ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 07
நந்தன வருடம் வைகாசி மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,MAY, 29, 2012
வரு. 80 இல. 126
 
சமதர்ம யுகத்தை நோக்கி மக்களை அழைத்துச் செல்லும் வெற்றிப் பயணம்

சமதர்ம யுகத்தை நோக்கி மக்களை அழைத்துச் செல்லும் வெற்றிப் பயணம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலில் பிரவேசித்து 42 ஆண்டுகள் கடந்த ஞாயிறன்று நிறைவு பெற்றது. 1970 ஆம் ஆண்டில் 24 வயது வாலிபனாக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை இங்கு தருகின்றோம்.

1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திகதியன்று, பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட மகாதேசாதிபதியின் சிம்மாசன பிரசங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து, அன்றைய பாராளுமன்றத்தில் வயதில் குறைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். அப்போது அவருக்கு வயது 24. மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

இன்று நான் மகாதேசாதிபதி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து பேச விரும்புகிறேன். கடந்த 5 ஆண்டு காலம் இந்நாட்டின் துன்ப துயரத்தில் ஆழ்ந்திருந்த சுமார் ஒரு கோடி மக்களுக்கு நல்வாழ்வையும், விமோசனத்தையும் பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் கடந்த பொதுத் தேர்தலில் எங்கள் கட்சி மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

அமைதியாக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த இந்த மக்களுக்கு நாம் அடைந்த வெற்றி அவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றும் மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளது. இந்த வெற்றி முழு உலகத்தையே பேராச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மாபெரும் சாதனையை ஏற்படுத்திய எங்களுடைய மக்களின் சார்பில், அரசாங்கத்தின் சிம்மாசன பிரசங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையை முன்மொழியும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது குறித்து நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

இது தென்னிலங்கையிலுள்ள பெலியத்த தொகுதியிலுள்ள 46 ஆயிரம் மக்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாக நான் நினைக்கிறேன். இந்த உன்னதமான பாக்கியத்தை எனக்கு பெற்றுக்கொடுத்த பெலியத்த தொகுதியின் மக்களுக்கு சபாநாயகராகிய உங்களுக்கும், பிரதம மந்திரிக்கும், கூட்டரசாங்கத்திற்கும் சிம்மாசன பிரசங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக அனைவருக்கும் இந்த சபையில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதற்கு உங்கள் அனுமதியை கோருகிறேன்.

இலங்கையின் சமீபகால வரலாற்றில் இடம்பெற்ற எங்களில் பலரும் மறந்து இருக்கும் ஒரு நிகழ்வை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 1948 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு அகன்று செல்லும் போது தங்களால் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட கறுப்பு இன ஆங்கில முதலாளித்துவவாத சக்திகளிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைத்து சென்று விட்டனர்.

இவர்களுக்கு சிங்கள மொழி தெரியாது. சிங்கள நாட்டையும், சிங்கள வரலாற்றையும், சிங்கள கலாசாரத்தையும் இவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை. அதனால், அன்று சிங்கள மொழி ஒரு சிலரினால் தான் பயன்படுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக சங்கைக்குரிய மகாசங்கத்தினரும், பெருமதிப்புக்குரிய சுதேச வைத்தியர்களும், அரசாங்கத்தின் அனுக்கிரகம் இன்றி அனாதை நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இவ்விதம் மக்கள் அடைந்து வந்த துன்ப, துயரத்தை பார்த்து வேதனையடைந்த, அன்றைய அரசாங்கத்தின் தூரதரிசன கொள்கையை கடைப்பிடித்து வந்த ஒரு நல்ல மனிதர் தனது முதலாளித்துவ கொள்கையையும், தனது சகாக்களையும் கைவிட்டு அரசாங்க கட்சியிலிருந்து வெளியேறி எதிர்காலம் எப்படி அமையுமோ என்று தெரியாது இருந்த போதிலும் திடமான கொள்கையுடன் துன்பம் அனுபவிக்கும் இந்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக 1951 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ம் திகதியன்று தனது அமைச்சர் பதவியை துறந்து எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

இந்த மகத்தான தீர்மானத்தை எடுத்த பாராட்டுக்குரிய பெரியவர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார். இந்த நந்நாளை இலங்கை வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தினம் என்று நான் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

இந்நாட்டு மக்களை ஜனநாயகவாதம் என்ற இருள் சூழ்ந்த நிழலை நோக்கி வழிநடத்திச் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில், இந்நாட்டு மக்களை சமதர்மவாத உலகை நோக்கி திசை திருப்பிய மகத்தான தீர்மானம் இந்த தினத்தில் தான் எடுக்கப்பட்டது என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அன்று எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியையும் அரசாங்கத்தையும் தமது அமைச்சர் பதவியையும் விட்டு வெளியேறிய நிகழ்வு எங்கள் நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தினம் மட்டுமன்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற அமைப்பு தூய்மையான கருப்பையில் உருவாகிய தினமும் அன்று தான்.

இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த 18 வருடங்களாக ஏனைய சமதர்மவாத சக்திகளுடன் இணைந்து ஒற்றுமையாக இந்நாட்டில் நசுக்கப்படும் மக்களை வெற்றிகரமான முறையில் சமதர்மவாதத்தை நோக்கி அழைத்து சென்றிருப்பதை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

இதனால் தான் எங்கள் நாட்டின் வரலாற்றில் ஒரு புது யுகத்தையும், புது மார்க்கத்தையும் ஏற்படுத்திய ஒரு முக்கிய தினமாக அன்றைய தினத்தை நான் கருதுகிறேன்.

அன்று எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று தெரியாத நிலையில் பண்டாரநாயக்க தனது கட்சியை துறந்து நசுக்கப்படும் மக்களுக்காக அடியெடுத்து வைத்த போது தனக்கு மனோதிடத்தை கொடுத்து பின்னணியிலிருந்து உதவியும், உறுதுணையும் புரிந்த றுகுணு பிரதேசத்தை சேர்ந்த ஒரு ஒரே மைந்தனைப்பற்றி பண்டாரநாயக்க சொன்ன கருத்தை அவருடைய வார்த்தையிலேயே சொல்ல விரும்புகிறேன். பண்டாரநாயக்க இவ்விதம் கூறியிருந்தார்.

"நான், அது என்னுடைய நிழல் என்றே நினைத்தேன். நான் திரும்பிப் பார்த்த போது அந்த நிழல் வேறுயாருமல்ல. அந்த நிழல் டி.ஏ. ராஜபக்ஷ என்பதை நான் அடையாளம் கண்டு கொண்டேன்."

எனது காலம் சென்ற தந்தையார் அன்று றுகுணு பிரதேசத்தில் பாராளு மன்ற உறுப்பினராக இருந்தார். அதனால், அவர் பண்டாரநாயக்கவின் பின்னால் றுகுணு பிரதேசத்தின் மக்களின் அபிலாஷைகளை எடுத்துச் சென்றார். ஆகவே, இலங்கையை இந்த புதிய பாதைக்கு இட்டுச் சென்று புதிய யுகத்தை ஏற்படுத்திய செயற் பாட்டின் உண்மையான பங்காளிகளாக றுகுணு பிரதேச மக்கள் இருந்தார்கள் என்பதை நான் பெருமையுடன் இங்கு கூற விரும்புகிறேன்.

அதனால் பெலியத்த தொகுதி மக்கள் அன்று உருவாகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பகால பங்குதாரர்களாக விளங்கினார்கள். அன்று எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நிழலாக விளங்கிய காலம் சென்ற டி.ஏ. ராஜபக்ஷவின் அன்புக்குரிய மகன் என்ற முறையில் 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் உறுப்பினராக இங்கு உரையாற்றுகிறேன்.

இந்நாட்டு வரலாற்றை ஒரு புதிய யுகத்தை நோக்கி வழிநடத்திச் செல்லும் இந்த மாபெரும் செயற்பாட்டில் பெலியத்த மக்களும் பங்காளிகளாக இருப்பது பெருமைக்குரிய விடயமாகும். என்னை, இந்த பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பிய மக்களும், இந்த மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டில் பங்குதாரர்களாக விளங்குகிறார்கள்.

பெளத்த சாசனத்தையும், நாட்டையும் விடுவிப்பதற்காக நடத்தப்பட்ட வீரப் போராட்டத்தில் மாவீரரான துட்டகைமுனுவின் பின்னணியில் சென்ற கோத்தாம்பர என்ற மாவீரனின் பிறப்பிடமான நெட்டோல் பிட்டிய கிராமம், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியிலேயே இருக்கிறது.

இலங்கையில் பெளத்த தர்மம் அழிவை எதிர்நோக்கியிருந்த காலகட்டத்தில் பலபிட்டிய, பிந்த பாதிக்க ஸ்ரீ சரணங்கர தேரர் மலை நாட்டிலிருந்து கல்வி என்ற ஒளியை பரப்பிக் கொண்டிருந்த கட்டத்தில் தென்னிலங்கையில் கல்விச் செல்வத்தை விஸ்தரித்து வந்த சங்கைக்குரிய சிட்டினா மலுவே தம்மஜோதி தேரர் பிறந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிட்டினா கிராமமும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியிலேயே அமைந்திருக்கிறது.

செஸ்த் கவி மற்றும் வஸ் கவி ஆகியவற்றை தயாரிக்கும் வல்லமை பெற்றிருந்த கணக்கியல் நிபுணரான பத்தாயமே லேக்கம் என்பவர் மற்றும் பதிகம வீரசிங்க போன்ற கவிஞர்கள் வாதியசிங்க பதிகம ரத்னபால தேரர், வலிபட்டன் வில ஸ்ரீ தீபங்கர தேரர், கரத்தோட்ட தர்ம ராம மகாநாயக்க தேரர் போன்ற மாபெரும் கல்விமான்களும் பெலியத்த அருகிலுள்ள கிராமங்களில் தான் வாழ்ந்து புகழ் உச்சியில் அமர்ந்திருந்தார்கள்.

பெலியத்த தொகுதிக்கு அந்த பெயரை பெற்றுக்கொடுத்த பெலியத்தையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தையைப் பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

இங்குள்ள நாற்சந்திக்கு அருகிலுள்ள ஒரு ரம்மியமான நாளாந்த சந்தையுடன் அமைந்திருக்கும் பிரதேசத்தை ஒரு நகரமாக உருவாக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இன்று இது ஒரு நகரமாக தோற்றமளிக்கவில்லை. வெறுமனே சில கடைகளைக் கொண்ட பிரதேசமாக காட்சியளிக்கின்றது. ஒரு சிறந்த திட்டத்தை அமைத்து பெலியத்த ஒரு நவீன நகரமாக மாற்ற முடியுமானால், பெலியத்த மக்கள் அரசாங்கத்திற்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பார்கள்.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியில் பெருமளவு கடற் தொழிலாளர்கள் பெரும் வறுமை நிலையில் இருக்கிறார்கள், என்பதை இந்த சபைக்கு எடுத்துரைக்கிறேன்.

எனது தொகுதியில் தென்னிலங்கையின் பல முக்கிய கடற்தொழிலாளர் கிராமங்கள் அமைந்துள்ளன. மாவல்ல, குடாவல்ல ஆகிய சனத்தொகை மிக்க கிராமங்களைச் சேர்ந்த கடற்தொழிலாளர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைத்து கடலுடன் நாளாந்தம் போராட்டத்தை நடத்திக் கொண்டு, துயர் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி