ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஆகிர் பிறை 30
நந்தன வருடம் வைகாசி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,MAY, 22, 2012
வரு. 80 இல. 120
 
பெருமையால் வந்த சிறுமை

பெருமையால் வந்த சிறுமை

கிரேக்கம் என்றால் மாவீரன் அலெக்சாண்டரின் உலகைக் கைப்பற்றும் வேட்கையும், ஒலிம்பிக் போட்டிகளும் தான் நினைவு க்கு வரும். ஆனால், அதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போய்க்கொண்டிருக்கிறது. உலக நாகரி கத்தின் பிறப்பிடம் என்று மார்தட்டிக் கொண்டிருந்த அந்த நாட்டின் இன்றைய நிலை கேலிக்குரியதாகவும் பரிதாபகர மாகவும் மாறிவிட்டது.

ஒலிம்பிக் தீப ஓட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி ஒலிம்பியா நகரில் கடந்த வாரம் நடந்தபோது அந்த நாட்டின் பெருமையையும் தாண்டிய கவலைகள் வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

ஒருபுறம், 2600 ஆண்டுப் பழமைவாய் ந்த ஹீரா ஆலயத்தில் தலைமைக் குருபத்தினியாக நடிகை மேனகாகி நடிக்கும் நிகழ்ச்சியை உலகின் பெரிய ஊடகங்கள் அனைத்தும் அந்தத் தருணத்தைப் படம்பிடிக்க, மறுபுறம் சலுகைகளை இழந்த, வேலையில்லாத மக்கள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தார்கள்.

தலைமை இல்லாமல் நிர்வாகம் ஸ்தம்பித்துக் கடந்தது. கிரேக்கத்தின் தலைமை என்கிற முள் கிரீடத்தை யார் ஏற்கப்போகிறார்கள் என்கிற குழப்பம் உலகையே ஆக்கிரமித்திருந்தது.

கிரேக்கத்துக்குப் பெருமையாக இருந்த அதே ஒலிம்பிக் போட்டிகள்தான் இந்த இழிநிலைக்கும் காரணமாகியிருக்கின்றன. பொருளாதார நிலையைப் பொறுத்தவரை இந்த நூற்றாண்டு, கிரேக்கத்துக்கு மகிழ்ச்சிகரமாகத்தான் தொடங்கியது. அதன் பிறகு தான் கிரேக்கம் தாமாகச் சென்று வலையில் சிக்கியது.

கடன் வாங்குவதும், வர்த்தகம் செய் வதும் எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக 2002 ஆம் ஆண்டில் தனது சொந்த நாணயமான டிராக்மாவைக் கைவிட்டுவிட்டு, யூரோவுக்குத் தாவியது. இதுதான் இப்போதைய பிரச்சினைக்கு அஸ்திவாரம்.

வரி ஏய்ப்பு அதிகரித்து, அரசு கஜானாவுக்கு வர வேண்டிய பணம் பதுக்கப்பட்டதால், நிர்வாகம் தள்ளாடத் தொடங்கியது. அந்த நேரத்தில்தான் நான்காண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் வந்தன. எப்போ தும் போல, ஒலிம்பிக் தீபத்தைப் பாது காத்து வழியனுப்பி வைக்கும் வேலை யுடன் நிற்காமல், போட்டிகளையே நடத்துவதற்கு கிரேக்கம் ஒப்புக் கொண்டிருந்தது.

செழிப்பான நிலையில் இருந்தபோது, ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல ஆடம் பர ஏற்பாடுகளுக்கு கிரேக்கம் திட்டமி ருந்தது. நிதி நெருக்கடிக்கான அறிகுறி கள் தெரிந்ததும் செலவுகளைக் குறைத் திருக்க வேண்டும். ஆனால், பெருமை என்கிற பெயரில் பட்ஜெட்டில் பெரும் பகுதியை ஒலிம்பிக் ஏற்பாடுகளுக்கும் கேளிக்கைகளுக்காகவும் செலவிட்டார்கள்.

அதன் பிறகு, கடன்கள் அதிகரிக்க, வட்டிக்கு மேல் வட்டி கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட செல்வச் செழிப்பில் மிதந்த கிரேக்கம் நெருக்கடியில் வீழ்ந்தது.

ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் உடலை கொடிய நோய் தாக்கினால் எப்படியிருக்கும்? அதுபோலத்தான் கிரேக்கத்துக்கு எமனாக வந்தது 2008 ஆம் ஆண்டுப் பொருளாதாரப் பெரு மந்தம் உலகையே ஆக்கிரமித்த பொரு ளாதார நெருக்கடி கிரேக்கத்தை மிகப் பலமாக அடித்துப் போட்டது. உதவுவ தாக உத்தரவாதம் அளித்திருந்தவர்களு க்கு, சொந்த நாட்டைக் காப்பாற்ற வேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட கிரேக்கம் தனித்துவிடப்பட்டது.

கிரேக்கத்தைக் காப்பாற்ற ஏற்கெனவே பல முயற்சி களை ஐரோப்பிய யூனியனும் யூரோ பிராந்தியமும் எடுத்துவிட்டன. அந்த நாட்டின் மீதான அக்கறை என்று சொல்வதைவிட, யூரோவுக்கும் ஐரோப் பிய யூனியனுக்கும் எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்கிற சுயநலம் தான் இதற்கு முக்கியக் காரணம். சர்வ தேசச் செலாவணி நிதியம், ஐரோப்பிய கூட்டமைப்பு வங்கி போன்றவை கடன் ஏற்பாடுகளைச் செய்தன.

அதிக வரி, ஓய்வூதியத்தைக் குறைக்க வேண்டும். விடுமுறைக்கால போனஸ் போன்ற தொழிலாளர் நலத் திட்டங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று நூற்றுக் கணக்கான விதிமுறைகளுடன்தான் இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

இன்னொரு சுற்று கடன்கள் வழங்குவதற்கும் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், கடன்கள் பெறுவதற்கான விதிமுறைகளுக்கு மக்கள் மத்தியில் உருவான எதிர்ப்பு, இப்போது அரசையே மாற்றும் அளவுக்கு வலுவடைந்திருக்கிறது.

பொருளாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்த புதிய ஜனநாயகக் கட்சியையும் பசோக் கட்சியையும் கிரேக்க மக்கள் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூக்கி எறிந்துவிட்டார்கள்.

மொத்தமுள்ள 300 நாடாளுமன்ற இடங்களில் வெறும் 58 இடங்கள்தான் புதிய ஜனநாயகக் கட்சிக்குக் கிடைத்தன. தனிப்பெருங் கட்சியாக வந்ததால், விதி முறைப்படி போனஸாக 50 இடங்கள் வழங்கப்பட்டன. பசோக் கட்சி 41 இடங்களையும், யாரும் எதிர்பார்க்காத தீவிர இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட சிரிஸ் கட்சி 52 இடங்களையும் கைப்பற்றியது.

கடன் வழங்குவதற்காக பன்னாட்டு நிதியமோ, ஐரோப்பிய யூனியனோ விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தும், கட்சி இது. ஆனால், வேறு என்ன செய்வது என்பதற்கான உறுதியான திட்டம் இந்தக் கட்சியிடம் இல்லை. இந்தச் சூழலில் கிரேக்கத்தை நம்பி வேறு யாரும் கடன் தரப் போவதில்லை என்பதுதான் உண்மை.

ஐரோப்பிய யூனியனும், பன்னாட்டு செலாவணி நிதியமும் விதிக்கும் கடன் விதிமுறைகளை ஏற்பது, யூரோவைக் கைவிட்டுவிட்டு புதிய வகையில் டிராக்மாவுக்கு மீண்டும் திரும்புவது, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது அல்லது எல்லாப் பெருமைகளையும் கைவிட்டுவிட்டு திவாலானதாக அறிவிப்பது என

அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டுமானால், முதலில் ஆட்சி அமைய வேண்டும். ஏதாவது இரு கட்சியோ அல்லது மூன்று கட்சிகளோ சேர்ந்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலையில், மூன்று பெரிய கட்சிகளும் நடத்திய பல சுற்றுப் பேச்சுக்கள் தோல்வியடைந்துவிட்டன. கடன் விதிமுறைகளுக்குக் கட்டுப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சிரிஸ் கட்சி, யூரோவுக்கு ஆதரவான வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர முடியாது என்று அறிவித்துவிட்டது.

பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி என வேதனைப்பட்டு வரும் கிரேக்கம், ஒரே மாதத்தில் இன்னொரு தேர்தலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்தான் இவையெல்லாம் ஆனால், அதைச் சந்திப்பதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதுதான் நிஜம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி