சியாச்சினில் இராணுவத்தை மீளப் பெற இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
சியாச்சினில் இராணுவத்தை மீளப் பெற
இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
இமயமலையில் உள்ள சியாச்சென் பகுதி உலகிலேயே உயரமான போர்முனையாக கருதப்படுகிறது.
எங்கும் பனிப்பாறை சூழ்ந்த இந்த சியாச்சென் பகுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும்
பாதுகாப்புக்காக தங்கள் படைகளை நிறுத்தி வைத்துள்ளன. கடும் பனிப்பொழிவையும்
பொருட்படுத்தாமல் இரு நாட்டு வீரர்களும் தங்கள் பகுதியில் முகாம் அமைத்து பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், சியாச்சென் பகுதியில் கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி பாகிஸ்தான் இராணுவ
முகாம் ஒன்றின் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அந்த முகாம் அடியோடு
நாசம் ஆனது. அதில் இருந்த 139 இராணுவ வீரர்கள் பலியானார்கள். இதைத் தொடர்ந்து,
சியாச்சென் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படைகளை இரு நாடுகளும் மீளப் பெற வேண்டும்
என்று பாகிஸ்தான் யோசனை தெரிவித்தது.
பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி தனிப்பட்ட சுற்றுப் பயணமாக இந்தியா வந்திருந்தபோது இது
குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேசினார். ஆனால் அப்படி இராணுவ வீரர்களை மீளப்
பெற்றால், கார்கில் ஆக்கிரமிப்பு போன்ற ஒரு சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட வாய்ப்பு
இருப்பதாக இந்தியா கருதுகிறது. இதனால் படைகளை மீளப் பெறும் யோசனையை இதுவரை
ஏற்கவில்லை. பாதுகாப்புக்கான மந்திரிசபை குழு கடந்த வியாழக்கிழமை கூடி இந்த
பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தியது.
இந்த நிலையில், சியாச்சென் மலைப் பகுதியில் இருந்து இரு நாடுகளும் படைகளை மீளப்
பெறும் பிரச்சினை தொடர்பான 2 நாள் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில்
நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், இந்தியாவின் சார்பில் பாதுகாப்பு துறை செயலாளர்
சசிகாந்த் சர்மா தலைமையிலான குழுவினரும், பாகிஸ்தான் தரப்பில் அந்த நாட்டின்
பாதுகாப்பு துறை செயலாளர் நர்கீஸ் சேத்தி தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர்.
சியாச்சென் பகுதியில் இரு நாடுகளும் தங்கள் இராணுவ வீரர்களை நிறுத்தி
வைத்திருப்பதில் உள்ள பிரச்சினைகள், அவர்களை மீறப் பெற்றால் ஏற்படும் சூழ்நிலைகள்
போன்றவை குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்தும்
நடைபெறுகிறது.