ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஊலா பிறை 28
நந்தன வருடம் சித்திரை மாதம் 09ம் திகதி சனிக்கிழமை
SATURDAY ,APRIL, 21, 2012
வரு. 80 இல. 94
 
கூடங்குளம் அணு மின் நிலையம் அமைப்பதற்கு எதிராக இலங்கை ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை

கூடங்குளம் அணு மின் நிலையம் அமைப்பதற்கு எதிராக இலங்கை ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் வாக்கெடுப்பின் பின்னர் இலங்கையானது இந்தியாவின் மீது பதில் தாக்குதல் நடத்துவதாக வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எதுவித உண்மையும் கிடையாதென இலங்கை அணுசக்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

கடந்த 10 ஆம் திகதி டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையில் இலங்கையின் மின் சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டர்லி சம்பிக்க ரணவக்க இந்தியாவின் கூடங்குளம் அணு உலை காரணமாக யப்பானின் புகுஷிமா போன்ற அனர்த்தமொன்று ஏற்படும் பட்சத்தில் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையுமென கருத்து தெரிவித்திருந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.

அமைச்சர் ரணவக்க எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இதுபற்றி சர்வதேச அணுசக்தி முகவரிடம் தெரிவிக்க தயாராகி வருவதாகவும் டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை செய்தியாளரிடம் தெரிவித்ததாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான தவறான தகவல் ஒன்றினை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். இதன் மூலம் இரு நாடுகளினதும் உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலை தொடர்பாக இலங்கை கொண்டுள்ள நிலைக்கும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரிலே இந்தியாவின் வாக்களிப்பிற்கும் எதுவித தொடர்பும் கிடையாது.

இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளும் சர்வதேச அணுசக்தி முகவரில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளாகும். சர்வதேச அணுசக்தி முகவரானது அணு தொழில்நுட்பத்தை அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு அர்ப்பணித்துள்ளது.

அணு சக்தியை மின்சார உற்பத்திக்காக பயன்படுத்துவது தொடர்பாக இலங்கையானது பூரண விளக்கத்துடன் உள்ளது.

தமது மின்சார தேவையினை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அணு சக்தியை பயன்படுத்துவதற்கு இந்தியாவிற்கு பூரண அதிகாரம் உள்ளது. இலங்கையானது ஒருபோதும் இந்திய பூமியில் அணு உலைகளை அமைப்பதற்கு எதிராக ஒருபோதும் கருத்துத் தெரிவித்ததில்லை.

அணு சக்தியை தமது தேவைகளுக்காகப் பயன்படுத்துவது இந்தியாவின் இறைமையாகும். எனினும் இந்திய மக்களில் ஒரு பிரிவினர் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை அணுசக்தி அதிகார சபைக்கு இந்நாட்டு மக்களையும், சுற்றுச் சூழலையும் அணு கதிர் வீச்சுக்களிலிருந்து பாதுகாக்கும் உரிமை கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமானது அணு சக்தி அதிகார சபையின் ஊடாக திடீர் கதிர்வீச்சு அனர்த்தங்கள் தொடர்பாக செயற்பட வேண்டிய விதம் பற்றி பூரண விளக்கத்துடன் உள்ளது. அவ்வாறானதொரு நிகழ்ச்சித் திட்டம் ஒன்றினை தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ளது.

மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தை பலப்படுத்துவதற்காக சர்வதேச அணு சக்தி முகவரின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் சர்வதேச அணு சக்தி முகவரினால் கதிர் வீச்சு பற்றி முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கான எச்சரிக்கை முறைமை ஒன்றினை நிறுவுவதற்காக ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகவரின் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திணைக்களத்தின் ஊடாக இந்த உபகரணங்கள் இங்கு அனுப்பப்பட உள்ளன.

அமைச்சர் பாட்டர்லி சம்பிக்க ரணவக்க 2010 ஆம் ஆண்டிலே சர்வதேச அணுசக்தி முகவரின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். அதன்போது இந்திய தூதுக் குழுவினருடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அவர் கலந்துகொண்டார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்திய அணுசக்தி ஆணைக் குழுவின் தலைவருடன் கூடங்குளம் அணு உலையை பார்வையிட சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இதன் அடிப்படையில் இலங்கை கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் எதுவித உண்மையும் கிடையாது என்பது தெளிவாகின்றது.

ஒரு அணு உலையானது பல்வேறு ஆய்வுகளின் பின்னர் மிகவும் அவதானத்துடன் பாரிய கண்காணிப்புக்களுக்கு மத்தியில் இனங்காணப்படும் ஓர் இடத்திலேயே நிறுவப்படும். நாடுகளின் எல்லைகளிலும் மாநிலங்களின் எல்லைப் பிரதேசங்களிலும் அணு உலைகளை நிறுவுவது என்பது புதிதல்ல.

அண்மையில் இடம்பெற்ற புகுஷிமா அனர்த்தச் சம்பவம் மற்றும் 1986 ஆம் ஆண்டிலே இடம்பெற்ற சர்னொபில் அனர்த்ச் சம்பவம் என்பவற்றினை சர்வதேச அணுசக்தி முகவரின் தலையீட்டின் மூலம் முகாமைப்படுத்தப்பட்ட விதம் பற்றி முழு உலகும் நன்கறியும்.

அணு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி முகவரின் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கைகள் பற்றி அனைவரும் அறிவர். அது தொடர்பான 03 உடன்படிக்கைகள் இதனுடன் தொடர்புபடுகின்றன. அவையாவன அணுசக்தி பாதுகாப்பு உடன்படிக்கை, அணு அனர்த்தமொன்றின் போது உதவி வழங்கும் உடன்படிக்கை மற்றும் அணு அனர்த்தம் தொடர்பாக உடனடி அறிவித்தல் பற்றிய உடன்படிக்கை என்பனவே அவையாகும்.

அணுசக்தி பாதுகாப்பு உடன் படிக்கையின் 07 ஆவது பிரிவின் பிரகாரம் அணு உலைகளை நிறுவியுள்ள நாடுகள் அணு உலைகள் தொடர்பாக முன் ஒழுங்குபடுத்தல் முறைமை ஒன்றினை அமைத்தல் வேண்டும். அதன் 16 ஆவது பிரிவின் பிரகாரம் அணு அனர்த்தமொன்று ஏற்படும் பட்சத்தில் அதன் பின்னைய விளைவுகள் பற்றிய முகாமைத்துவம் தொடர்பாக அவசர அனர்த்த நிகழ்ச்சித் திட்டம் ஒன்றினை நடைமுறைப் படுத்தல் வேண்டும்.

அணு அனர்த்தம் ஒன்றின் போது உதவியினைப் பெற்றுக் கொள்ளும் உடன்படிக்கையின் 01 ஆவது பிரிவின் பிரகாரம் சர்வதேச அணுசக்தி முகவரின் அங்கத்துவ நாடுகள் சர்வதேச அணுசக்தி முகவருக்கு ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும். இதன் நோக்கமாக அமைவது அணு அனர்த்தங்கள் மூலம் ஏற்படக் கூடிய பின்விளைவுகளை குறைத்துக்கொள்ளல், மக்களின் உயிர் மற்றும் சொத்துக்கள் என்பவற்றினை பாதுகாத்தல் என்பனவாகும். இதன் பொருட்டு அங்கத்துவ நாடுகள் இருதரப்பு உடன்படிக்கைகளை செய்துகொள்ள முடியும்.

அணு அனர்த்தம் ஒன்றின் போது உதவியினைப் பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கையின் 02 ஆவது பிரிவின் பிரகாரம் அங்கத்துவ நாடுகளுக்கு அந்நாட்டினுள் அல்லது அந்நாட்டின் எல்லைக்கு வெளியே ஏற்படக் கூடிய அனர்த்தம் ஒன்றின் போது அனர்த்த முகாமைத்துவத்திற்காக நேரடியாகவோ அல்லது சர்வதேச அணுசக்தி முகவரின் தலையீட்டுடன் பிற சர்வதேச நிறுவனங்களிடம் இருந்தும் உதவிகோர முடியும்.

இந்த உடன்படிக்கைகளின் நோக் கமாக அமைவது அணு உலைகளை இயக்கும் அல்லது நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கும் நாட்டின் பொது மக்களுக்கு அல்லது அதை அண்டிய நாடு ஒன்றைச் சேர்ந்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகும்.

இந்தியாவிலே தற்போது அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றினை எதிர்வரும் காலங்களில் செயற்படுத்த உள்ளமையால் இலங்கைக்கு செய்யக்கூடிய விடயம் யாதெனில் நாம் மேலே குறிப்பிட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளல் மற்றும் அவசர கதிர்வீச்சு அனர்த்த நிகழ்ச்சித் திட்டம் ஒன்றிற்கு ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளல் என்பனவாகும்.

இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் சர்வதேச அணுசக்தி முகவரினால் இலங்கை அணுசக்தி அதிகார சபைக்கு இந்தியாவுடன் அணு அனர்த்த நிகழ்ச்சித் திட்டம் ஒன்றினைத் திட்டமிடல் மற்றும் அணு அனர்த்த முகாமைத்துவம் பற்றிய இருதரப்பு உடன்படிக்கை ஒன்றிலே கைச்சாத்திடுவதற்கான சாத்திய வளம் பற்றி நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணுசக்தி அதிகார சபை இது தொடர்பாக வெளியுறவு அமைச்சிடம் அறிவித்ததுடன் அதன் பின்னர் 2010 ஏப்ரல் மாதம் அணுசக்தி விடயம் தமது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டர்லி சம்பிக்க ரணவக்க அது தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு அணுசக்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன் அடிப்படையில் அணுசக்தி அதிகார சபையானது இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியுறவு அமைச்சிற்கு ஒப்பந்த வரைவு ஒன்றினை வழங்கியிருந்தது. எனினும் அதற்கு இந்திய தரப்பினரிடமிருந்து பதிலேதும் கிடைக்கவில்லை. எனினும் அது தொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றினை செய்துகொள்வ தற்கான வாய்ப்பு இன்னமும் காணப்பட்டே வருகின்றது.

இந்நிலையில் வெளிநாட்டு ஊடகங்கள் இவ்வாறானதொரு சிறிய விடயத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் வாக் களிப்புடன் ஒப்பிட்டு பெரிதுபடுத்தும் விடயமானது கவலைக்குரிய ஒன்றாகும். அதன்மூலம் அவ்வாறான ஊடகங்கள் சமூகத்திலே அச்சத்தையும் சந்தே கத்தையும் தோற்றுவிப்பதற்கு மேற் கொள்ளும் முயற்சியானது துரதிஷ்ட வசமானதாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி