ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஊலா பிறை 28
நந்தன வருடம் சித்திரை மாதம் 09ம் திகதி சனிக்கிழமை
SATURDAY ,APRIL, 21, 2012
வரு. 80 இல. 94
 
கடல் - புவியின் தோல்!

கடல் - புவியின் தோல்!

நாம் வாழுகின்ற இந்தப் புவிக்கோளின் பெரும் பகுதி, நீரால் சூழப்பட்டு இருக்கிறது. நிலத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்து ஏராளமான செய்திகளைத் தெரிந்து கொண்டு உள்ளோம். ஆனால், கடலைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து கொண்டு இருக்கிறோம்?

மண்ணில் எத்தனை விந்தைகள் உள்ளனவோ, அதைவிடக் கூடுதலாக ஆழ்கடலுக்கு உள்ளே விந்தைகள் நிறைந்து உள்ளன. கடல்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள், கடலைவிட அதிகம் என்றே சொல்லலாம்.

உலக நாடுகளின் மொத்தக் கடற்கரை நீளம் 3,15,000 மைல்கள் (ஏறத்தாழ 5,50,000 கிலோ மீற்றர்) ஆகும். இந்தியாவின் கடற்கரை 7,517 கிலோ மீற்றர்கள் நீளம் கொண்டது. அதில், தமிழ்நாட்டின் கடற்கரை 997 கிலோ மீற்றர்கள் நீளம்.

கடலின் எடை

கடலில் உள்ள தண்ணீரின் மொத்த எடை 1,450,00,00,00,00,000,0000 மெட்ரிக் தொன் ஆகும். எப்படி வாசிப்பது என்று மலைப்பாக இருக்கின்றதா? ஆயினும் இது, புவியின் மொத்த எடையில் ஒரு விழுக்காடு கூட இல்லை. வெறும் 0.022 விழுக்காடுதான்.

என்ன வியப்பாக இருக்கிறதா? அதுதான் உண்மை. உலகின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கடல் என்றாலும், அந்தக் கடலும், நிலத்துக்கு மேலேதானே அமைந்து உள்ளது? பூமியின் குறுக்குவெட்டு நீளம் சுமார் 12,700 கிலோ மீற்றர்கள் ஆகும். அதில் மேல் பரப்பில், சுமார் ஐந்து முதல் பத்து கிலோ மீற்றர் ஆழத்துக்கு மட்டுமே கடல் நீர் இருக்கின்றது. நிலத்தில் உள்ள கற்கள், பாறைகள், மலைகள், மணலின் எடைதானே நீரை விட அதிகம்? எனவே, நாம் நேரில் பார்க்கின்ற கடலின் தோற்றம் நம்மை அச்சுறுத்தினாலும், ஒட்டுமொத்த உலகில், கடல் என்பது ஒரு விழுக்காடு கூட இல்லை. நமது உடலை மூடி உள்ள தோல் போல், இந்த உலகை கடல் மூடிக்கொண்டு இருக்கிறது அவ்வளவுதான். அதாவது, உட்புறம் நெருப்புக் குழம்பாகக் கொதித்துச் சுழன்றுகொண்டு இருக்கின்ற இந்தப்புவியின் மேற்பரப்பைக் குளிர்விக்கின்ற ஒரு குளிர்விப்பானாகக் கடல் அமைந்து இருக்கின்றது. எனவே, அதை, புவியின் தோல் என்றே அழைக்கலாம்.

பசிபிக் பெருங்கடல்

பசுபிக் பெருங்கடல், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குக் கிழக்கே, அமெரிக்காவுக்கு மேற்கே, இடைப்பட்ட பகுதியில் பரந்து விரிந்து உள்ளது. உலகில் தற்போது உள்ள அனைத்து நாடுகளின் நிலப்பரப்பையும், பசுபிக் கடலுக்கு உள்ளே வைத்தாலும், அதற்கு மேலும் ஆபிரிக்கக் கண்டத்தின் நிலப்பரப்பை வைக்கின்ற அளவுக்கு பசுபிக் கடல் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. சில இடங்களில் பசுபிக் கடலின் அகலம் 16,000 கிலோ மீற்றர்கள் ஆகும். ஆயினும், இக்கடலில் தீவுகள் குறைவு. மிகச் சிறிய தீவுகளே உள்ளன.

இந்தப் புவி, கிழக்கு நோக்கிச் சுழல்வதால், காற்று மேற்கு நோக்கி வீசும். இடையில் தடுப்புகள் ஏதும் இல்லாததால், பசுபிக் கடலில் காற்றின் வேகம் அதிகம். எனவே கிழக்கு நோக்கிக் கப்பலைச் செலுத்துவது கடினம்.

தென் பசுபிக் பகுதியில், மிகப்பெரிய அலைகள் உருவாகின்றன. உலகின் பெரும்பாலான சுனாமி தாக்குதல்கள், பசுபிக் பெருங்கடல் பகுதியில்தான் ஏற்படுகின்றன. அக்கடலுக்கு உள்ளே ஏற்படுகின்ற நில நடுக்கங்களால் பொங்குகின்ற அலைகள், ஜப்பானியக் கடற்கரையைத் தான் தாக்குகின்றன. எனவேதான், கடலின் கோர விளையாட்டுக்கு அடிக்கடி இலக்கு ஆகிறது ஜப்பான்.

அந்தாட்டிகா பகுதியில் இருந்து பிரிந்து வருகின்ற பனிப் பாறைகள், பசுபிக் கடலில் மிதந்து கொண்டே பல இடங்களுக்கு நகர்ந்து செல்கின்றன. ஆனாலும், உருகுவது இல்லை. எட்டு மாதங்கள் வரையிலும் உருகாமல் அப்படியே மிதந்து கொண்டே நியூசிலாந்து வரையிலும் வருகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி