புனர்வாழ்வு பெற்ற மூவர் காணாமல் போனதாக கூறப்படுவது பொய்
புனர்வாழ்வு பெற்ற மூவர் காணாமல் போனதாக
கூறப்படுவது பொய்
ஸாதிக் ஷிஹான்
புனர்வாழ்வு பெற்ற 3 முன்னாள் புலி உறுப்பினர்கள் காணாமல் போனதாக கூறப்படும் செய்தி
முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர்
தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
பத்தரமுல்லை புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்
சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் புலி உறுப்பினர்களை பெற்றோரிடம் கையளிக்கும் வைபவம் 2011ம் ஆண்டு ஒக்டோபர்
மாதம் முதலாம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவின் போது பிடிக்கப்பட்ட புகைப்படம் இந்து பத்திரிகையில்
பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த முல்லைத்தீவு அலம்பில் பிரதேச தாய் ஒருவர்
அந்த படத்தில் தனது மகனும் அவரது இரு நண்பர்களும் இருப்பதாக கூறிய செய்திகள்
பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேற்படி செய்தியை பிரசுரித்த ஹிந்து
பத்திரிகையின் நிருபரையும், தனது மகன் என கூறிய தாயாரையும் அழைத்து அலரிமாளிகையில்
நடைபெற்ற வீடியோ காட்சிகளையும், படங்களையும் மேற்படி இருவருக்கும் காண்பித்துள்ளார்.
குறிப்பிட்ட தாயார் சந்தேகித்த படத்தில் இருந்த இளைஞனின் நெற்றியையும், கண்களையும்
வைத்தே அவர் தனது மகன் என ஊகத்தின் அடிப்படையில் கூறியுள்ளார். வீடியோ காட்சிகளைப்
பார்த்த பிறகு அது தனது மகன் அல்ல என்பதை புனர்வாழ்வு நாயகத்தின் முன்னிலையில்
அந்தத் தயார் ஏற்றுக் கொண்டார். இதே வேளை 2008ம் ஆண்டு சரணடைந்த முன்னாள்
எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களின் பெயர் பட்டியலிலும் இவர்களது பெயர் புனர்வாழ்வு
ஆணையாளர் இடாப்பில் இல்லை எனவும் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி மேலும்
தெரிவித்தார்.