ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 07
நந்தன வருடம் வைகாசி மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,MAY, 29, 2012
வரு. 80 இல. 126
 
உடபுஸ்ஸல்லாவ தோட்டத்தில் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு

உடபுஸ்ஸல்லாவ தோட்டத்தில் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு

தேயிலை தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தல்

கந்தப்பளை உடபுஸ்ஸல்லாவ பிளாண்டேசன் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பாக் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (28) காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த ஆறு மாத காலமாக மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலையை உடனடியாக திறக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியே இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரிய வருவதாவது; கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கந்தப்பளை பாக் தோட்ட தொழிற்சாலையை திருத்த வேலைகள் இருப்பதாக கூறி தற்காலிகமாக 15 நாட்களுக்கு தொழிற் சாலையை மூடுவதாக நிர்வாகம் கூறியுள்ளது. ஆனாலும் 15 நாட்களின் பின்பு தொழிற்சாலை திறக் கப்படாமல் இருக்கவே தொழிலாளர்கள் இது விடயம் தொடர்பாக வினவியுள்ளனர்.

இதன்போது, நிர்வாகம் முறையான பதில் ஒன்றை வழங்க மறுத்ததன் காரணமாக ஜனவரி மாதம் 17ம் திகதி பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அதன் போது, நிர்வாகம் மிக விரைவில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருவதாக கூறியதை அடுத்து, பணி பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளனர்.

ஆனால், ஆறு மாதங்கள் கடந்தும் இன்னும் தொழிற்சாலை திறக்கப்பட வில்லை. இதற்கு எதிர்ப்பை தெரிவித்தே நேற்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தொழிலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இன்று நாம் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றையே மேற்கொண்டுள்ளோம். இதற்கு முறையான பதில் கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கவே தீர்மானித்துள்ளோம். நிர்வாகம் இந்த தொழிற்சாலை நட்டத்தில் இயங்குவதாக கூறி திறப்பதாக தெரியவில்லை.

இந்த தொழிற்சாலை ஒருநாளும் நட்டமடைய வாய்ப்பில்லை. இங்கு ஒரு நாளைக்கு இருபத்தையாயிரம் கிலோ தேயிலை அடைக்கப்பட்டது. அதிலும் சிறந்த விலை இங்குள்ள தேயிலைக்கு கிடைத் துள்ளது. அப்படி இருக்கும் பொழுது எவ்வாறு நட்டமடையும். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என தொழி லாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் நிர்வாகத்திடம் தொடர்பு கொண்ட பொழுதும் எவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி