ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஆகிர் பிறை 30
நந்தன வருடம் வைகாசி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,MAY, 22, 2012
வரு. 80 இல. 120
 

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யுமாறு மலையக மக்களுக்கு இ. தொ. கா. அழைப்பு

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யுமாறு மலையக மக்களுக்கு இ. தொ. கா. அழைப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள் எனவும் வேண்டுகோள்

மலையக வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மலையக மக்கள் நாடற்றவர்களாகவும் வாக்கற்றவர்களாகவும், சொல்லொண்ணா துயரங்களுக்கும், விபரிக்க முடியாத துன்பங்களுக்கும், இன்னும் பல்வேறு தொல்லைகளுக்கும் ஆளாகி வந்துள்ளார்கள். இதேவேளை, சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் மலையக மக்கள் இரு கூறுகளாக துண்டு போடப்பட்டார்கள்.

இதில் ஒரு பகுதியினரை இந்தியாவும், மற்றொரு பகுதியினரை இலங்கையும் ஏற்றுக்கொண்டன. இதனால் மலையக மக்களின் ஜீவாதார பிரச்சினைகள், வாக்குரிமை பிரச்சினைகள் முற்றுமுழுதாக தீர்க்கப்படவில்லை என இ.தொ.கா. நிர்வாகச் செயலாளர் வெ. ஜீவானந் தராஜா தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் வாக்களர்களாக பதிவு செய்வது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த நாட்டில் ஏற்பட்ட வன்முறைகள் கப்பல் சேவை தடைகள் ஆகியவற்றால் பெருந்தொகையானோர் இரண்டும் கெட்டான் நிலைக்கு உள்ளாகினார்கள். இந்த நாட்டில் நாடற்றவர்களாகவும், வாக்கற்றவர்களாகவும் இருக்கக்கூடாது என அமரர் செளமிய மூர்த்தி தொண்டமான் துணிந்து செயற்பட ஆரம்பித்தார்.

அவர் மேடைகளில் வெறுமனே போலி வாக்குறுதிகளை அள்ளி வீசவில்லை. பத்திரிகை அறிக்கைகள் மூலமாகவும், காலத்தையும் நேரத்தையும் விரையமாக்கவில்லை. ஆட்சிக்கு வந்த அரசோடு இணைந்து இந்த பிரச்சினைக்கு போராட்டம் இல்லாமலேயே தனிநபராக நின்று எம்மக்களுக்கு நாட்டுரிமையும், வாக்குரிமையும் பெற்றுக்கொடுத்தார். மலையக வரலாற்றில் இந்த சாதனை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

இது இவ்வாறிருக்க 1988 ஆம் ஆண்டு இந்த பிரச்சினைகள் யாவற்றுக்கும் முழுமையான தீர்வை ஏற்படுத்தினார். இதனால் தான் பிரதேச சபை, நகர சபை, நாடாளுமன்ற தேர்தல் தொகுதிகள் ஆகியவற்றின் தேர்தல்களில் எம்மக்கள் பெருவாரியான வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடக் கூடிய வாய்ப்பு கிட்டியது. இது மாத்திரம் அல்ல இந்த நாட்டின் அனைத்து துறைகளிலும் பல்வேறு வாய்ப்புகளை பெறுவதற்கு உரிமை உடையவர்களாக இருந்தார்கள். இதற்காக அமரர் தொண்மானுக்கு மலையக சமூகம் அன்றும், என்றும், இன்றும் நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளது.

தோட்டங்கள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னர் ஆங்கிலேயர்களின் நிறுவனங்களின் கீழ் இயங்கினர். குழந்தைகள் பிரசவமானதும் பகுதி கச்சேரிகளுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் பிறந்த தின சான்றிதழ்களை இலகுவாக பெறமுடிந்தது. தோட்டங்கள் அரசமயமாக்கிய பின்னர் தோட்ட நிர்வாகங்கள் முறையாக கைகொள்ளவில்லை. தோட்டப்புற மருத்துவமனைகளில் பிறந்த எத்தனையோ பிள்ளைகளின் பிறப்பு, திகதி விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

பெருந்தொகையானோர் கச்சேரிகளில் இவற்றை பெற முடியாமல் இருந்தனர். இதனால் அடையாள அட்டைக்கும் இதர ஆவணங்களுக்கும் தடுமாறியும் விட்டார்கள். இதையெல்லாவற்றையும் உத்தேசித்துதான் அமரர் தொண்டமான் சத்திய கடதாசி மூலமாக வாக்குரிமையை பெறுவதற்காக வழிசமைத்துக் கொடுத்தார்.

இதனை அடிப்படையாக கொண்டு மலையக மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கின்றது. மாகாண ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் வசிக்கும் மலையக மக்கள் குறிப்பாக இளைஞர், யுவதிகள் தங்கள் பெயர்களை காலதாமதமின்றி 2012 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இது விடயத்தில் அக்கறை செலுத்தாவிட்டால் கடந்த காலங்களில் நம் முன்னோர்கள் அனுபவித்த அதே கஷ்டங்களையும், நஷ்டங்களையும் எதிர்நோக்க நேரிடும். இந்த நாட்டில் தேசிய மட்டத்திலான பல்வேறு உரிமைகள் வசதிகள், வாய்ப்புகள் ஆகியவற்றை இழக்க நேரிடும். ஆகவே விவேகத்துடன் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு இ.தொ.கா. வலியுறுத்துகின்றது.

இன்று மலையகத்தில் உள்ள கிராம சேவகர்களை உரிய கவனம் செலுத்துமாறும் சமுதாயத்திற்கு செய்யக்கூடிய மாபெரும் கடமையென உணர்ந்து தவறாது செயற்படுமாறு இச்சமயத்தில் ஜீவானந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி