‘தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நேற்று (14.05.2012) ஆரம்பமானது. இதனையொட்டி சுகாதார
அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணிப்பாளர் டொக்டர் ரன்ஜித்
பட்டுவன்துடாவ, வவுனியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம். மகேந்திரன் ஆகியோர்
வழங்கிய தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை இன்று பிரசுரமாகின்றது.’
இலங்கை மக்களின் ஆரோக்கி யத்திற்கு நுளம்புகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
இந்த நிலைமை அண்மைக்காலம் முதல் தான் ஏற்பட்டிருக்கின்றது. நுளம்புகள் பெருகக்கூடிய
சூழல் அதிகரித்திருப்பதும், அவை பல்கிப் பெருகுவதுமே இந்நிலைமைக்கான பிரதான காரணம்.
பொதுவாக நுளம்புகள் தேங்கி நிற்கும் நீரில்தான் பல்கிப் பெருகு கின்றன. அந்த வகையில்
இந்நாட்டில் நுளம்புகள் பல்கிப் பெருகுவதற்குத் தேவையான சூழலும் வாய்ப்புகளும்
முன்பொரு போதுமே இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்திருக் கின்றது. இதனைப் பரவலாக
அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக கைவிடப்பட்ட பொலித் தீன்கள், சிலி சிலி உறைகள், டயர்கள், பிளாஸ்ரிக்
பொருட்கள், யோகட் கப்கள், தகர ரின்கள், உடைந்த மட்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள்,
இளநீர் குரும்பைகள் உள்ளிட்ட பல கழிவுப் பொருட்களும், வீட்டுக் கூரைப் பீலிகள்,
பூச்சாடிகள் உள்ளிட்ட பல வீட்டு பொருட்களும் நுளம்புகளின் பெருக்கத்திற்குப்
பெரிதும் துணைபுரிந்து வருகின்றன. இதனால்தான் நுளம்புகள் இலங்கையரின்
ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.
இந்த நிலைமையிலிருந்து இலங்கை யரை விடுவிப்பதற்கு பொதுமக்களின் முழுமையான
ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் மிக மிக இன்றியமை யாதது. இது இல்லாமல் நுளம்புகளின்
அச்சுறுத்தலிலிருந்து மக்களை விடுவிக்கவே முடியாது. இதனைக் கருத்தில் கொண்டுதான்
அரசாங்கம் அவ்வப்போது தேசிய நுளம்பு ஒழிப்பு வார வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தி
வருகின்றது.
இவ்வாரத்தின் போது நுளம்பு ஒழிப்புப் பணிகள் விரிவான அடிப் படையில்
முன்னெடுக்கப்படுகின்றன. கழிவுப் பொருட்களை முறையாக அகற்றுதல், இரசாயனப் புகை
விசுறல் உட்பட பல வேலைத்திட்டங்கள் அவற்றில் அடங்கும்.
இந்த வேலைத் திட்டத்தின்
ஊடாக நுளம்பு ஒழிப்பின் முக்கியத்துவமும், அவசியமும் மக்கள் மத்தியில் கொண்டு
செல்லப்படுகின்றது. அந்த வகையில்தான் இந்த வாரமும் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாகப்
பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
என்றாலும் தினமும் சுற்றாடலில் சேருகின்ற கழிவுப் பொருட்களை முறையாகவும், சீராகவும்
அகற்றி நீர் தேங்க முடியாதபடி வீட்டுப் பாவனைப் பொருட்களையும் பேணி சுற்றாடலை
சுத்தமாகவும், உலர் நிலையிலும் வைத்திருக்கும் போது நுளம்புப் பெருக்கம் பெரிதும்
குறைவடைந்துவிடும். ஆயினும் இதனைத் தொடராகச் செய்வதுதான் பெரும் சிரமமாக உள்ளது.
இதன் விளைவாகவே நுளம்புகள் பல்கிப்பெருகி வருகின்றன. இவ்வாறு பெருகுகின்ற
நுளம்புகளில் பல வகை கள் உள்ளன. அவற்றில் காணப்படும் ஈடிஸ் எஜிப்டைய், ஈடிஸ்
அல்போபிக் டஸ், அனோபிளஸ் கியூலெக்ஸ் போன்ற சில வகை நுளம்பினங்கள் தான் மனிதனின்
ஆரோக்கியத்திற்குக் கெடுதல்களை ஏற்படுத்தக் கூடியவையாக விளங்குகின்றன.
இவ்வாறான நுளம்புகளால் தான் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா, ஜப்பனிஸ் என்ஸபலைடிஸ்
மூளைக் காய்ச்சல், யானைக்கால் நோய் போன்ற நோய்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
என்றாலும் டெங்கு நோய் தான் அண்மைக்காலம் முதல் இந்நாட்டில் பொது சுகாதாரப்
பிரச்சினையாக மாறி இருக்கின்றது. அதேநேரம் 1910 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டு
வரையான காலப்பகுதியில் மலேரியா வும் இந்நாட்டில் பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறி
இருந்ததும் மறக்க முடியாத உண்மையாகும்.
அந்தவகையில் இன்றைய கால கட்டத்தில் இலங்கையருக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிக்
கொண்டிருக் கின்ற டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் குறித்து இச்சந்தர்ப்பத்தில்
கவனம் செலுத்துவது பெரிதும் பயன் மிக்கதாக இருக்கும்.
அதாவது டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகள் பார்ப்பதற்கு மிகவும் சிறியவையாக
இருக்கும். அதன் உடல் கறுப்பாக காணப்படும். எனினும் அவற்றின் கால்களில் வெள்ளை நிற
வலயங்களையும், புள்ளிகளையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
இந்த நுளம்புகள் சுற்றாடலில் கைவிடப்பட்டிருக்கும் பொருட்களில் தேங்கி நிற்கும்
தெளிந்த நீரிலேயே பல்கிப் பெருகக் கூடியவையாக விளங்குகின்றன. என்றாலும் அவை மழை
நீரிலும், சாக்கடை நீரிலும் முட்டையிட்டு பெருகுவதையும் நுண்ணுயிரியல் மருத்துவ
நிபுணர்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். அத்தோடு கிழக்கு மாகாணத்தில் 40
வீதமான டெங்கு நுளம்புகள் அங்குள்ள கிணறுகளில் தான் பெருகு வதாகவும் அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இந்த டெங்கு நுளம்புகளா னது ஒரே தடவையில் 100 - 200 முட்டைகளையிடும்.
அவற்றின் முட்டைகள் கறுப்பு நிற மாக இருக்கும். இந்நுளம்புகள் 2 - 4 வாரங்கள் தான்
உயிர்வாழும். ஆனால் தன் வாழ்வுக் காலத்தில் மூன்று அல்லது நான்கு தடவைகள் தான் அவை
முட்டையிடும்.
டெங்கு நுளம்புகள் ஒரு தடவை முட்டையிடுவதற்காக பல தடவைகள் மனிதனைக் குத்தி இரத்தம்
குடிக்கும். ஆனால் ஏனைய நுளம்புகள் அப்படியானவை அல்ல. டெங்கு நுளம்புகள் மனித
இரத்தத்தைப் பெரிதும் விரும்பிக் குடிக்கக் கூடிய பண்பைக் கொண்டவையாகும்.
இந்நுளம்புகளின் முட்டைகள் ஒட்டும் தன்மை கொண்டவை. அவை வரட்சி கால நிலையிலும் 6
முதல் 12 மாதங்கள் வரை உயிர்ப்புத் தன்மையுடன் அழிவுறாமல் இருக்கும். அதேநேரம்
டெங்கு நுளம்புகளின் குடம்பிகள் ‘எஸ்’ வடிவில் வளைந்து, நெளிந்து நீரில் பயணிக்கும்.
மேலும் டெங்கு நுளம்புகள் காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையும், மாலையில்
4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையுமே மனிதனைக் குத்துவதாக ஏற்கனவே நம்பப்பட்டது.
ஆனால், அவை இப்போது இரவு பத்து, பதினொரு மணி நேரம் வரையும் குத்துவதும் ஆய்வுகள்
மூலம் கண்டறியப்பட்டி ருக்கின்றன.
இதன்படி இந்த டெங்கு நுளம்புகள் தனது வாழ்க்கை அமைப்பிலும், நடத்தையிலும் பல
மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது என்பது நன்கு தெளிவாகின்றது. அதனால்தான் அவற்றின்
அச்சுறுத்தலும் அதிகரித்துச் செல்லுகின்றது.
டெங்கானது உயிராபத்து அச்சுறுத் தல் மிக்க ஒரு நோய். அதனால் அதனை ஆரம்பத்திலேயே இனம்
கண்டால் முழுமையாகக் குணப்படுத்தி விடலாம். இது முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய ஒரு
நோய்.
பொதுவாக ஒருவர் டெங்கு நோய்க்கு உள்ளானால் அவரிடம் பின்வரும் குணாம்சங்களை
அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இரண்டு மூன்று நாட்களுக்குக் கடும் காய்ச்சல்,
தலைவலி, தசைநார் வலி, மூட்டுவலி, குமட்டல், வாந்தி பேதி போன்றவாறான அறிகுறிகளை
குறிப் பாக அவதானிக்கலாம்.
என்றாலும் அது டெங்கா? என்பதை இரத்தப் பரிசோதனை மூலமே
சரியாக உறுதிப்படுத்த முடியும். டெங்கு நோய்க்கு உள்ளாகி இருப்பவரின் இரத்தத்தில்
இரத்தச் சிறுதட்டு குறைவடைந்து காணப்படும். அதுவே இந்நோயின் பிரதான பண்பு.
இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்தத் தவறினால், இந்த அறிகுறிகளுக்கு மேலதிகமாக
மலம் கபில நிறமாகவோ, கறுப்பு நிறமாகவோ வெளியாதல், உடலின் மிதமான பகுதிகளில் சிவப்பு
புள்ளிகள் தென்படல், பற்கள், முரசு, சமிபாட்டுத் தொகுதி என்பவற்றின் ஊடாக இரத்தக்
கசிவு ஏற்படல், அதிர்ச்சி நிலைமையும் உருவாதல் போன்ற தீவிர அறிகுறிகளும் வெளிப்படும்.
இவை உயிராபத்து மிக்க குணாம்சங்களாகும்.
அதன் காரணத்தினால் டெங்குக் காய்ச்சலுக்குரிய ஆரம்ப அறிகுறி களைக் கொண்டிருப்பவர்கள்
தாமதி யாது மருத்துவ நிபுணர்களை அணுகி உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் இந்நோய் குறித்து அசமந்தப் போக்கில் நடந்து கொண்டால் அது உயிராபத்தையே
ஏற்படுத்தும். இதனை ஒவ்வொருவரும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
இந்த டெங்கு நோய் காரணமாக இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களிலும் (ஜனவரி - ஏப்ரல்)
51 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். இவர்களில் 22 பேர் கொழும்பு மாவட்டத்தைச்
சேர்ந்தவர்களாவர்.
என்றாலும் கம்பஹா மாவட்டத்தில் 7 பேரும், கண்டி மாவட்டத்தில் 5
பேரும், களுத்துறை மாவட்டத்தில் 3 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 4 பேரும், காலி
மாவட்டத்தில் 2 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 2 பேரும், மாத்தறை, மாத்தளை,
கேகாலை, ஹம்பந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் படி நால்வரும் டெங்கு நோய்
காரணமாக இக்காலப்பகுதியில் உயிரிழந் திருக்கின்றார்கள்.
அதேநேரம் 11 ஆயிரத்து 262
பேர் இந் நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் மேல்
மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
டெங்கு நோய் இவ்வருடத் தின் ஜனவரி மாதத்தில் அதிகரித்துக் காணப்பட்டா லும் அதனைத்
தொடர்ந்து வந்த மாதங்களில் அந்த அதிகரிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு வந்தது என்றாலும்,
ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதி முதல் டெங்கு நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில்
அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது அடுத்துவரும் இரண்டு, மூன்று மாதங்களில் தீவிர
நிலையை நோக்கி நகரலாம்.
அதனைத் தவிர்க்கும் நோக்கிலேயே தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம்
பிரகடனப்படுத்தப்பட் டிருக்கின்றது என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
குறிப்பிட்டிருக்கின்றார்.
அதேநேரம் நுளம்பு கட்டுப்பாட்டு சட்டத்தை கடுமையாக செயற்படுத்துமாறும் அமைச்சர்
அதிகாரிகளுக்குக் கூறியுள்ளார். இச்சட்டத்தின் கீழ் நுளம்பு பெருகக்கூடிய சூழலைக்
கொண்டிருப்பவருக்கு எதிராக ஐம்பதினாயிரம் ரூபா அபராதமும், ஆறு மாத கால
சிறைத்தண்டனையை யும் வழங்க முடியும்.
ஆகவே, தமதும், தமக்கு அருகில் வசிப்பவர்களதும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு
சுற்றாடலை சுத்தமாகவும், உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் விசேட கவனம்
செலுத்த வேண்டும். அதுவே நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும்,
டெங்கு உள்ளிட்ட நுளம்பு நோய்களைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவும்.