லொக்கர்பி குண்டு தாக்குதல் குற்றவாளி அப்தல் பசட் அல் மெக்ராஹி லிபிய தலைநகர்
திரிபோலியில் நேற்று முன்தினம் காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் தனது
60 ஆவது வயதில் மரணமடைந்தார்.
கடந்த 1988 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த விமானத்திற்கு
லொக்கர்பியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 259 பேரை கொன்றது மற்றும் மேலும் 11 பேரை
கொலைசெய்த குற்றச்சாட்டில் மெக்ராஹிக்கு 2001 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டது.
இதன்படி ஸ்கொட்லாந்தில் சிறை அனுபவித்த மெக்ராஹி 2009 ஆம் ஆண்டு
மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். புற்றுநோயால் அவதிப்பட்டு வரும்
அவர் மூன்று மாதங்கள் மாத்திரமே உயிர் வாழ்வார் என அப்போது கூறப்பட்டது.
எவ்வாறாயினும் லொக்கர்பி குண்டு தாக்குதல் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று
வருவதோடு இந்த தாக்குதலில் மெக்ராஹி மாத்திரம் குற்றவாளி அல்ல என்று மேற்கு நாடுகள்
கூறி வருகின்றன. மெக்ராஹி லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி அரசில் உளவு பிரிவு
அதிகாரியாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.