ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 22
நந்தன வருடம் வைகாசி மாதம் 31ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY ,JUNE, 13, 2012
வரு. 80 இல. 139
 

நுவரெலியா லவர்ஸ் லீப் நீர்வீழ்ச்சி பாதுகாக்கப்பட வேண்டுமென கோரிக்கை

நுவரெலியா லவர்ஸ் லீப் நீர்வீழ்ச்சி பாதுகாக்கப்பட வேண்டுமென கோரிக்கை

நுவரெலிய நகரின் அணிகலன்களாக விளங்கும் உள்ளூர் வெளியூர் உல்லாசப் பிரயாணிகளை வெகுவாகக் கவர்ந்துவரும் நுவரெலிய பேதுருதாலகாலை மலைச் சாரலின் கிழக்கு பிரதேசத்தின் அடிவாரத்தில் விழும் 99 அடி உயர லவர்ஸ் லீப் நீர் வீழ்ச்சி படிப்படியாக வற்றிவரும் அபாயத்தை எதிர்நோக்குகிறது.

கடந்த 1884ஆம் வருடம் இந்நீர் வீழ்ச்சியின் நீரைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று பியர் குடி வகையை உற்பத்தி செய்து வந்தது. ஆயினும் நீர் வீழ்ச்சியின் நீர் குறைந்துள்ளது என்ற காரணத்தை முன்வைத்து அந்த பியர் தயாரிப்பு தொழிற்சாலை 2003ஆம் ஆண்டு மூடப்பட்டது.

நுவரெலிய, ஹாவாஎலிய, பொரலந்த, புளுஎல, வஜிரபுர, வேட்மெக்லம் மாவத்தை ஆகிய பிரதேசப் பகுதி மக்கள் இந்நீர் வீழ்ச்சியிலிருந்தே குடிநீரைப் பெற்று வந்தனர்.

இந்நீர்வீழ்ச்சியின் ஆரம்ப ஸ்தானத்தில் சிலர் சட்ட விரோதமான முறையில் பெரிய குழாயைப் பொருத்தி நீரை திருப்பிபெற்று வருவதால் இந்நீர் வீழ்ச்சியின் நீர் படிப்படியாக வெகுவாக குறைந்து போயுள்ளதாக இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் கடும் வரட்சி நிலையைத் தொடர்ந்து நீர் வீழ்ச்சியின் நீர் வரண்டு போகும் நிலை கவலைக் குரிய விடயமாகும்.

நீர் வீழ்ச்சியின் அழகும், வனப்பும், பொலிவும் சிதைக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்டோர் இது விடயத்தில் ஆவன மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைக்கு வழி சமைப்பார்களா? (ஐ-ஞ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி