ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 07
நந்தன வருடம் வைகாசி மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,MAY, 29, 2012
வரு. 80 இல. 126
 
இலங்கையில் தெற்காசிய ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் பயிற்சி நிலையம்

இலங்கையில் தெற்காசிய ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் பயிற்சி நிலையம்

மீபேயில் நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் 587 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான தெற்காசிய பயிற்சி நிலையம் வெகுவிரைவில் இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்காக அனுமதி அமைச்சரவை வழங்கியிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தினகரனுக்கு தெரிவித்தார்.

தெற்காசிய நாடுகளில் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நிலையம் முதன் முதலில் இலங்கையிலேயே ஸ்தாபிக்கப்படவுள்ள நிலையில் மீபேயில் இப் பயிற்சி நிலையத்தினை நிறுவுவதற்கென அரசாங்கம் 587 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியிரு ப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

யுனெஸ்கோ அமைப்பின் கீழ் வரையறுக்கப்பட்டிருக்கும் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நிலையமாக இது இயங்குமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இப்பயிற்சி நிலையம் சார்க் பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களது மத்திய பயிற்சி நிலையமாக விளங்குமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் இது குறித்து மேலும்கூறுகையில் யுனெஸ்கோ அமைப்பின் நிறைவேற்றுக் குழுவின் ஓர் உறுப்பினர் என்ற வகையில் தெற்காசிய நாடுகளுக்கு ஆசிரிய பயிற்றுவிப்பாளர்க ளுக்கான பயிற்சி நிலையமொன்றின் அவசியம் குறித்து அந்த அமைப்பு வலியுறுத்தும் போது, அதனை இலங்கையில் ஸ்தாபிப்பது குறித்த யோசனையை நான் முன்வைத்திருந்தேன்.

தெற்காசியாவில் சனத்தொகை கூடிய ஏனைய நாடுகளும் இதற்கான கோரிக்கைகளை முன் வைத்திருந்த நிலையில் இலங்கைக்கே அதற்கான வாய்ப்பு கிட்டியிருந்தது. இந்நிலையத்தினை மீபேயில் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதுடன் அதற்கென 587 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கியுள்ளது.

இந் நிலையத்தில் உள்நாட்டு மற்றும் ஏனைய சார்க் நாடுகளில் ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிகள், கல்வி தொடர்பான ஆராய்ச்சிகள், அனுபவ பரிமாற்றங்கள், கலந்துரையாடல், பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் திகழும் முக்கிய மையமாக விளங்கும் எனவும் அமைச்சர் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி