்
பேருவளை மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியாவில் 133வது
புஹாரி தமாம் மஜ்லிஸ் 21-6-2012 திகதி காதிரியதுல் நபவியா தரீக்காவின் ஆன்மீகத்
தலைவர் சங்கைக்குரிய அஷ்செய்கு அஹம்மத் ஆலிம் தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு இக்
கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஹதீஸ் விளக்கங்களைத் தொகுத்துப் பாதுகாக்க
வேண்டும் என்ற உண்மை உணரப்படவில்லை. நபி (ஸல்) உயிரோடு இருந்த காரணத்தினால் அன்று
மக்கள் மத்தியில் எழுந்த பிரச்சினைகளுக்கு அவரே விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்களின் வபாத்துக்குப் பின்னர் ஹதீஸ்களின் முக்கியத்துவம்
உணரப்பட்டன. புனித அல்குர்ஆனை தெளிவாக விளங்கிக் கொள்ளவும், இஸ்லாமிய திட்டங்களை
நன்கு அறிந்து கொள்ளவும் ஹதீஸ்கள் தேவைப்பட்டன. இதனால் காலக் கிரமத்தில் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுப்புகள் வெளிவர ஏதுவாயின. இவற்றுள்
தலையாயதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது "புனித ஸஹீஹுல் புஹாரி"
எனும் ஹதீஸ் பேழையாகும்.
அபூஅப்துல்லாஹ் முஹம்மதிப்னு இஸ்மாயிலுல் புஹாரி (றஹ்) அவர்களால் தொகுக்கப்பட்ட
மேற்படி நூல் அல்குர்ஆனுக்கு அடுத்தபடியாக சிரமேற்கொண்டு கருதப்பட்டு
போற்றப்படுகிறது. இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களின் வாய்வந்த இலட்சக்கணக்கான
ஹதீஸ்களைத் தொகுத்து 7275 ஹதீஸ்களை மட்டுமே இமாம் புஹாரி (றஹ்) அவர்கள் தமது ஸஹீஹுல்
புஹாரி கிரந்தத்தில் எழுதியுள்ளார். மேற்படி புஹாரிக் கிரந்தம் பராயணம் செய்யப்பட்டு
விளங்கப்படுத்தும் மஜ்லிஸ்கள் உலகின் நாலா பகுதிகளிலும் இடம்பெற்று வருகிறது.
இந்த அடிப்படையில் சரித்திரப் பிரசித்தி பெற்ற பேருவளை மாளிஹாசேனையில் அமைந்துள்ள
பைதுல் முபாரக் முஸ்தபவீயா புஹாரி தக்கியாவில் இற்றைக்கு 133 வருடங்களுக்கு முன்னர்
(ஹிஜ் ரத் ஆண்டு 1301 ஜமாதுல் ஆகிர் மாதம் பிறை 27ல்) ஆரம்பம் செய்யப்பட்ட புஹாரி
மஜ்லிஸ் அல்லாஹ்வின் கிருபையால் நடை பெற்று வருகிறது.
மேற்படி மஜ்லிசின் 133வது வருட மஜ்லிஸ் கடந்த மே மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
அதிகாலை சுபஹ் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது. (வெள்ளிக்கிழமை தவிர) 30 நாட்கள்
மஜ்லிஸ் நடைபெற்று இம் மாதம் 21ம் திகதி பகல் பெரிய கந்தூரியோடு நிறைவு பெறுகிறது.
மாகான் சேகு முஸ்தபா (றஹ்) அவர்கள்
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு புனித பேருவளை நகரிலிருந்து தான் ஆரம்பமானது என்பதை
எவரும் மறுக்கவோ மறைக்கவோமாட்டார்கள். இந்த பேருவளை நகரின் மூத்த குடியில் ஆதம்
மரைக்காரின் புதல்வரான சங்கைக்குரிய மாகான் சேகு முஸ்தபா வலியுல்லாஹ் பிறந்தார்கள்.
இந்த நாட்டின் சமய வரலாற்றில் அன்னார் ஓர் உயர்ந்த ஸ்தானத்தை பிடித்துக்கொண்டார்.
அன்னார் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அரபு இலக்கண, இலக்கிய, பிக்ஹு சட்டதிட்டங்கள்
போன்ற இஸ்லாமிய மத அறிவியல் துறையில் பாண்டித்தியம் பெற்று திகழ்ந்தார். இந்தியாவில்
உள்ள காயல் பட்டணத்தில் இத்துறையில் அறிவு பெற்று நாடு திரும்பி பேருவளை மாளிகாசேணை
பைதுல் முபாரக் முஸ்தவியா புஹாரித் தக்கியாவை தனது தலைமை ஸ்தானமாகவும்,
ஆய்வுகூடமாகவும் அமைத்து இஸ்லாமிய பணிபுரியும் காலத்தில் சங்கைக்குரிய முபாரக்
மெளலானா என்ற பெரியாரின் சகவாசம் கிடைத்தது.
சங்கைக்குரிய சேகு முஸ்தபா (றஹ்) அவர்களின் சேவைக்கு இவர்கள் துணை புரிந்து சிறிது
காலத்தில் முபாரக் மெளலானா தென்னிலங்கையில் காலி நகரில் இறையடி சேரவே தென் அரேபியர்
யெமன் நாட்டைச் சேர்ந்த அஹ்தலி மெளலானா அவர்களின் சகவாசம் கிடைத்து பேருவளை
மாளிகாசேனை புஹாரித் தக்கியாவில் புஹாரி மஜ்லிஸ் ஆரம்பம் செய்யும் பாக்கியம்
கிடைத்தது. சேகு முஸ்தபா (றஹ்) அவர்களினால் அறிமுகப்படுத்திய நபவியதுல் காதிரியதுல்
முஸ்தபவீயா எனும் ஆத்ம ஞானவழி (தரீக்கா) இன்றும் இலங்கையின் சுமார் இருபது ஊர்களில்
பின்பற்றப்பட்டு வருவது சுன்னத் ஜமாத் கொள்கைகளுக்கு உயிரூட்டக்கூடிய விடயமாகும்.
சேகு முஸ்தபா அவர்கள் மெய்ஞானியாகவும் புலவராகவும் திகழ்ந்தார். அன்னவரினால்
இயற்றப்பட்ட மீசான் மாலை அரபுத் தமிழ் கவிதை புகழ் பெற்றதாகவுள்ளது. அவர் பல
இஸ்லாமிய பத்வா நூல்கள், இஸ்லாமிய சட்ட திட்டங்கள், முனாஜாத்துக்கள் போன்றவற்றை
அரபியிலும், அரபுத் தமிழிலும் வெளியிட்டார்கள். அஹ்காமுல் இகம் என்ற பெயரில் அரபுத்
தமிழ் அச்சுக்கூடத்தை நிறுவி அதன் மூலம் அரபுத் தமிழில் பல ஆக்கங்களை வெளியிட்டார்.
அத்தோடு அல்குர்ஆனின் பல அத்தியாயங்களை அரபுத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
இறுதியில் ஹஜ் கடமைக்காக புனித மக்கா சென்ற போது மக்காவில் வபாத்தாகி கதீஜா நாயகி
பாட்டியாரின் சமாதிக்கு மேல் பக்கமாக நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அரபியல்லாத
ஒருவரை அந்த இடத்தில் நல்ல டக்கம் செய்யப்பட்டது முதல் தடவையாகும். மக்கா மதீனா
போன்ற முஸ்லிம் நாடுகளில் சேகு முஸ்தபா (றஹ்) அவர்களின் சன் மார்க்க அறிவுத் திறன்
பலராலும் புகழப்பட்டது.
சங்கைக்குரிய சேகு அஹமதி ஆலிம் அவர்கள் ஹிஜ்ரி 1412 முதல் இன்று வரை மிகச் சிறப்பாக
தலைமை தாங்கி நடாத்தி வருகிறார். சங்கைக்குரிய சேகு முஸ்தபா நாயகத்தின்
குடும்பத்தைச் சேர்ந்த பரம்பரையினர் புனித புஹாரி மஜ்லிசை புஹாரி தக்கியாவில்
சிறப்பாக நடாத்தி வருவது அல்லாஹ்வின் கிருமையும், நபி (ஸல்) அவர்களின்
திருப்பொருத்தமும் என்றே கூற வேண்டும். புனித மஜ்லிஸ் எதிர்காலத்திலும் மிகச்
சிறப்பாக நடைபெற அல்லாஹ் அருள் புரிவானாக.