ரொக்பெல்லர் என்ற அமெரிக்கக் கோடீஸ்வரர் ஒரு தடவை, விமானத்தில் பயணம்
செய்துகொண்டிருந்தார். அப்பொழுது அவர் மிகவும் முதுமைப் பருவமடைந்தவராக இருந்தார்.
ரொக்பெல்லருக்கு அருகில் அமர்ந்திருந்த ஓர் இளைஞன் அவருடன் உரையாடிக்
கொண்டிருந்தான். ‘ஐயா, தாங்கள் போதுமான அளவு செல்வம் சேர்த்துவிட்டீர்கள்.
உங்களுக்கு எந்தவிதக் கவலையோ தொல்லையோ இருக்க முடியாது. இவ்வளவு முதுமையிலும்
சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கிaர்களே இது தேவைதானா? ஓய்வு எடுத்துக்கொண்டு
ஓரிடத்திலிருந்து அமைதியாகக் காலத்தை ஓட்டலாம் அல்லவா?’ என்றான்.
‘நல்ல கேள்வி’ என்றார் ரொக்பெல்லர் சிரித்துக் கொண்டே. ‘தம்பி இப்போது நாம் பயணம்
செய்து கொண்டிருக்கிறோமே, இந்த விமானத்தைத் தான் வான உச்சிக்குக் கொண்டுவந்து
விட்டீர்களே! இனி இந்த இயந்திரங்களை நிறுத்திவிட்டால் என்ன?’
‘அது எப்படி முடியும்? இயந்திரங்களை நிறுத்திவிட்டால் நமது விமானம்
விபத்துக்குள்ளாகி தரையில் மோதிவிடுமே! நாம் சாகவேண்டி அல்லவா நேரிடும்’ என்று
பரபரப்புடன் பதில் சொன்னான் இளைஞன்.
ரொக்பெல்லர் சிரித்துக் கொண்டே ‘தம்பி, ‘விபத்து’ என்ற சொல் காதில் விழுந்த உடனே நீ
எவ்வாறு பயப்படுகிறாயோ அதுபோல் நமது வாழ்க்கையும் ஒரு விமானப் பயணம் போன்றதுதான்.
நாம் என்று உழைப்பை நிறுத்திவிடுகிறோமோ அன்றே நமது உடலும் மனமும் சீர்கெட்டுவிடும்.
நமது மனத்தை விட்டு மகிழ்ச்சி பறந்துவிடும். நமது உடலைவிட்டு ஆரோக்கியம் ஓடிப்
போய்விடும். எந்த நிமிடமும் மரணம் என்ற விபத்துக்கு நாம் உள்ளாக நேரிடும்’ என்று
சொன்னார் ரொக்பெல்லர்.