![]()
|
||
100 வருட வரலாற்றில் முதற் தடவை; தானிய ஏற்றுமதி10,000 மெ. தொ. சோளம் தாய்வான், கனடாவுக்கு இன்று ஏற்றுமதி
வெளிநாட்டிற்கு தானியம் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையின் முதற் கட்ட மாக 10,000 மெற்றித் தொன் சோளம் தாய்வான் மற்றும் கனடா நாடுகளுக்கு இன்று ஏற்றுமதி செய்யப் படுகின்றது. ஏற்றுமதிக்குப் பொருத்தமான தரம் வாய்ந்த அரிசியை உற்பத்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவ துடன் விரைவில் 20,000 மெற்றிக் தொன் சிவப்பு அரிசியைத் தென்னா பிரிக்காவுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். விவசாய திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு நூறு வருடங்கள் நிறைவடையும் நிலையில் இவ்வளவு காலமும் வெளிநாடுகளிலிருந்தே இலங்கைக்குத் தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அரசாங்கத்தின் காத்திரமான வேலைத் திட்டங்களின் பயனால் முதன் முறையாக தற்போது சோளம் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வெளிநாட்டுக்கு சோளம் ஏற்றுமதி செய்யும் செயற் திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்றுத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய எந்த உணவுப் பொருளையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கொள்கைத் திட்டமாகும். அதற்கிணங்க உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பல்வேறு செயற்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அதன் பயனாக எம்மால் அரிசியில் தன்னிறைவு காண முடிந்துள்ளது. சோளப் பயிர்ச் செய்கையைப் பொறுத்தவரை அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அதற்கான தனியான செயலணியொன்றை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தியது. தேசிய உற்பத்தியில் 25 வீதமாக சோளம் எமது தேவைக்குப் போதுமானது. தற்போது நூற்றுக்கு நூற்றிப் பத்து என்ற ரீதியில் சோளத்தில் நாம் தன்னிறைவு கண்டுள்ளோம். பெரும்பாலும் எமது விவசாயத் திட்டங்கள் தனியார் துறையை இணைத்துக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் சோளம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளும், தனியார் துறை ஒத்துழைப்புடனேயே மேற்கொள்ளப்படுகின்றன. 1,90,000 மெற்றிக் தொன் சோளமே எமது தேவையாக உள்ள நிலையில் 2,350,000 மெற்றிக் தொன் சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையான மழை வீழ்ச்சி உரிய காலத்தில் கிடைக்குமானால் உற்பத்தித் தொகை மேலும் அதிகரிக்கும் எனவும் பத்தாயிரம் மெற்றிக் தொன் ஏற்றுமதியே எமது இலக்கு எனவும் அமைச்சர் தெரிவித்தார். பெரிய வெங்காய உற்பத்தி பற்றி தெரிவித்த அமைச்சர் நாட்டின் தேவை 2,50,000 மெற்றிக் தொன்னாக உள்ள நிலையில் 90,000 மெற்றிக் தொன் மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனை 1,25,000 மெற்றிக் தொன்னாக இவ்வருடத்தில் அதிகரிப்பதே எமது இலக்காகும் என்றார். சின்ன வெங்காயம் எமது தேவைக்கேற்ப உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார். சோளம் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள வயம்ப டிரேட்ஸ் தலைவர் எஸ். எச். சாதிக்கீனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விளக்கினார். (ஸ) |
||
|
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். webmanager@lakehouse.lk |