15வது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி நேற்று கோலாகலமாக நிறைவு
15வது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி நேற்று கோலாகலமாக நிறைவு
பதக்கப்பட்டியலில் சீனா முதலிடம்
இலங்கைக்கு 6 பதக்கங்கள்
(ஏ.ஆர். பரீத்)
15வது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் இறுதிநாளான நேற்று இடம்பெற்ற 4x400
பெண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனைகள் 2ம் இடத்தைப் பெற்று
வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றனர்.
இதேவேளை முதலிடத்தை சீனாவும், 3ம் இடத்தை இந்தியாவும் பெற்றன.
இதேவேளை இப்போட்டிகளில் இடம்பெற்ற ஆண்களுக்கான 4x400 அஞ்சலோட்டப் போட்டியில் ஜப்பான்
முதலிடத்தையும் இரண்டாமிடத்தை சவூதி அரேபியாவும் பெற்றன. ஆனால் இலங்கை வீரர்கள் 4ம்
இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 15வது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி நேற்று
கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் வைத்து கோலாகலமாக நிறைவு பெற்றது.
இறுதிநாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன,
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின்
தலைவர் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். கொழும்பு சுகததாச
விளையாட்டு அரங்கில் கடந்த 9ம் திகதி பிரதமர் தி.மு. ஜயரத்ன தலைமையில் மிகவும்
பிரமாண்டமான முறையில் ஆரம்பமான இந்தப் போட்டி நிகழ்வுகள் 4 தினங்கள் இடம்பெற்றன.
இலங்கை சார்பாக இந்தப் போட்டியில் 110 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர். இலங்கைக்கு
400 மீற்றர் ஆண்கள், பெண்கள் போட்டியில் தங்கப் பதக்கமும் உயரம் பாய்தலில் வெள்ளிப்
பதக்கமும், 4x400 பெண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 110
மீற்றர் தடைதாண்டி ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும், 3000 மீற்றர் தடைதாண்டி
ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் கிடைக்கப்பெற்றன.
இலங்கைக்கு 15வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 18 வருடங்களின் பின் தங்கப் பதக்கம்
பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் தங்கம் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும் வெள்ளி,
வெண்கலப் பதக்கம் பெற்றவர்களுக்கு தலா 3 இலட்சம், 1 1/2 இலட்சம் ரூபா பரிசும்
வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
இதேவேளை கேகாலை மாவட்டத்தில் இருந்து 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற
ஷிவந்திக்கு சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் 5 இலட்சம் ரூபா பரிசு வழங்குவதாக
அறிவித்திருந்தார். இதேவேளை 3வது நாள் போட்டியைக் கண்டு களிப்பதற்காக ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ சுகததாச விளையாட்டு அரங்கிற்கு திடீரென சென்று இலங்கை வீரர்களுக்கு
பாராட்டுத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இம்முறை அதிகூடிய பதக்கங்கள் பெற்று சீனா முதலிடத்திலும், சீன தாய்பே 2வது
இடத்திலும் உள்ளன.
இதேவேளை இம்முறை இந்தப் போட்டியில் பங்கேற்க 33 நாடுகளில் இருந்து 700 மேற்பட்ட வீர,
வீராங்கனைகள் பங்கேற்றனர். அத்துடன் நேற்று இடம்பெற்ற 5 ஆயிரம், 3 ஆயிரம் மீற்றர்
ஓட்டப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர்.