டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட்
வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்கான் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 190
ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு
194 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
பஞ்சாப் தலைவர் டேவிட் ஹசி 35 பந்துகளில் 65 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றிக்கு
முக்கிய காரணமாக இருந்தார். இந்த வெற்றி மூலம் அடுத்த சுற்றுக்கான நம்பிக்கையையும்
பஞ்சாப் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற
டெக்கான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ஷிகர் தவாண், பார்தீவ் படேல்
ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். பார்தீவ் 18 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த
தலைவர் சங்கக்கார ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். பின்னர் தவானுடன் கெமரூன் வயிட்
ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர்.
12 ஓவர்களில் டெக்கான் 100 ஓட்டங்களை எட்டியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய தவான்,
வயிட் இருவரும் அரைச்சதம் அடித்தனர். 17வது ஓவரின் கடைசிப் பந்தில் இந்த ஜோடி
பிரிந்தது. தவான் 50 பந்துகளில் 71 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கிரிஸ்டியன் தனது பங்குக்கு 10 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார்.
வயிட் 41 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள்
முடிவில் டெக்கான் அணி 4 விக்கெட்டுகளுக்கு 190 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய பஞ்சாப் அணியில் நிதின் சைனி 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் மன்திப் சிங் 28 ஓட்டங்களும், மார்ஷ் 11 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
சீரான இடைவெயில் விக்கெட்டுகள் விழுந்தன.
அசார் முகமது, தலைவர் டேவிட் ஹசி ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினர்.
எனினும் அசார் முகமது 20 பந்துகளில் 31 ஓட்டங்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர்
வந்த சிட்னிஸ் 11 ஓட்டங்கள், சாவ்லா 8 ஓட்டங்கள் ஆட்டமிழந்ததால் டெக்கான் வெற்றி
பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குர்கீரத் சிங், டேவிட் ஹசியுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். பந்துகள்
அவ்வப்போது எல்லைக் கோட்டைக் கடந்ததால் பஞ்சாப் இலக்கை நோக்கி முன்னேறியது.
கடைசி பந்தில் வெற்றி
கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
அந்த ஓவரில் முதல் பந்தில் ஹசி 2 ஓட்டங்களும், 2 வது பந்தில் ஒரு ஓட்டமும் எடுத்தார்.
3வது பந்தை சிக்ஸருக்கு தூக்கிய குர்கீரத் சிங் 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.
5வது பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனால் ஸ்கோர் சமநிலையை எட்டியது. கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட
நிலையில் அந்த பந்தில் பவுண்டரி அடித்து பஞ்சாபுக்கு வெற்றி தேடித்தந்தார் குர்கீரத்
சிங்.
ஹசி 35 பந்துகளில் 65 ஓட்டங்களுடனும் குர்கீரத் சிங் 12 பந்துகளில் 29
ஓட்டங்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். குர்கீரத் சிங் ஆட்டநாயகனாக
அறிவிக்கப்பட்டார்.