ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 07
நந்தன வருடம் வைகாசி மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,MAY, 29, 2012
வரு. 80 இல. 126
 

ஹவ்லா நகர் தாக்குதல் குறித்து பாதுகாப்புச் சபை கடும் கண்டனம்

ஹவ்லா நகர் தாக்குதல் குறித்து பாதுகாப்புச் சபை கடும் கண்டனம்

கொபி அனான் சிரியா விரைவு

சிரியாவின் ஹவ்லா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 108 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஐ.நா. மற்றும் அரபு லீக் விசேட தூதுவர் கொபி அனான் நேற்று சிரியா விரைந்தார். இந்த தாக்குதலுக்கு ஐ. நா. பாதுகாப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஹவ்லா தாக்குதலில் 49 சிறுவர்கள் மற்றும் 34 பெண்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபை நேற்று முன்தினம் அவசர கூட்டத்தை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில், ‘அப்பாவி பொதுமக்கள் மீது இராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்துவது சர்வதேச சடடங்களை மீறும் செயலாகும்.

பாதுகாப்புச் சபையின் தீர்வுத் திட்டத்திற்கமைய சிரியாவில் யுத்த நிறுத்தத்தை அமுலுக்கு கொண்டுவர அரச படை பொதுமக்கள் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இதில் ஹவ்லா தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்புச் சபை தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் சிறுவர்கள், குழந்தைகள் சிவிலியன்கள் கொல்லப்பட்டதை அங்கிருக்கும் ஐ.நா. கண்காணிப்பாளர்களைக் கொண்டு உறுதி செய்ய முடிந்தது என்று பாதுகாப்புச் சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்போது சிரிய அரசுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைக் கொண்டு எச்சரிக்கப்படவேண்டும் என பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் பரிந்துரைத்தன. எனினும் அதற்கு ரஷ்யா இணங்கவில்லை. இதன்போது சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.நா. கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரொபர்ட் மூட் வீடீயோ கொன்பிரான்ஸ் மூலம் பாதுகாப்புச் சபைக்கு ஹவ்லா சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அதில் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் ஷெல் வீச்சு நடத்தப்பட்ட தற்கு தடயங்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன் பலர் கூரிய ஆயுதங்களாலும் நெருங்கிய இடைவெளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாலும் கொல்லப்பட்டதாக மூட் கூறினார்.

எனினும் இந்த தாக்குதல்களை ஆயுதம் ஏந்திய தீவிரவாதக் குழுக்களே நடத்தியதாக சிரிய அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி